standardised

அ. பாலமனோகரன்

From Tamil Wiki
Revision as of 18:13, 10 March 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
அ. பாலமனோகரன்
அ.பாலமனோகரன்

அ. பாலமனோகரன் (பிறப்பு: ஜூலை 7, 1942) ஈழத்து தமிழ் அறிஞர். ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், நாவலாசிரியர், ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் என பன்முகம் கொண்டவர். 1973-ல் இவரின் "நிலக்கிளி" நாவல் சாகித்திய விருது பெற்றது.

இளமை, கல்வி

இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணீரூற்று என்ற கிராமத்தில் ஜூலை 7, 1942-ல் அண்ணாமலைக்கு மகனாகப் பிறந்தார். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றவர். 1962-ல் ஆண்டான்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆசிரியப்பணியை ஆரம்பித்தார். பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆங்கில ஆசிரியருக்கான சிறப்புப் பயிற்சியைப் பெற்றார். தற்போது டென்மார்க்கில் வசித்து வருகிறார்.

தனிவாழ்க்கை

அ. பாலமனோகரன் ஓவியம்

1967-ல் மூதூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணி செய்தார். முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

மூதூரில் ஆசிரியராக இருக்கும்போது முதுபெரும் எழுத்தாளரான வ.அ. இராசரத்தினத்தின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. இவரது இலக்கியப்பணிக்கு இந்த நட்பே காரணம். சிந்தாமணி பத்திரிகையில் வெளியான "மலர்கள் நடப்பதில்லை" இவரது முதல் சிறுகதை. இளவழகன் என்ற புனைபெயரில் பல சிறுகதைகளை எழுதினார். 1973-ல் புகழ்பெற்ற நாவலான நிலக்கிளி வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது. அவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான சாகித்திய மண்டலப்பரிசு இந்நாவலுக்கே கிடைத்தது. மித்திரன் பத்திரிகையில் இவரது வண்ணக் கனவுகள் என்ற தொடர் நாவல் வெளியானது. டேனிஷ்- தமிழ் அகராதியைத் தொகுத்தார்.

ஓவியம்

எழுத்தாளரான இவரின் இன்னொரு முகம் ஓவியம் வரைவது. இயற்கை நேசிப்பவர் என்பதால் பெரும்பாலும் இவரது ஓவியங்கள் இயற்கை சார்ந்து அமைந்துள்ளது. இவரது ஓவியங்கள் அனைத்துமே நீர்வண்ணக் கலவையில் பிறந்தவை.

நூல் பட்டியல்

நிலக்கிளி நாவல்
நாவல்
  • நந்தாவதி
  • தாய்வழித் தாகம்
  • நிலக்கிளி (வீரகேசரிப் பிரசுரம்)
  • குமாரபுரம் (வீரகேசரிப் பிரசுரம்)
  • கனவுகள் கலைந்தபோது (வீரகேசரிப் பிரசுரம்)
சிறுகதைத் தொகுதி
  • நாவல் மரம் (டேனிஷ் மொழி)
  • தீபதோரணங்கள்
பிற
  • டேனிஷ்- தமிழ் அகராதி - இவர் தொகுத்தது
  • வட்டம்பூ

இதர இணைப்புகள்

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.