ஆரியசங்காரன்

From Tamil Wiki
Revision as of 16:52, 28 January 2024 by Jeyamohan (talk | contribs)
ஆரியசங்காரன்
ஆரியசங்காரன்
ஆரியசங்காரன் இதழ்
ஆரியசங்காரன் ஓர் அறிக்கை
ஆரியசங்காரன் மறைவுச்செய்தி

ஆரியசங்காரன் (7 மே 1923- 26 பிப்ரவரி 1973 ) தலித் இயக்க முன்னோடிகளில் ஒருவர். ஆரியனை அழிப்பவன் என்ற பொருளில் இப்புனைபெயரைச் சூட்டிக்கொண்டார். தலித் மக்களுக்கான களப்போராட்டங்களில் ஈடுபட்டார்.

பிறப்பு, கல்வி

ஆரியசங்காரன் 7 மே 1923ல் சென்னையில் பிறந்தார்

தனிவாழ்க்கை

ஆரியசங்காரன் பற்றி மிகக்குறைவான செய்திகளே பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவர் புரசைவாக்கத்தில் வாழ்ந்தார் என்று நாளிதழ் செய்திகள் சொல்கின்றன

இதழியல்

ஆரியசங்காரன் ஆரியசங்காரன் என்னும் இதழை நடத்திவந்தார். அந்தப்பெயரையே தனக்குச் சூட்டிக்கொண்டார்ன்

பொதுவாழ்க்கை

பெரியமேடு சிந்தாதிரிப் பேட்டை பகுதிகளில் மூட்டைதூக்கும் தொழிலாளர்கள், கைரிக்ஷா தொழிலாளர்களுக்கான சங்கங்களை அமைத்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.

1966 ல் சென்னை குடிசைப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவேண்டும் என்று கோரி போராட்டத்தை நடத்தினார்

1968 ல் கீழ்வெண்மணி படுகொலை யில் அன்றைய திராவிட முன்னேற்றக் கழக அரசு மௌனம் சாதிப்பதாகவும், முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் குற்றம் சாட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார்.

1969 ல் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தலித் அமைச்சரான சத்தியவாணிமுத்துவை அதே கட்சியைச் சேர்ந்த வேலூர் நாராயணன் என்னும் தலைவர் சாதிப்பெயர் சொல்லி இழிவுசெய்தபோது ஆரியசங்காரன் அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்தினார்.

திராவிடர் கழகம் அம்பேத்கரை எதிர்த்தும் தலித் மக்களை எதிர்த்தும் பேசிவந்தபோது ஈ.வெ.ராமசாமி அவர்களின் கூட்டங்களில் ஆரியசங்காரன் பாம்புகளை விட்டு அவற்றை கலைத்தார் என்று அன்பு பொன்னோவியம் குறிப்பிட்டார். பின்னர் 13.ஏப்ரல் 1966 ல் டாக்டர் அம்பேத்கர் நினைவு ட்ரஸ்ட் சார்பாக அம்பேத்கர் 75 ஆம் ஆண்டு விழாவில் ஈ.வெ.ராமசாமி அவர்கள் கலந்துகொண்டபோது ஆரியசங்காரன் வரவேற்புரை ஆற்றினார்.

அரசியல்

ஆரியசங்காரன் அம்பேத்கர் தொடங்கிய இந்தியக் குடியரசுக் கட்சி தமிழகப் பிரிவின் சென்னை மாவட்ட அமைப்பாளராகப் பணியாற்றினார்

மறைவு

ஆரியசங்காரன் 26 பிப்ரவரி 1973 ல் ஓர் கார்விபத்தில் மறைந்தார். அவருடைய அஞ்சலிக்கூட்டத்தில் பல்லாயிரம்பேர் கலந்துகொண்டார்கள். அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் கலந்துகொண்டார்.

பங்களிப்பு

ஆரியசங்காரன் தமிழக தலித் இயக்க முன்னோடிகளில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

உசாத்துணை