under review

நவ கைலாயத் தலங்கள்

From Tamil Wiki
Revision as of 15:04, 27 December 2023 by ASN (talk | contribs) (Para Added and Edited: Image Added; Table Added: Link Created: Proof Checked.)

தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் நவ கைலாயத் தலங்கள் என அழைக்கப்படுகின்றன. இத்தலங்களைத் தரிசித்தால் நவக்கிரக தோஷங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் விடுபட்டு முக்தி அடையலாம் என்பது தொன்மம்.

நவ கைலாயத் தலங்கள்

நவ கைலாயத் தலங்கள் வரலாறு – தொன்மம்

பொதிகை மலையில் அகத்தியரின் சீடர்களுள் ஒருவரான உரோம மகரிஷி முக்திப் பேறு வேண்டித் தவம் செய்தார். சீடரின் தவத்தைக் கண்ட குருவான அகத்தியர், ”தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடிச் சிவபெருமானை வணங்க வேண்டும். பின்னர் நவகோள் வரிசையில் சிவபெருமானை வழிபட வேண்டும். அவ்வாறு செய்தால் முக்திப்பேறு நிச்சயம்” என்று ஆலோசனை கூறினார்.

நவகோள் வரிசையை எப்படி அறிவது என்று சீடர் உரோமர் கேட்க, அகத்தியர், ” ஒன்பது மலர்களை ஆற்றில் விடு. அவை எந்தெந்தக் கரையில் ஒதுங்குகிறதோ அங்கு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடு” என்று அறிவுறுத்தினார்.

சீடர் உரோமரும் அவ்வாறே செய்தார். அந்த ஒன்பது மலர்களும் கீழ்காணும் வரிசையில் கரை ஒதுங்கின.

முதல் மலர் பாபநாசத்தில் கரை ஒதுங்கியது. அது சூரிய தலமாகப் போற்றப்படுகிறது.

இரண்டாவது மலர் சேரன்மாதேவியில் கரை ஒதுங்கியது. அது சந்திரத் தலமாகும்.

மூன்றாவது மலர் கோடகநல்லூரில் கரை ஒதுங்கியது. அது செவ்வாய்த் தலமாகப் போற்றப்படுகிறது.

நான்காவது மலர் குன்னத்தூரில் கரை ஒதுங்கியது. அது ராகுத் தலமாக் கருதப்படுகிறது.

ஐந்தாவது மலர் முறப்பநாட்டில் கரை ஒதுங்கியது. அது குருத் தலமாகப் போற்றப்படுகிறது.

ஆறாவது மலர் ஸ்ரீவைகுண்டத்தில் கரை ஒதுங்கியது. அது சனைச்சரனுக்குரிய தலமாக உள்ளது.

ஏழாவது மலர் தென்திருப்பேரையில் கரை ஒதுங்கியது. அது புதன் தலமாகும்

எட்டாவது மலர் ராஜபதியில் கரை ஒதுங்கியது. அது கேதுத் தலமாக அமைந்துள்ளது.

ஒன்பதாவது மலர் சேர்ந்தபூமங்கலத்தில் கரை ஒதுங்கியது. அது சுக்கிரத் தலமாகப் போற்றப்படுகிறது.

மேற்கண்ட ஒன்பது கிரகங்களுக்குரியதாகக் கருதப்படும் தலங்களே நவ கைலாயத் தலங்களாகப் போற்றப்படுகின்றன.

நவ கைலாயத் தலங்கள் - அமைவிடம்

எண் நவக்கிரகத் தலம் தலம் அம்சம் நட்சத்திரம் மூலவர் அம்பாள் அமைவிடம்
1 சூரியத் தலம் பாபநாசம் சூரியன் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர் ஸ்ரீ உலகாம்பிகை திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவு.
2 சந்திரத் தலம் சேரன்மகாதேவி சந்திரன் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஸ்ரீ அம்மைநாதர் ஸ்ரீ ஆவுடைநாயகி திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவு.
3 செவ்வாய்த் தலம் கோடகநல்லூர் செவ்வாய் மிருகசிரீஷம், சித்திரை, அவிட்டம் ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ சிவகாமி திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லூருக்கு தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவு
4 ராகுத் தலம் குன்னத்தூர் ராகு திருவாதிரை, சுவாதி, சதயம் ஸ்ரீ கோதா பரமேஸ்வரர் ஸ்ரீ சிவகாமி திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவு.
5 குருத் தலம் முறப்பநாடு குரு புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ சிவகாமி திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவு
6 சனித் தலம் ஸ்ரீ வைகுண்டம் சனி பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ சிவகாமி திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவு
7 புதன் தலம் தென் திருப்பேரை புதன் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ அழகிய பொன்னம்மை ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவு
8 கேது தலம் ராஜபதி கேது அசுவதி, மகம், மூலம் ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ அழகிய பொன்னம்மை தென்திருப்பேரை கோவிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவு
9 சுக்கிரன் தலம் சேர்ந்த பூமங்கலம் சுக்கிரன் பரணி, பூராடம், பூரம் ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ சௌந்தர்ய நாயகி திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு

நவ கைலாயத் தல தரிசனம்

நவ கைலாயத் தலங்கள் அனைத்தும் தாமிரபரணி ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. இத்தலங்கள் ஒன்பைதயும் ஒரே நாளில் தரிசித்து விட முடியும். பக்தர்களின் வசதிக்காக மார்கழி மாதத்தில் காலை தொடங்கி இரவுக்குள் தரிசித்து முடிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலியில் பயணம் தொடங்கி மீண்டும் திருநெல்வேலியிலேயே இந்தப் பயணம் முடிவடைகிறது.

வழிபாட்டுப் பலன்

இந்த ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தைத் தரிசித்த பலன் உண்டு என்பதும், முக்திப் பேறு கிட்டும் என்பதும் தொன்மம்.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.