தொண்டரடிப்பொடி ஆழ்வார்

From Tamil Wiki
Revision as of 19:53, 2 January 2024 by ASN (talk | contribs)
தொண்டரடிப்பொடி ஆழ்வார்

தொண்டரடிப்பொடி ஆழ்வார், பன்னிரு ஆழ்வார்களுள் பத்தாவது ஆழ்வார். சோழநாட்டில் உள்ள திருமண்டங்குடியில் பிறந்தார். இயற்பெயர்: விப்ரநாராயணன். விப்ரநாராயணன் பல தலங்கள்தோறும் சென்று இறைவனை வணங்கினார். ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் அழகில் விருப்புற்று அத்தலத்திலேயே தங்கி நந்தவனம் அமைத்து இறைத்தொண்டு புரிந்தார். இவரது காலம் எட்டாம் நூற்றாண்டு.

வாழ்க்கைக் குறிப்பு

விப்ரநாராயணர், சோழநாட்டில் உள்ள திருமண்டங்குடியில், மார்கழி மாதத்தில், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். வைஜயந்தி எனப்படும் பெருமாளின் வனமாலையின் அம்சமாய்ப் பிறந்தார் என்பது தொன்மம். இளம் வயது முதலே திருமால் மீது விருப்புக் கொண்டிருந்த விப்ரநாராயணர், தலங்கள் தோறும் சென்று, திருமாலை வணங்கினார். திருவரங்கம் வந்தவர், அரங்கநாதரின் அழகால் ஈர்க்கப்பட்டு அங்கேயே தங்கினார். அங்கு ஒரு நந்தவனத்தை அமைத்தார். துளசி மாலை தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பித்து வாழ்ந்தார்.

தொன்மம்

கணிகையின் மீது காதல்

கணிகையர் குலத்தைச் சேர்ந்தவள் தேவதேவி. அவள் விப்ரநாராயணர் மீது காதல் கொண்டாள். விப்ரநாராயணரை வசப்படுத்த எண்ணி, அவர் அமைத்திருந்த நந்தவனத்திற்கு வந்து பணி செய்தாள்.

ஒருநாள் கடும் மழையில் தேவதேவி நந்தவனத்தில் மழையில் நனைந்துகொண்டிருந்தாள். அவள் மழையில் நனைவதைப் பொறுக்காத விப்ரநாராயணர், அவளைத் தன் குடிலுக்குள் அழைத்தார். அவள் அழகில் வீழ்ந்தார். நாளடைவில், அவள் இல்லை என்றால் தான் இல்லை எனும் அளவிற்கு அவள் அழகுக்கு அடிமையானார். அரங்கனையும், அரங்கனுக்குச் செய்து வந்த திருத்தொண்டையும் மறந்து தேவதேவியின் அன்பனானார்.

தன் பொருட்கள் அனைத்தையும் தேவதேவியிடம் இழந்தார். கைப்பொருள் ஏதும் இல்லாத நிலையில், தேவதேவி விப்ரநாராயணரைக் கை விட்டாள். ஆனால், விப்ரநாராயணர் தேவதேவியை மறக்க இயலாமல் வருந்தினார். அவள் நினைவாகவே இருந்தார்.

இறைவனின் லீலை

விப்ரநாராயணரது நிலைகண்டு வருந்திய திருமகள், திருமாலிடம், “முன்போல் விப்ரநாராயணனை பக்தனாக ஆக்கி அருள்புரிய வேண்டும்” என்று வேண்டிக் கொண்டாள். அதற்கு உடன்பட்ட திருமால், ஒரு சிறுவனாக உருமாறி, தன் சந்நிதியில் இருந்த பொன் வட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டு, தேவதேவியின் வீட்டிற்கு சென்றார். ‘’நான் அழகிய மணவாளதாசன். விப்ரநாராயணர் தங்களிடம் இதனை அளிக்கச் சொன்னார்” என்று கூறி, அப்பொன் வட்டிலை அவளிடம் அளித்தார். தேவதேவியும் மகிழ்ந்து மறுபடி விப்ரநாராயணரைத் தன் இல்லத்திற்கு வர அனுமதித்தாள்.

சிறைவாசமும் விடுதலையும்

மறுநாள் காலை, கோயிலில் அரங்கன் சந்நிதியில் பொன் வட்டிலைக் காணாமல், பட்டர் குழாம் அரசனிடம் முறையிட்டது. அரசன் ஆட்களை ஏவி நகர் முழுவதும் தேடச் செய்தான். இறுதியில் தேவதேவியின் வீட்டில் வட்டில் இருப்பதை அறிந்தான். தேவதேவியிடம் விசாரிக்க, அவள் விப்ரநாராயணர் அளித்ததாக் கூறினாள். அதனால் அவரே அதனைத் திருடியவர் என்று நினைத்த மன்னன், அவரிடம் விசாரணை செய்தான். விப்ரநாராயணர், “நான் எதுவும் அறியேன். எனக்கு ஏவலாளனும் இல்லை” என்று கூறினார். அதனை ஏற்காத மன்னன் அவரைச் சிறையில் அடைத்தான்.

அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய ரங்கநாதர், அனைத்தும் தன் திருவிளையாடலே என்பதை உணர்த்தி, விப்ரநாராயணரை உடனே விடுவதலை செய்யக் கட்டளையிட்டார். அரசனும் அவ்வாறே செய்தான்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

விப்ரநாராயணர் அரங்கனின் அருளை நினைத்து மனமுருகினார். இனித் தன் வாழ்நாள் முழுவதும் அரங்கனுக்கே ஆட்பட்டு இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டார். இறைவனுக்கான தொண்டை மறந்து கணிகையின் மயக்கத்தில் ஆழ்ந்திருந்ததற்காக மனம் வருந்தினார். வைணவ குலப் பெரியோர்களை அணுகி, தமது இழிசெயலுக்குப் பிராயச்சித்தம் செய்து வைக்குமாறு வேண்டினார்.

பெரியோர்களும் பல நூற்பொருள்களை ஆராய்ந்து, “பாவங்கள் யாவும் நீங்குவதற்கேற்ற பிராயச்சித்தம், பாகவதர்களுடைய திருவடித் தீர்த்தத்தை உட்கொள்வதே” என்று கூறினர். விப்ரநாராயணரும் அதனை ஏற்று, பாகவதர்களின் பாதத் தீர்த்தத்தைப் பருகித் தூய்மையானார்.

வைணவர்களுடைய திருவடித்துளியாய், அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்து அடிமை பூண்டொழுகியதால் ‘தொண்டரடிப்பொடி' என்ற திருநாமம் பெற்றார்

பிரபந்தங்கள்

இறைவனையே அனுதினமும் துதித்து வந்த தொண்டரடிப்பொடியாழ்வார், திருமால் மீது இரண்டு பிரபந்தங்களை இயற்றியுள்ளார். அவை,

திருமாலை - 45 பாசுரங்கள்

திருப்பள்ளியெழுச்சி - 10 பாசுரங்கள்

திருமாலை

திருமாலையில் இறைவனின் பெருமையையும், சிறியேனான தனது நிலையினையும், இறைவனின் ஆட்கொள்ளலையும் பல பாடல்களில் பாடினார்.

பச்சைமா மலைபோல் மேனிப்
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா! அமர ரேறே
ஆயர்தம் கொழுந்தே! என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகரு ளானே!

ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி
காரொளி வண்ணனே என் கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர்க் களைகண் அம்மா அரங்க மாநகருளானே.

திருப்பள்ளியெழுச்சி

திருப்பள்ளியெழுச்சி, அரங்கனைத் துயிலிலிருந்து எழுப்புவதற்காகப் பாடப்பட்டது.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்
கனை இருள் அகன்றது காலை அம் பொழுதாய்
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

மங்களாசாஸனம்

தொண்டரடிப்பொடியாழ்வார், இப்புவியில் உள்ள திருமால் மூர்த்தங்களில் திருவரங்கம் ரங்கநாதரையும், திருஅயோத்தி ஸ்ரீ ராமரையும் மட்டுமே பாடிய ஆழ்வார் என்ற பெருமை பெற்றார். (இவர், விண்ணுலகில் உள்ள திருப்பாற்கடல் நாதனையும் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்)

மறைவு

தொண்டரடிப்பொடியாழ்வார், திருவரங்கத்திலேயே இறைவனுக்கான திருத்தொண்டுகளைச் செய்து வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவெய்தினார்.

பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டும், அவரது மகள் ஆண்டாள் அருளிய திருப்பாவையும் தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சியும் பெரும்பாலான திருமால் கோயில்களில் விழாக்காலங்களில் தவறாது ஓதப்படுகின்றன.

வாழ்த்து

திருமால் கோயில்களில், விழாக்காலங்களில், ஆழ்வாரின் திருப்பாசுரங்கள் ஓதப்படும்போது கீழ்காணும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் மீதான வாழ்த்தும் ஓதப்படுகிறது.

மன்னுமதிள் திருமண்டங் குடிவந்தோன் வாழியே
மார்கழியில் நல்கேட்டை வந்துதித்தான் வாழியே
தென்னரங்க ரடியிணையே பற்றிநின்றான் வாழியே
திருமாலை ஐயொன்ப தருளினான் வாழியே
துன்னுபுகழ்த் திருப்பள்ளி யெழுச்சிசொன்னான் வாழியே
தொல்புகழ்சே ரன்பர்க்கே தொண்டுகொண்டான் வாழியே
தொன்னகரில் பொன்பாவைக் களித்தபிரான் வாழியே
தொண்டரடிப் பொடியாழ்வார் துணையடிகள் வாழியே!

உசாத்துணை