பாலமுருகனடிமை சுவாமிகள்

From Tamil Wiki
பாலமுருகனடிமை
பாலமுருகனடிமை சுவாமிகள்
பாலமுருகனடிமை சுவாமிகள் கையெழுத்து

பாலமுருகனடிமை சுவாமிகள் ( 24 ஜனவரி 1941) (க. தட்சிணாமூர்த்தி) தமிழ் சைவத்துறவி. முருகபக்தர். தமிழகத்தில் ஆற்காடு அருகே உள்ள ரத்னகிரி என்னுமிடத்தில் பாலமுருகன் கோயிலை நிறுவி நடத்தி வருபவர். தமிழறிஞர், திருக்குறள் புரவலர் என்னும் வகைகளிலும் மதிக்கப்படுபவர்

பிறப்பு,கல்வி

பழைய ஆற்காடு மாவட்டம் (இன்றைய ராணிப்பேட்டை மாவட்டம்) ரத்னகிரி அருகே உள்ள கீழ்மின்னல் என்னும் ஊரில் கந்தசாமி முதலியார்,சிங்காரம்மாள் இணையருக்கு 24 ஜனவரி 1941ல் பாலமுருகனடிமை சுவாமிகள் பிறந்தார். இயற்பெயர் தட்சிணாமூத்தி என்னும் சச்சிதானந்தம். ராணிப்பேட்டையில் உயர்நிலைக்கல்வி பயின்றார்

தனிவாழ்க்கை

பாலமுருகனடிமை சுவாமிகள் தமிழ்நாடு மின்வாரியத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்தார். சிவகாமி என்பவரை மணம்புரிந்துகொண்டார். அவருக்கு சிவகாமியில் இரண்டு குழந்தைகள் பிறந்தன.

துறவு

பாலமுருகனடிமை சுவாமிகள் தன் 27 வயதில் (1967ல்) கைவிடப்பட்டுகிடந்த இரத்தினகிரி பாலமுருகன் ஆலயத்தில் சென்று அமர்ந்தார் என்றும் 20 மார்ச் 1968 ல் ஞானம் பெற்றார் என்றும் சொல்லப்படுகிறது. அது முதல் துறவியாக அங்கேயே வாழ்ந்தார். பேச்சை நிறுத்திக்கொண்டார். தன்னை பாலமுருகனடிமை என அறிவித்துக்கொண்டார்.

பாலமுருகனடிமை சுவாமிகள் 2001ல் தான் ஞானம் பெற்ற நாளையும் அன்று நிகழ்ந்ததையும் தன் பக்தர்களுக்கு எழுதி அறிவித்தார். பாலமுருகன் ஆலயத்திற்கு வந்து வழிபட்டுச் செல்லும் வழக்கம் கொண்டிருந்த அவர் அன்று அங்கிருந்த அர்ச்சகர் ஆரத்தி காட்டுவதற்கு கற்பூரம் இல்லை என்று சொன்னதைக் கேட்டு அழுததாகவும், திரும்பும் வழியில் நினைவிழந்து விழுந்ததாகவும், விழித்தபோது தான் யார் என்றும் தன் பணி என்ன என்றும் தெரிந்துகொண்டதாகவும் அக்குறிப்பில் சொல்கிறார். அறுபடைவீடுகளுக்கு நிகராக பாலமுருகன் ஆலயத்தை ஆக்குவதே தன் கடன் என்று அவர் எண்ணியதாகச் சொல்கிறார்

ஆன்மிகப்பணி

ரத்னகிரி மலைமேல் பொயு 14 ஆம் நூற்றாண்டில் அருணகிரிநாதர் நிறுவியதாகச் சொல்லப்படும் சிற்றாலயம் இருந்தது. 1980ல் அதை பாலமுருகனடிமை சுவாமிகள் செப்பனிட்டு விரிவாக்கி கட்டினார். இரத்தினகிரி பாலமுருகன் ஆலயத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ள திருக்கோலமாகவும் துறவியாக குருகோலத்திலும் இரு சன்னிதிகளில் கோயில்கொண்டிருக்கிறார். விநாயகருக்கு தரைப்பகுதியில் ஒன்றும் மலை உச்சியில் ஒன்றும் என இரு கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருக்கும் அந்த ஆலயத்தின் அறங்காவலராக பாலமுருகனடிமை சுவாமிகள் திகழ்கிறார்.

பாலமுருகனடிமை சுவாமிகள் ரத்னகிரி ஆலயத்தின் கருவறையின் அருகே முதல்படியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது வழக்கம். ஏராளமான பக்தர்கள் வந்து அவரை வணங்கிச் செல்கிறார்கள்.

சமூகப்பணி

பாலமுருகனடிமை சுவாமிகளின் ஒருங்கிணைப்பில் ரத்னகிரியில் பக்தர்களுக்கு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தினமும் உணவு அளிக்கப்படுகிறது. ரத்னகிரியில் பள்ளி, இலவச மருத்துவமனை உள்ளிட்ட சமூகப்பணிகளையும் ஒருங்கிணைக்கிறார்

தமிழ்ப்பணி

1980 முதல் பாலமுருகனடிமை சுவாமிகள் தமிழ் நூல்களை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார். பள்ளிகளில் திருக்குறள் ஒப்புவிக்கும்போட்டி, திருக்குறள் சொற்பொழிவுப்போட்டிகள் நிகழ்த்தி பரிசளித்து வருகிறார். அவருடைய முன்னெடுப்பில் இரண்டு திருக்குறள் மாநாடுகள் நடைபெற்றுள்ளன.

பாலமுருகனடிமை சுவாமிகள் 1968

விருது

திருக்குறளுக்காகவும் தமிழுக்காகவும் ஆற்றிய பணிகளுக்காக பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு தமிழக அரசின் அய்யன் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டது

உசாத்துணை