க.ரா. ஜமதக்னி

From Tamil Wiki
Revision as of 23:09, 4 February 2024 by ASN (talk | contribs) (Page Created by ASN)
எழுத்தாளர் ஜமதக்னி

க.ரா. ஜமதக்னி (ஏப்ரல் 15, 1903 – மே 27, 1981) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர். சுதந்திரப் போராட்ட வீரர். மார்க்ஸிய அறிஞர். தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கட்சியை நிறுவிய முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். ஜமதக்னி மொழிபெயர்த்த பல்வேறு நூல்களுள் மார்க்ஸின் ‘மூலதனம்’ நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

பிறப்பு, கல்வி

க.ரா. ஜமதக்னி, வட ஆற்காடு மாவட்டத்தில் (இன்றைய வேலூர் மாவட்டம்) உள்ள காவேரிப்பாக்கத்திற்கு அருகில் உள்ள கடப்பேரி என்னும் சிற்றூரில், ஏப்ரல் 15, 1903 அன்று, ராகவ நாயக்கர்–முனியம்மாள் இணையருக்குப் பிறந்தார். வாலாஜாவில் பள்ளிக் கல்வி கற்றார். வேலூர் ஊரிஸ் கல்லூரியில் இண்டர்மீடியட் கற்றார். ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மொழிகளைக் கற்றார்.

தனி வாழ்க்கை

க.ரா. ஜமதக்னி, பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பின் சுதந்திர எழுத்தாளராக இயங்கினார். சுதந்திரப்போராட்ட வீராங்கனையும், கடலூர் அஞ்சலையம்மாளின் மகளுமான லீலாவதியை மணம் செய்துகொண்டார். மகன்: சிவாஜி; மகள்கள்: கிருபா, சாந்தி.

இலக்கிய வாழ்க்கை

பல மொழிகள் அறிந்திருந்த ஜமதக்னி மொழிபெயர்ப்பில் ஆர்வம் கொண்டார். ஹிந்தி மொழியின் காவியமான ‘காமாயனி’யை ‘காமன் மகள்’ என்ற தலைப்பில் கவிதை நடையில் மொழிபெயர்த்தார். காளிதாசனின் ரகுவம்சத்தையும் மேகதூத்தையும் தமிழில் மொழிபெயர்த்தார். தொடர்ந்து பல நூல்களை மொழியாக்கம் செய்தார்.

க.ரா. ஜமதக்னியின் மொழியாக்கச் சாதனைகளில் குறிப்பிடத்தகுந்தது, மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூலின் ஆறு தொகுதிகளையும் தமிழில் மொழிபெயர்த்ததுதான். தனது 75 – ஆம் வயதில் மொழிபெயர்ப்பினைத் தொடங்கி 79 - ஆம் வயதில் அப்பணியை நிறைவு செய்தார்.  அந்நூல் பற்றி அறிந்த அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி, 1998-99 ஆம் ஆண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில், மூலதனம் மொழிபெயர்ப்பு நூலை வெளிக்கொணர ரூபாய் ஐந்து லட்சத்தை ஒதுக்கினார். அந்நூல் வெளிவரப் பல விதங்களிலும் உறுதுணையாக இருந்தார். நான்கு ஆண்டுகளில் 10,000 பக்கங்களில் மூலதனத்தையும், மிகைமதிப்புக் கோட்பாட்டையும் மொழியாக்கம் செய்தார் க.ரா. ஜமதக்னி.

அரசியல்

க.ரா. ஜமதக்னி, காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். நீலன் சிலை அகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டார். உப்புச் சத்தியாகிரகப் போராட்டடததில் ஈடுபட்டுச் சிறை சென்றார். சிறையில் அவருக்கு அறிமுகமான சிங்காரவேலர் மூலம் மார்க்ஸிய சித்தாந்தம் அறிமுகமானது. 1931-ல், கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டார். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு ஏறத்தாழ 9 வருடங்கள் சிறையில் இருந்தார்.

1938-ல் சோஷலிஸ்ட் கட்சி உருவானபோது சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோருடன் இணைந்து அக்கட்சி தமிழகத்தில் உருவாவதற்குப் பாடுபட்டார். பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உருவானதும் அதன் நிறுவன உறுப்பினரானார். அக்கட்சியின் வட ஆர்க்காடு மாவட்டத்தின் முதல் செயலாளராகப் பணியாற்றினார்.

1938-ல், காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட ஜமதக்னி, வட ஆற்காடு மாவட்டத்தின் பொதுச் செயலாளர் ஆனார்.

பொறுப்புகள்

வாலாஜா பேட்டையில் உள்ள தீனபந்து ஆசிரம நிறுவனர்களில் ஜமதக்னியும் ஒருவர்

இதழியல்

ஜமதக்னி, 1934-ல், ‘வீர சுதந்திரம்’ என்ற பெயரில் இதழ் ஒன்றைச் சிலகாலம் நடத்தினார்.