second review completed

சகுந்தலை விலாசம்

From Tamil Wiki
Revision as of 01:13, 30 December 2023 by Tamizhkalai (talk | contribs)
சகுந்தலை விலாசம்

சகுந்தலை விலாசம் (1845) சகுந்தலை – துஷ்யந்தன் வரலாற்றைக் கூறும் நூல். இதன் ஆசிரியர், இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர்.

பிரசுரம், வெளியீடு

சகுந்தலை விலாசம் 1845-ல் சென்னையிலுள்ள பாரதி அச்சுக்கூத்தில் பதிப்பிக்கப்பட்டது. இதன் ஆசிரியர், இராயநல்லூர் இராமச்சந்திர கவிராயர். இதன் இரண்டாம் பதிப்பு, 1856-ல், கல்விப்பிரகாச அச்சுக்கூடம் மூலம் வெளிவந்தது. தொடர்ந்து சகலகலாநிலய அச்சுக்கூடம் (1881), பிரபாகர அச்சுக்கூடம் (1883), விவேகவிளக்க அச்சுக் கூடம் (1885), சகலகலாநிலய அச்சுக்கூடம் (1885) போன்ற அச்சுக் கூடங்கள் மூலம் பல பதிப்புகள் வெளிவந்தன. 1897, 1901, 1903 ஆண்டுகளில் ஸ்ரீ பத்மநாபவிலாச அச்சுக்கூடம் மூலமும், ‘சகுந்தலை விலாசம்' நூலின் பல பதிப்புகள் வெளிவந்தன.

ஆசிரியர் குறிப்பு

சகுந்தலை விலாசம் நூலை இயற்றியவர், இராயநல்லூர் இராமச்சந்திரக் கவிராயர். இவர் 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இராயநல்லூரில் பிறந்து, சென்னையில் வாழ்ந்தார். இராமச்சந்திரக் கவிராயர், சென்னைக் கல்விச் சங்கத்தில் தமிழ்ப் புலவராகப் பணியாற்றினார். பிரான்சிஸ் வைட் எல்லிஸிற்குத் தமிழ் கற்பித்தார். தாண்டவராய முதலியாருடன் இணைந்து, சென்னைக் கல்விச் சங்கத்திற்காகப் பல பதிப்புப் பணிகளை மேற்கொண்டார்.

இராமச்சந்திரக் கவிராயர், 'தாருக விலாசம்', 'ரங்கூன் சண்டை நாடகம்', 'இரணிய வாசகப்பா', 'மகாபாரத விலாசம்' போன்ற நூல்களை எழுதினார். இவர் எழுதிய நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று, ’சகுந்தலை விலாசம்’. இந்நூல், ஜி. தேவரேஸ் என்பவரால், பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டது.

நூல் அமைப்பு

மகாபாரதத்தில், ஆதி பருவத்தில் சிறு நிகழ்ச்சியாகக் குறிப்பிடப்படும் சகுந்தலை – துஷ்யந்தன் கதையின் இசை, நாடக வடிவமே, சகுந்தலை விலாசம். இந்நூலில் வெண்பா, கொச்சகக் கலிப்பா, விருத்தப்பா, அகவல் போன்ற யாப்பு வகைகள் பயின்று வந்துள்ளன.

சகுந்தலை விலாசம் காப்புச் செய்யுள், விநாயக வணக்கம், திருமால் தோத்திரம், குரு வணக்கம், அவையடக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து சகுந்தலையின் பிறப்பு, வளர்ப்பு, துஷ்யந்தனுடன் சந்திப்பு, காந்தர்வ மணம், மன்னன் பிரிந்து செல்லல். அரண்மனைக்குச் சென்ற சகுந்தலையை மன்னன் புறக்கணித்தல், குழந்தை பரதன் பிறப்பு, வளர்ப்பு, இறுதியில் மன்னன் சகுந்தலையை பற்றிய நினைவு வந்து அவளை ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய நிகழ்வுகள் செய்யுள் வடிவில் இடம்பெற்றுள்ளன. பரதனுக்கு முடி சூட்டுவதுடன் சகுந்தலை விலாசம் நிறைவடைகிறது.

மதிப்பீடு

தஞ்சை மராட்டியர்களின் காலத்தை ஒட்டியும், அவர்கள் காலத்திற்குப் பின்பும் பல இசை நூல்கள், நாடக, நாட்டிய விளக்க நூல்கள் அறிமுகமாகின. அவற்றுள் ஒன்று சகுந்தலை விலாசம். சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்க இந்நூல், விலாச நூல்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாய் அமைந்துள்ளது.

சகுந்தலை விலாசம், நாடகமாக நடிப்பதற்கேற்ற வகையில், பாடல்களுடன் இசை நாடக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது

பாடல்கள்

காப்புச் செய்யுள் - இறை வணக்கம்

சீரார் மயிலை வளர்சின்ன துவேளீன்ற மணித்
தாரார் புயவணிக தானப்பன் - பேரால்
விருது சகுந்தலைவி லாசமதைப்பாடுதற்கு
கருது கஜமுகன்றாள் காப்பு

துஷ்யந்தனின் சீற்றம்

பழிமொழி யெழுதிக் கற்றுப் படிக்கின்ற பசப்புக் கள்ளி
மொழியுமுன் சமர்த்தாலிங்கே மோசம்போவார் களில்லைப்
பிழையிலா வேடம் பூண்டென் பிள்ளை யென்றழைத்து வந்தாய்
இழிவுறுபயலு நீயுமி விடம்விட்டேகு வீரே

சகுந்தலையின் புலம்பல்

பெரியோரிலையோ பெண்களையும் போற்றோரிலையோ மானமுள்ள
உரியோரிலையோ வென்ற னுக்கிங் கொருதிக்கிலையோ நீதிசொலும்
அரியோரிலையோ வொருவருக்கு மருளேயிலையோ யாதொன்றுந்
டெரியா வேழையென் பங்கிற்றெய்வ மிலையோ விதியே

துஷ்யந்தன் ஒப்புதல்

அனை வருங்கேளீர் முன்னே யடவியிற் றனித்தேயிந்த
வனிதையைச் சேர்ந்த துண்டு மற்றவரறியாரெந்தன்
மனைவிதான்மகன் றானிந்த வழுத்து மைந்தனுக்கு நாளைப்
புனைமணி மகுடஞ்சூட்டப் புனிதமோ புகலுவீரே

பரதனுக்கு முடி சூட்டுதல்

இன்னவை நிகழுங்காலை யெழுநில வேந்தர் சூழ
பன்னியமறையோர் வாழ்த்தப் பாவலர் புகழ்ந்து போற்ற
துன்னுபல்லிய முழங்கத் துஷ்டியந்த ராஜ னீன்ற
மன்னிய பரதனுக்கு மணிமுடி சூட்டினாரே

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.