மீதி இருள்

From Tamil Wiki
Revision as of 18:07, 23 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "மீதி இருள் (1898) தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால நாவல்களில் ஒன்று. அருமைநாயகம் எழுதிய இந்நாவல் ஒரு கிறிஸ்தவ மதப்பிரச்சாரக் கதை. நாவல் வடிவில் ஒரு குடும்பத்தின் கதைச்சுருக்கம் அளிக...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மீதி இருள் (1898) தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால நாவல்களில் ஒன்று. அருமைநாயகம் எழுதிய இந்நாவல் ஒரு கிறிஸ்தவ மதப்பிரச்சாரக் கதை. நாவல் வடிவில் ஒரு குடும்பத்தின் கதைச்சுருக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பின்னரும் இந்து மதத்தின் சில நம்பிக்கைகளைக் கைவிடாமல் இருந்தமையால் வந்த துன்பங்கள் சொல்லப்படுகின்றன

ஆசிரியர்

இந்நாவலை எழுதியவர் அருமைநாயகம். இவர் நாகர்கோயிலைச் சேர்ந்தவர். இந்துவாகப் பிறந்து கிறிஸ்தவத்தை தழுவியவர் என அவர் சொல்கிறார்.மீதி இருள் நாவலைத் தவிர ஆயனும் ஆடும், என் தந்தை என் பாட்டனார், மூடிய முத்து ஆகிய கதைநூல்களையும் எழுதியிருக்கிறார்

கதைச்சுருக்கம்

திருச்சிராப்பள்ளியில் தொடங்கும் இக்கதையில் இந்து மதத்தைச் சேர்ந்த ராமசாமி- சீதை தம்பதியினர் கிறிஸ்தவ மதத்தை தழுவுகிறார்கள். ஆபிரகாம்-சாராள் என பெயர் மாற்றம் செய்துகொள்கிறார்கள். இவர்களுக்கு ஈசாக்கு என்னும் குழந்தை பிறக்கிறது. நகைகள் அணிந்துகொண்டு விளையாடிய இந்தச்சிறுவன் காணாமல் போகிறான். ஆபிரகாமும் சாராளும் சாராளின் சகோதரியின் மகளை சுவீகாரம் எடுத்துக்கொள்கிறார்கள். சிலகாலம் கழித்து வேதமணி என்னும் சிறுவன் அவர்கள் இல்லத்தில் வேலைக்குச் சேர்கிறான். வேதமணியை வெறுக்கும் சாராள் அவனுக்கு பல கொடுமைகளைச் செய்கிறாள். கொல்லவும் முயல்கிறாள். இறுதியில் வேதமணிதான் அவர்களின் காணமாலான மகன் என தெரியவருகிறது. சாராள் தற்கொலை செய்துகொள்கிறாள்.

எழுபது பக்கங்களே கொண்ட இந்நூலில் கிறிஸ்தவக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்யும் பகுதிகளே மிகுதி என்று ஆய்வாளர் சிட்டி-சிவபாதசுந்தரம் கருதுகிறார்கள். ‘’ஓளியின் பிள்ளைகள் என்று பெயரெடுத்தோரில் பலர் சுத்த இருளின் மக்களாயிருக்கிறர்கள்’ என்று சொல்லும் அருமைநாயகம் அதைக் கண்டிக்கவே இந்நாவலை எழுதியிருக்கிறார். ‘விஸ்தாரமான இவ்விந்து தேசம் பேய்வணக்கம், விம்பபூசை, ஜாதிக்கட்டு, சிசுமணம், விதவை விவாக விரோதம், புராதனவாதம் என்னும் அந்தகாரங்களால் எகிப்தின் காரிருள் போல கருண்டிருக்கும்போது ஐரோப்பாவிலிருந்து சுவிசேஷ ஒளியானது அமாவாசி இரவில் பூரணசந்திரன் உதயமானதுபோலத் தோன்றி ஜொலிக்க ஆரம்பித்தது’ என நூலாசிரியர் சொல்கிறார்

இலக்கிய இடம்

சமூகச்சூழலைச் சித்தரிப்பது, உரைநடையில் எழுதப்பட்டிருப்பது ஆகியவையே இந்நாவலின் சிறப்புகள். அசன்பே சரித்திரம் இஸ்லாமிய மரபைப்பற்றி எழுதப்பட்ட ஆரம்பகட்ட நாவல் என்றால் இது கிறிஸ்தவ மரபைப்பற்றி எழுதப்பட்டது என்று கொள்ளலாம் என்கிறார்கள் சிட்டி- சிவபாதசுந்தரம்

உசாத்துணை

தமிழ்நாவல்- சிட்டி சிவபாதசுந்தரம்; கிறிஸ்தவ இலக்கிய சங்கம்