standardised

சாலாம்புரி (நாவல்)

From Tamil Wiki
Revision as of 11:30, 11 March 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
சாலாம்புரி .jpg

திராவிடர் கழகத்திலிருத்து பிரிந்து தேர்தல் அரசியலுக்குள் திராவிடக் கட்சி நுழைந்த தருணத்தில், அதன் வேர்களான தொண்டர்களின் வாழ்வை நெசவுத் தொழிலின் பின்புலத்தில் விவரிக்கும் நாவல். அ. வெண்ணிலா எழுதிய படைப்பு

பதிப்பு

அகநி பதிப்பகம் இந்நூலை நவம்பர் 2020-ல் வெளியிட்டது.

ஆசிரியர்

சாலாம்புரி நாவலின் ஆசிரியர் அ. வெண்ணிலா ஆகஸ்ட் 10, 1971-ல் பிறந்தவர். கவிஞர், சிறுகதை மற்றும் நாவலாசிரியர், பதிப்பாளர், சிற்றிதழ் ஆசிரியர் என பன்முகம் கொண்டவர். அரிய தொகுப்பு நூல்களையும் உருவாக்கியுள்ளார். அ. வெண்ணிலா அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.  இவரின் முதல் நாவல் "கங்காபுரம்". "சாலாம்புரி" அ. வெண்ணிலா எழுதிய இரண்டாவது நாவலாகும்.

முதன்மைப் பாத்திரங்கள்

  • நடராஜன் - கதையின் நாயகன்
  • தேவி - நடராஜனின் மனைவி
  • கன்னியம்மாள் - நடராஜனின் தாய்
  • ருக்கு - நடராஜனின் மூத்த தங்கை
  • ராஜி முதலியார் - நடராஜனின் தோழர்
  • வடிவேலு முதலியார் - நடராஜனின் பெரியப்பா
  • பாஸ்கரன் - வடிவேலு முதலியாரின் மகன்
  • முனுசாமி - கட்சியின் துணைச் செயலாளர்

நூல் சுருக்கம்

இரண்டு தங்கை இரண்டு தம்பியர், அம்மா மற்றும் மனைவியை கவனித்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு பத்தொன்பது வயதிலேயே நடராஜனுக்கு வருகிறது. இவன் திராவிடக் கட்சியின் செயலாளராக இருக்கிறான். டீக் கடையுடன் உணவகம் நடத்தி வருகிறான். கட்சிப் பணி செய்து கொண்டு வியாபாரத்தையும் கவனிக்க சிரமப்படும்போது கடையில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் கடையை மூடவேண்டிய நிலை ஏற்படுகிறது. குடும்பத்தை நடத்த நெசவுத் தொழிலை செய்து கொண்டு கட்சி வேலைகளையும் கவனிக்கிறான். நடராஜனுக்கு உறுதுணையாகவும் வழிகாட்டிகளாகவும் ராஜி முதலியாரும் வடிவேலு முதலியாரும் இருக்கிறார்கள். கோயில் திருவிழாவின்போது நடராஜனின் மேல் சாமி வந்து கிணறு வெட்டவும் கோயிலைக் கட்டவும் உறுதி கொடுக்கிறது. இதனால் கட்சியில் நடராஜனுக்கு பின்னடைவு ஏற்படுகிறது. மேலும்,ஊருக்காக அவன் செய்யும் சில செயல்கள் எதிரிகளை உண்டாக்குகிறது.  நடராஜன் குடும்பத்தையும் அரசியலையும் ஆன்மிகத்தையும் எப்படி கையாண்டான் அதன் விளைவுகள் என்ன என்பதை நாவல் விவரிக்கிறது

உருவாக்கம்

அ. வெண்ணிலா தன் பால்யத்தில் தன் ஊரில் உள்ளவர்கள் கூறிய செய்திகளை தொகுத்து இந்நாவலை உருவாக்கியுள்ளார்.

நூல் பின்புலம்

சாலாம்புரி நாவல், 1957-ல் கொள்கைப் பிடிப்புடன் சமூக மாற்றத்தை விரும்பிய ஓர் ஊரைப் பிண்ணணியாகக் கொண்டது. இளைஞர்கள் சுயமரியாதை சிந்தனைகளின் மூலமாக சமூகத்தை மாற்றிவிட முடியும் என்ற தீவிரத்துடன் களத்தில் இருத்தார்கள். ஊரின் பிரச்சினை தங்களின் சொந்தப் பிரச்சினையைவிட முக்கியம், ஊரின் தேவைகளுக்கே முன்னுரிமை ஊர் என்பதே தன் அடையாளம் என்ற சமூகப் பிரக்ஞையுடன்  இளைஞர்கள் இருந்தார்கள். தன்னை நம்பியிருக்கும் குடும்பத்திற்காக உழைத்துக் கொண்டும், தன் குடும்பத்தினரின் நம்பிக்கைகளை தவிர்க்கவும் முடியாமல் கட்சியின் கொள்கைகளையும் கடைபிடிக்க அவர்கள் செய்யும் பிரயத்தனங்களை நெசவுத் தொழில் பிண்ணணியில் நுட்பமாக விவரிக்கிறது இந்நாவல்.

மதிப்பீடு

புதிதாகத் தோன்றிய கட்சியின் ஆணிவேராக விளங்கும் இளைஞர்களின் மனவோட்டத்தையும் பரிதவிப்பையும் இயல்பாக சித்தரிக்கிறது இந்நாவல். பெரும் கட்சிகளாக வளர்ந்து பரவி நிற்கும் இரண்டு கட்சிகளின் தொடக்கம் எப்படி இருந்தது என்பதை காட்டுகிறது. மேலும் அதன் அடிமட்ட தொண்டன் அவன் வாழ்வில் எதிர்கொண்ட சிக்கல்களையும் மன ஊடாட்டத்தையும் மிக நுட்பமாக விவரிக்கிறது. பெரும் கொள்கைப் பிடிப்புடன் தொடங்கப்பட்ட கட்சிகள் இப்போது கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டு திசை மாறுவதன் முதல் புள்ளியை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

வெண்மையில் சிவப்பும் கருப்புமாக சாயமேற்றிய துணிக்கு சாலாம்புரி என்று பெயர் என ஆய்வாளர் ஜெயசீலன் ஸ்டீபன் கூறுகிறார். வெள்ளை மனம் படைத்திருந்தவர்கள் மனதில் கறுப்பும் சிவப்புமாய் சிந்தனைகளும் கொள்கைகளும் ஏற்றப்பட்ட தருணத்தை கூறுகிறது.

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.