ராஜமுத்திரை

From Tamil Wiki
ராஜமுத்திரை

ராஜமுத்திரை (1965 ) சாண்டில்யன் எழுதிய வரலாற்று சாகசநாவல்.சேரர்களுக்கும் பாண்டியர்களுக்குமான போரை விவரிக்கிறது.

எழுத்து, வெளியீடு

சாண்டில்யன் எழுதிய ராஜமுத்திரை 1965 முதல் குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் 1967ல் வானதி பதிப்பகத்தால் நூலாக்கம் செய்யப்பட்டது.

கதைச்சுருக்கம்

இரண்டு பகுதிகள் கொண்டது இந்நாவல். முதல்பகுதியில் பாண்டியநாட்டின் செல்வத்திற்கு அடிப்படையாக திகழும் முத்துக்கள் தொடர்ச்சியாகக் கொள்ளை போகின்றன. அதை விசாரிக்கும்பொருட்டு தன் தம்பியான வீரபாண்டியனை கொற்கைக்கு அனுப்புகிறார் அரசரான சுந்தர பாண்டியன். வீரபாண்டியன் கொற்கைக்கு வந்து அங்கே நிகழ்வது சேரர்களின் சதி என்று தெரிந்துகொள்கிறான். அச்சதியைச் செய்யும் சேரமன்னன் வீரரவி கொற்கையில் இருப்பதை அறிந்து அவரை பிடிக்க முயல அவர் சுந்தரபாண்டியனின் மகள் முத்துக்குமரியை கடத்திக்கொண்டு சேரர்தலைநகர் பரலிக்குச் சென்றுவிடுகிறார்.

இரண்டாம் பகுதியில் பாண்டியர் பக்கத்து தளபதிகளில் ஒருவரான உதயபானு முத்துநகையை மீட்க சேரநாட்டுக்கு வருகிறான். சேரன் பெண்ணைக் கடத்தியதை விரும்பாத சேரநாட்டு அமைச்சனாகிய பரதபட்டன் அவன் மாறுவேடம்போட உதவுகிறான். முகத்தை விகாரமாக்கிக்கொண்டு பரலிக்கு வரும் உதயபானு அங்கே முத்துநகை இருக்கும் சிறைக்கே காவலனாக ஆகிறான். அவளுடன் காதல் கொள்கிறான். கொற்கை கோட்டையின் தலைவன் மகள் இளநங்கையுடன் காதல் கொண்ட வீரபாண்டியன் அங்கே கைவிடுபடைகளை உருவாக்குகிறான். போசளநாட்டு அரசன் சிங்கணன் வீரரவிக்கு ஆதரவாகச் செயல்பட அவனை அழிக்கிறான்.

செண்டுவெளி முற்றத்தில் செண்டு எறியும் போட்டியில் வென்று முத்துநகையை மணக்கும் உரிமையை வெல்கிறான் உதயபானு. அவன் யார் என தெரிந்ததும் போர்மூள்கிறது. வீரரவி கோடரிவீசிக் கொல்லப்படுகிறான். பாண்டியநாடு சேரநாட்டை வெல்கிறது. முத்துநகையை உதயபானுவும் இளநங்கையை வீரபாண்டியனும் மணக்கிறார்கள்.

வரலாற்றுப்பின்னணி

பாண்டியநாட்டின் இரண்டாம் எழுச்சிக் காலகட்டத்தில் சோழநாட்டை வென்ற இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் மறைவுக்குப் பின்னர் பட்டமேற்றவர் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் (சடையவர்மன் சுந்தர பாண்டியன்) பாண்டிய மன்னர்களில் இவரே முதன்மையானவர் எனப்படுகிறார். ஆட்சிக்காலம் பொயு 1251 முதல் 1271 வரை என கல்வெட்டுகள் கூறுகின்றன. இவர் சோழமன்னர் மூன்றாம் ராஜேந்திர சோழனை போரில் தோற்க்கடித்து சோழப் பேரரசை முற்றிலுமாகக் கைப்பற்றி பிற்காலப் பாண்டியப் பேரரசை நிறுவியவர்.

ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் திருநெல்வேலிக் கல்வெட்டு அவன் சேர மன்னனை போரில் வென்றதைக் குறிப்பிடுகிறது. மெய்கீர்த்திகளில் ரவிவென்றான் என்றும் கேரளவம்ச நிர்மூலன் என்றும் இவன் குறிப்பிடப்படுகிறான். ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் திருநெல்வேலிக் கல்வெட்டு ‘சேரனும் தானையும் செருக்களத்தொழிய வாரசும் புலரா மலைநாடு நூற...’ என்று குறிப்பிடுகிறது. இவன் காலகட்டத்தில் சேர மன்னர் வீரரவி உதய மார்தண்டவர்மன் பரலி மாநகரை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தான் என தெரியவருகிறது. ஆகவே இப்போரில் வீரரவி உதயமார்த்தாண்ட வர்மன் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. கோட்டாற்றுக்கரை என்னும் இடத்தில் இருந்த சேரர்களின் கோட்டையைத் தாக்கி வென்ற செய்தியை கல்வெட்டு குறிப்பிடுகிறது. போரில் இவருக்கு ஜடாவர்மன் (சடையவர்மன்) வீரபாண்டியன் உதவிசெய்தார் என கல்வெட்டுகள் சொல்கின்றன.

குறைவான செய்திகளைக்கொண்டு பார்க்கையில் தெற்கே கன்யாகுமரி அருகே, பின்னாளில் திருவிதாங்கூர் என அழைக்கப்பட்ட நிலப்பகுதியை, ஆட்சிசெய்த அரசர் வீரரவி உதயமார்த்தாண்டன் என்று ஊகிக்கப்படுகிறது. வீரரவி உதயமார்த்தாண்டனுக்குப் பின் அவன் வாரிசுகள் பாண்டியர்களுக்குக் கப்பம் கட்டியமைக்குச் சான்றுகள் உள்ளன. கோட்டாற்றுக்கரை இன்றைய நாகர்கோயில் கோட்டாறு. முன்னரே அநபாயன் என்னும் சோழமன்னன் (இரண்டாம் குலோத்துங்கன்) கோட்டாற்றை வென்றமைக்குக் கல்வெட்டுச்சான்றுகள் உள்ளன.

அக்காலத்திலும் பின்னரும் பல பாண்டிய கிளை மன்னர்குடிகள் இருந்தன. களக்காடு பாண்டிய குலம் தொடர்ந்து சேரமன்னர்களுடன் பூசலில் இருந்தது. சடையவர்மன் வீரபாண்டியன் களக்காடு பாண்டியர்களில் ஒருவராக இருக்கவேண்டும். சோழநாட்டுக்கு நெடுங்காலம் கப்பம் கட்டிவந்த சேரநாடு சோழநாடு பலம்குறைந்தபோது சுதந்திரம்பெற்றது. அதை வென்று தங்களுக்கு கப்பம் கட்டுபவர்களாக பாண்டியர்கள் மாற்றினர். ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் அதன்பின் சோழர்களையும், போசளர்களையும் வென்றார்.

இலக்கிய இடம்

இது ஒரு சாகசநாவல். தொடர்கதை வடிவில் அமைந்தது. ஆகவே அத்தியாயம் தோறும் திருப்பங்கள் கொண்டது. மிகக்குறைவான வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில் பாண்டியர்களின் கொற்கையின் முத்துவணிகம் உள்ளிட்ட செய்திகளை கோத்து இந்நாவல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நிலச்சித்திரமும் வரலாற்றுச் சித்திரமும் போர்ச்சித்திரமும் மிகையானவை. ஏனென்றால் சேரர்தலைநகர் பரலி எந்த இடமென்று ஆய்வாளர்கள் இன்னும் முடிவுசெய்யவில்லை. கோட்டாறு, களக்காடு முதலிய இடங்களின் நிலம்சார்ந்த செய்திகள் இந்நாவலில் இல்லை. அக்கால சேரர் அரசின் சித்திரங்களும் இல்லை. இது ஒரு சாகசநாவலாக வாசிக்கத்தக்கது.

உசாத்துணை