கிருபா சத்தியநாதன்

From Tamil Wiki
Photo courtesy: Hamletram.blogspot.com

கிருபா சத்தியநாதன் (கிருபாபாய் சத்தியநாதன்) (1862–1894) தமிழ்ப்பெண்களின் வாழ்க்கையை பற்றி ஆங்கிலத்தில் நாவல்களை எழுதியவர். இவரது நாவல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டன. ஆகவே சில ஆய்வாளர் இவரை தமிழ் நாவலாசிரியர்களின் பட்டியலில் சேர்ப்பதுண்டு. இவர் Kamala- A Hindu life மற்றும் Saguna-A Christian life என்னும் இரு நாவல்களை எழுதியிருக்கிறார்

பிறப்பு, கல்வி

கிருபாபாய் சத்தியநாதன் 14 பிப்ரவரி 1862 ல் அன்றைய மகாராட்டிர மாநிலத்தில் அகமதுநகரில் பிறந்தார். தந்தை பெயர் ஹரிபந்த் கிஷ்டி (Haripant Khisti) தாய் ராதாபாய். பிராமணக்குடியில் பிறந்த ராதாபாய் இளமையில் விதவையாகி கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார். கூரிய மாணவியான கிருபாபாய் உதவித்தொகை பெற்று சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படிக்க வந்தார். தன் 16 வயதில் தனியாக சென்னைக்கு வந்தார். கிறிஸ்தவத்திற்கு மாறிய சத்தியநாதனின் குடும்பத்துடன் அவர் இணைந்துகொண்டார். சத்தியநாதனின் மகன் சாமுவேலை 1881ல் மணந்துகொண்டார். சாமுவேல் கேம்ப்ரிட்ஜ் மாணவர். கிருபா சத்தியநாதன் மருத்துவப்பணியில் காசநோய் தொற்றுக்கு ஆளானார். நோயில் வாடிய காலத்தில்தான் தன் நாவல்களை எழுதினார். இரண்டாவது நாவலாகிய சகுணா ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கையை எழுதிக்கொண்டிருக்கையில் 1894ல் தன் 31 ஆவது வயதில்உயிரிழந்தார்.

இலக்கிய வாழ்க்கை

கிருபா சத்யநாதன்

கிருபா சத்தியநாதன் 1892 ல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் ஆங்கில மாத இதழில் Kamala- A Hindu life என்னும் நாவலையும் 1893ல் Saguna-A Christian life என்னும் நாவலையும் எழுதினார். இவற்றை சாமுவேல் பவுல் என்னும் மதப்பிரச்சாரகர் தமிழுக்கு மொழியாக்கம் செய்து கமலா- ஒரு இந்துப்பெண்ணின் வாழ்க்கை, சகுணா- ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை என்னும் தலைப்புகளில் 1896ல் நூலாக வெளியிட்டார்.

கிருபா சத்தியநாதன் தன் முதல்நாவலாக சகுணா கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கையைத்தான் எழுதினார். இரண்டாவது நாவலாகிய கமலா ஒரு இந்துப்பெண்ணின் வாழ்க்கையை எழுதி முடித்ததும் தன் 31 ஆவது வயதில் மறைந்தார். அந்நூல் அவர் மறைவுக்குப்பின் வெளியாகியது. கிருபாவின் நாவல்கள் அவை வெளிவந்த காலத்தில் பெரிதும்பேசப்பட்டாலும் பின்னர் மறக்கப்பட்டன. பின் காலனிய ஆய்வாளர்களான Susie Tharu & K. Lalitha தன் landmark Women Writing in India (1991) என்னும் நூலில் கிருபா சத்தியநாதன் பற்றி எழுதினார்கள். அதன்பின்னரே அந்நாவல்கள் மறுபிரசுரம் கண்டன.

உள்ளடக்கம்

கிருபா சத்தியநாதனின் நாவல்கள் இரண்டுமே தன் வரலாற்றுத்தன்மை கொண்டவை. சகுணா ஒரு கிறிஸ்தவப்பெண்ணின் வாழ்க்கை பெருமளவுக்கு அவருடைய வாழ்க்கையையும் கமலா ஒரு இந்துப்பெண்ணின் வாழ்க்கை பெருமளவுக்கு அவர் தாயின் வாழ்க்கையையும் காட்டுகிறது என ஆய்வாளர்கள் கருதுகிறர்கள். இந்நாவல்களில் பெண்களின் துயர்களை கிருபா எழுதிக்காட்டுகிறார். மதம் மாறுவது எளிமையான தீர்வாக இருப்பதில்லை. மதம் மாறுபவர்கள் சொந்த சமூகத்தை இழப்பதுடன் தங்களை மதமாற்றிய வெள்ளையர்களின் இனமேட்டிமை நோக்கையும் எதிர்கொள்ள நேர்கிறது.

இலக்கிய இடம்

கிருபா சத்தியநாதன் தொடர்களை எழுதிய சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இதழில் அ.மாதவையா உள்ளிட்ட அன்றைய முன்னோடி தமிழ் நாவலாசிரியர்கள் எழுதிக்கொண்டிருந்தனர். சென்னையில் இருந்து வெளிவந்த விவேகசிந்தாமணி இதழில் அ.மாதவையா 1892ல் சாவித்ரி சரித்திரம் என்றபெயரில் ஒரு நாவலை எழுதிக்கொண்டிருந்தார். இந்நாவல்கள் எல்லாம் ஒரே காலகட்டத்தில் ஏறத்தாழ ஒரே வகையான கதைக்கருக்களைக் கொண்டவையாக உள்ளன. ஆகவே இவை ஒப்பீட்டு ஆய்வுக்குரியவை

உசாத்துணை

https://www.sahapedia.org/how-krupabai-satthianadhan-pioneered-indian-feminist-writing-english