under review

நாயக வெண்பா

From Tamil Wiki
Revision as of 21:47, 24 December 2023 by ASN (talk | contribs) (Para Added and Edited: Link Created: Proof Checked.)

நாயக வெண்பா (1968) இஸ்லாமியக் காப்பிய நூல்களுள் ஒன்று. நபிகள் நாயகத்தின் வரலாற்றினை வெண்பாவில் கூறும் இந்நூலை, பனைகுளம் மு. அப்துல்மஜீத் புலவர் இயற்றினார். இந்நூல், மூன்று காண்டங்களையும், 632 வெண்பாக்களையும் கொண்டது.

பிரசுரம், வெளியீடு

நாயக வெண்பா நூலை, பனைகுளம் மு. அப்துல்மஜீத் புலவர், 1968-ல். நூலாக அச்சிட்டு வெளியிட்டார்.

ஆசிரியர் குறிப்பு

பனைகுளம் மு. அப்துல்மஜீத் புலவர், ராமநாதபுரம் மாவட்டத்தின் பனைக்குளம் என்னும் ஊரைச் சேர்ந்தவர். 1897-ல் பிறந்த இவர் தமிழ்க் கல்வியும், மார்க்கக் கல்வியும் முறையாகப் பயின்றார். முதுபெரும் தமிழ்ப் புலவராகப் போற்றப்பட்டார். நபிபெருமானின் வரலாற்றை வெண்பாவில் ‘நாயக வெண்பா’ என்ற தலைப்பில் எழுதி வெளியிட்டார். கவிப்பூஞ்சோலை, இலக்கியப்பூங்கா, தமிழ்நாட்டு இஸ்லாமியப் புலவர்கள், பெருமானார் அருள் வேட்டல் போன்றவை மு. அப்துல்மஜீத் புலவர் எழுதிய பிற நூல்கள்.

நூல் அமைப்பு

நாயக வெண்பா நூல் மூன்று காண்டங்களைக் கொண்டது.

அவை,

  • விலாதத்துக் காண்டம்
  • நுபுவ்வத்துக் காண்டம்
  • ஹிஜ்ரத்துக் காண்டம்

உள்ளடக்கம்

நாயக வெண்பாவில் 632 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. நபிகள் பெருமானின் பிறப்பு, வளர்ப்பு, பெருமைகள் வெண்பா வடிவில் கூறப்பட்டுள்ளன.

மதிப்பீடு

நபிகள் நாயகத்தின் வரலாற்றை, வெண்பா வடிவில், எளிய தமிழில் கூறும் நூல் நாயக வெண்பா. முகம்மது நபி அவர்களைக் காப்பியத் தலைவராகக் கொண்டு மரபுக் கவிதை வடிவில் இயற்றப்பட்ட நான்கு நூல்களுள் ‘நாயக வெண்பா’ நூலும் ஒன்று. (பிற: நெஞ்சில் நிறைந்த நபிமணி, இறை பேரொளி நபிகள் நாயகம்-அருட் காவியம், ஞானவொளிச் சுடர்) இருபதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இஸ்லாமியத் தமிழ்க் காப்பியங்களுள் குறிப்பிடத் தகுந்த நூலாக நாயக வெண்பா மதிப்பிடப்படுகிறது.

பாடல்கள் நடை

நபிகளின் இல்வாழ்க்கை

அறநெறிக்கு வித்தாய் அருளிருக்கும் வீடாய்

மறநெறிகள் போக்கும் மருந்தாய் - திறநெறிசேர்

ஆண்டகையும் நாயகியும் அன்பால் பிணிப்புண்டு

காண்டகையர் ஆனார் கனிந்து

அரபு நாட்டுச் சாலைகளின் சிறப்பு

பாடுகின்ற சாலை பசுந்தொடியார் கூடிப்பந்து

ஆடுகின்ற சாலை அறச்சாலை - நீடியநல்

தேர்நடத்துஞ் சாலை சிறந்த நகர்க்காவல்

போர்நடத்துஞ் சாலை புறத்து

போரின் தன்மை

புனலில் புனல்பு குந்தது போலும்

அனலில் புயல்புகுந் தாற்போல் - சினந்தனர்கள்

தீனவரும் மக்கத் திருநகர் செம்மையில்

யீனவரும் முன்னே எதிர்த்து.

பாலை நிலத்தின் தன்மை

அறநெறிக்கு வித்தாய் அருளிருக்கும் வீடாய்

மறநெறிகள் போக்கும் மருந்தாய் - திறநெறிசேர்

ஆண்டகையும் நாயகியும் அன்பால் பிணிப்புண்டு

காண்டகையர் ஆனார் கனிந்து

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.