நா.கதிரைவேற் பிள்ளை
நா.கதிரைவேற் பிள்ளை (டிசம்பர் 21, 1871 - 1907 ) மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளை. இலங்கைத் தமிழறிஞர். சைவ அறிஞர். இலக்கண ஆய்வு, அகராதிப்பணி, பதிப்புப்பணி ஆகியவற்றில் ஈடுபட்டார். பெரும்பாலும் சென்னையில் வாழ்ந்தார். சைவத்தின் பொருட்டு கண்டன இலக்கிய நூல்களை வெளியிட்டார். இராமலிங்க வள்ளலாருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே நடந்த அருட்பா மருட்பா விவாதத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி நடத்தியவர்.
பிறப்பு, கல்வி
கதிரைவேற்பிள்ளை பருத்தித்துறை, மேலைப்புலோலியில் நாகப்பபிள்ளை - சிவகாமி அம்மையாருக்கும் 1871-ஆம் ஆண்டு பிறந்தார். மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆறுமுக நாவலரின் மாணவராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் மரபுவழியில் தமிழ் கற்றார்
யாழ்ப்பாணத்தில் நோட்டரிசு சிதம்பரம் பிள்ளையிடம் குமாஸ்தாவக் பணிபுரிந்தார். ஓர் ஆரம்பப் பள்ளியில் சிறிதுகாலம் ஆசிரியராக இருந்தார்.
மேலும் தமிழ் பயிலும்பொருட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு வந்த கதிரைவேற்பிள்ளையை தி.த.கனகசுந்தரம்பிள்ளை மாணவராக ஏற்றுக்கொண்டார். சென்னையில் சூளை சோமசுந்தர நாயகர் அவர்களின் மாணவராகி சைவசித்தாந்தமும் கற்றார்
தனிவாழ்க்கை
கதிரைவேற் பிள்ளையின் இயற்பெயர் வேலுப்பிள்ளை என்றும் சென்னைக்கு வந்தபின் அவர் தன் பெயரை கதிரைவேற்பிள்ளை என்று மாற்றிக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது (கதிரைவேற்பிள்ளை உண்மைச் சரித்திரம். தஞ்சை சண்முகம் பிள்ளை 1909) கதிரைவேற்பிள்ளை சென்னை முத்தியாலுப்பேட்டை ரிப்பன் அச்சகத்தின் அதிபர் சிவசங்கரன் செட்டியாரின் பழக்கத்தால், தாள் திருத்தும் பணியை செய்தார். 1897ல் சிறிது காலம் வெஸ்லி கல்லூரியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். அங்கே திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் இவரிடம் தமிழ் கற்றார். வெப்பேரி உயர்நிலைப் பள்ளி, செந்தோம் உயர்நிலைப்பள்ளியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆரணி சம்ஸ்தான வித்வானாகவும் பணியாற்றினார்.
யாழ்ப்பாணத்தில் இருக்கையில் கோவிந்தப்பிள்ளை என்பவரின் மகள் வடிவாம்பிகையை மணந்தார். ஒரு மகள், சிவஞானாம்பிகை.
இலக்கிய வாழ்க்கை
சென்னையில் கதிரைவேற்பிள்ளை இரண்டு வகை இலக்கியப் பணிகளைச் செய்தார். சைவநூல்களுக்கும் நைடதம் போன்ற நூல்களுக்கும் உரை எழுதி பதிப்பித்தார். தமிழகராதி ஒன்றை உருவாக்கினார். கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு கலம்பக நூல் ஒன்று எழுதினார். இன்னொரு பக்கம் மாற்றுமதங்களை கண்டித்து சிறு கண்டன வெளியீடுகளை வெளியிட்டார். அவை அவருக்கு புகழ் அளிக்கவே அவற்றை ஒட்டி சைவச்சொற்பொழிவுகள் ஆற்றினார். அவருடைய முதன்மையான ஊதியம் இச்சொற்பொழிவுகளில் இருந்தே கிடைத்தது.
சைவநூல்கள்
கதிரைவேற்பிள்ளை நைடதத்திற்கு உரை எழுதினார். கதிர்காம கலம்பகம் இயற்றினார். பழனித் தலப் புராணம், திருவருணைக் கலம்பகம், சிவராத்திரிப் புராணம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதினார்.அதிவீரராம பாண்டியர் இயற்றிய தமிழ்க் கூர்ம புராணத்திற்கு விளக்கவுரை எழுதினார். சிவஷேத்திராலய மகோற்சவ விளக்கம், திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரிதவசனச் சுருக்கம், ஏகாதசிப் புராணத்திற்கு அரும்பதவுரை ஆகிய நூல்களையும் எழுதினார்.
கண்டனநூல்கள்
கதிரைவேற்பிள்ளை மாயாவாதம், பௌத்தம், வைணவம் ஆகியவற்றை கடும் சைவநிலைபாட்டில் நின்று கண்டனம் செய்தார். தொடக்கத்தில் அவர் மாயாவாத (அத்வைத) கண்டனமே செய்துவந்தார். ஏனென்றால் சென்னையில் ஸ்மார்த்த பிராமணர்களின் மடங்களான சிருங்கேரி , காஞ்சி இரண்டுமே அத்வைத மடங்கள். அவர்களுக்கு எதிரான குரலாக அவர் ஒலித்தார். 12-ஆகஸ்ட் 1897ல் அவருக்கு காசிவாசி செந்திநாதையர் தலைமையில் ‘மாயாவாத தும்ச கோளரி’ என்னும் பட்டப்பெயர் அளிக்கப்பட்டது. சூளை சோமசுந்தர நாயகர் ஏற்கனவே செய்துவந்த கண்டனத்தை கதிரைவேற் பிள்ளை முன்னெடுத்தார்.
பின்னர் அவர் வைணவர்களையும் கண்டித்துப் பேசவும் கண்டன வெளியீடுகளை பிரசுரிக்கவும் தொடங்கினார்.1900 த்தில் கதிரைவேற்பிள்ளை வெளியிட்ட ‘வைச பூஷண சந்திரிகை’ என்னும் கண்டனநூலில் விஷ்ணுவும் விபூதி அணிபவரே என வாதிட்டார். அது வைணவர்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. வைணவர்கள் 7 ஜூலை 1901 ல் அவரை புரசைவாக்கம் சீனிவாசப்பெருமாள் கோயிலில் பொதுவிவாதத்துக்கு அழைத்தனர். ஸ்ரீஅழகிய மணவாள இராமானுஜ ஏகாங்கியார் அவரை எதிர்கொள்வார் என சொல்லப்பட்டது. ஆனால் அங்கே சென்றபோது கண்ணில்லாத ஒருவரை அவருக்கு எதிராக நிறுத்தினர். அந்தகரோடு விவாதிக்க நூல் அனுமதி இல்லை என கதிரைவேற்பிள்ளை திரும்பிவிட்டார்.
1902 ஜனவரி வரை ஏழுமாதக் காலத்தில் எந்த வைணவர் வேண்டுமென்றாலும் கதிரைவேற் பிள்ளையிடம் நேரில் வாதிடலாம் என அறைகூவப்பட்டது. ஆனால் வைணவர்கள் அவரை புறக்கணித்தனர். இதையொட்டி விஷ்ணுவும் விபூதி ருத்ராக்க தாரணரே, சீதரதியான நிரூபணம், தசாவதார கிக்ஷாரக்ஷணியம், திராவிடவேத விபரீதார்த்த திரஸ்கார கண்டனம், அரங்கேற்றாபாசம், சைவபூஷண சந்திரிகை சமயச்சிறப்பு, சிவ சின்ன விஜயம், விவாத மத்யஸ்த பத்ரம், வெளிப்படுத்தினார்க்கு ஒரு நல்விடை, ஆழ்வாரருளிச்செயல் பார்த்த விசார தண்டனம், வைணவவிப்ரலம்பம், ஜயத்துவச கண்டனம், வைணவர்களுக்கு புத்திபுகட்டல் என ஏறத்தாழ முப்பது கண்டன வெளியீடுகள் கதிரைவேற் பிள்ளை தரப்பினரால் வெளியிடப்பட்டன. (பொ.பூலோகசிங்கம். கதிரைவேற்பிள்ளை வரலாறு)
1903 ல் கதிரைவேற்பிள்ளை புத்தமத கண்டனம் என்னும் நூலை எழுதி வெளியிட்டார். அப்போது சென்னையில் அயோத்திதாசர், லட்சுமிநரசு முதலியோர் அடங்கிய சாக்கியசங்கம் முன்னெடுத்த நவபௌத்தச் செயல்பாடுகள் விசைகொண்டிருந்தன. தமிழக வேளாளர்கள் தாங்கள் சூத்திரர்கள் அல்ல வைசியர்கள் என வாதிட்டு வந்ததை கண்டித்து அவர்கள் நான்காவர்ணத்தவராகிய சூத்திரரே என்று கதிரைவேற்பிள்ளை வாதிட்டார்.
பலமதங்களையும் கண்டித்த கதிரைவேற்பிள்ளை கிறிஸ்துவமதத்தை கண்டிக்கவில்லை. அவருடைய ஆசிரியராகிய ஆறுமுகநாவலர் கிறிஸ்தவ மத கண்டனம் செய்தவர். சென்னையில் அப்போது கிறிஸ்தவ அமைப்புகள் மிகுந்த ஊக்கத்துடன் செயலாற்றிக்கொண்டிருந்தனர். அவர்கள் சைவமதத்தை கண்டித்தும் வந்தனர். கதிரைவேற்பிள்ளை கிறிஸ்தவ மதத்தை கண்டிக்காமைக்குக் காரணம் இரண்டு என அவரை விமர்சிப்போர் குறிப்பிட்டனர். ஒன்று வெஸ்லி கல்லூரி உட்பட பல வாய்ப்புகளை அவர் அவர்களிடமிருந்து பெற்றார். இரண்டு, அவர்மேல் அடிதடி ,நிதிமோசடி உட்பட குற்றவழக்குகள் இருந்தன. அவர் அரசுநடவடிக்கையை அஞ்சினார். (தஞ்சை சண்முகம் பிள்ளை- கதிரைவேற்பிள்ளை உண்மை சரித்திரம்)
அருட்பா மருட்பா விவாதம்
கதிரைவேற்பிள்ளையின் கண்டன வெளியீடுகளில் முக்கியமானது அருட்பா மருட்பா விவாதம். இதில் அவர் வடலூர் இராமலிங்க வள்ளலார் எழுதியவை அருட்பாக்கள் அல்ல என வாதிட்டார். அதன்பொருட்டு நீதிமன்ற வழக்குகளும் நடைபெற்றன (பார்க்க அருட்பா மருட்பா விவாதம் )
அகராதிப்பணி
சென்னை வாழ் தமிழறிஞர் பலருடைய வேண்டுகோளுக்கிணங்கத் தமிழ் அரகராதி ஒன்றை உருவாக்கினார். வெளியிட்டார். இவ்வகராதியின் பெருமையைப்,
“ | பூவில் இடைகடை ஆதி எழுத்தின் முன்பேருறப்
யாவும் இடைகடை எனவே யாழ்ப்பாணப்
பாவுபுதுச் சந்நிதியான் அருட் கதிரைவேற்
மேவும் அகராதியிதே முதலதெனக் கிதின்பெய
|
” |
என்று தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் புகழ்ந்திருக்கிறார்.
சதாவதானம்
ஒருவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்தால் சதாவதானி என்பர். . கதிரைவேற்பிள்ளை முதலில் யாழ்ப்பாணம் மேலைப்புலோலி கந்தசுவாமி கோவிலில் நன்னூல் காண்டிகையுரை ஆசிரியர் வித்துவான் அ. குமாரசாமிப் புலவர் தலைமையில் 18 அவதானங்களை செய்து முடித்தார். பின்னர் சென்னையில் லெட்சுமிவிலாச நாடகசாலையில் பாலசரசுவதி ஞானானந்த சுவாமிகள் தலைமையில்,
- வேலும் மயிலும் துணையென நவிலல்
- இலாட சங்கிலி கழற்றல்
- சிலேடைக் கட்டளைக் கலித்துறை, சிலேடை வெண்பா, நீரோட்டகம் முதலியன
- 6 இலக்கண விடை உபந்நியாசம்
- இரண்டறக் கலத்தல் உபந்நியாசம்
- பாரதச் செய்யுளுரை
- இங்கிலீஷ் கண்டப் பத்திரிக்கை வருடந்தேதி, பிறந்த நாள், இலக்கினம், பிறந்த நட்சத்திரம் முதலியவை
- எண் கணக்கில் கூட்டல் 1, கழித்தல் 1, பெருக்கல் முதலியவை
இவற்றை செய்து முடித்து சதாவதானியென்ற பட்டத்தைப் பெற்றார்.
மறைவு
மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவராகத் திகழ்ந்த கதிரைவேற்பிள்ளை அடிக்கடி சென்னையிலிருந்து நீலகிரி சென்று வந்தார். 1907 ஆம் ஆண்டில் நீலகிரி சென்றபோது, அங்கு கடுஞ்சுரத்தால் உடல் நலிவுற்று இறந்தார்.
விருதுகள்
தமிழ்நாட்டுச் சைவ மடங்களாலும், குறுநில மன்னர்களாலும், புரவலர்களாலும் வழங்கப் பெற்ற பட்டங்கள்
- நாவலர்
- சைவசித்தாந்த மகாசரபம்
- அத்துவித சித்தாந்த மகோத்தாரணர்
- மகாவித்துவான்
- பெருஞ்சொற்கொண்டல்
வாழ்க்கை வரலாறுகள்
- திரு. வி. கல்யாணசுந்தர முதலியார் - யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் சதாவதானி நா கதிரைவேற்பிள்ளை சரிதம்
- புரசை முனிசாமி நாயகர் குமாரர் பாலசுந்தர நாயகர் சதாவதானம் யாழ்ப்பாணம் நா. கதிரைவேற்பிள்ளை (1908) அஞ்சலி தொகுப்பு
- கா.சி.குலரெத்தினம் செந்தமிழ்ச் செல்வர் நா. கதிரைவேற்பிள்ளை
- புற்றளைபெரியதம்பி ஐங்கரன், ஐங்கரன் சுலோஜனா-பேரறிவுசுடர் சதாவதானி நா.கதிரைவேற்பிள்ளை புற்றளை கந்தமுருகேசனார் சனசமூக நிலையம்
நூல்கள்
செய்யுள்
- பட்டினத்துப் பிள்ளையார் புராண மூலமும் உரையும்
- கதிர்காம கலம்பகம்
- சிவஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம்
- திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரிதவசனச் சுருக்கம்
- கந்தர் தவமணி மாலை
- சுப்ரமணிய அட்டகம்
- புதுச்சன்னிதி கந்தர் பிள்ளைத்தமிழ்
சிவயோகதீபிகை
உரை
- சைவபூஷண சந்திரிகை
- தமிழ்ச்சொல்லகராதி
- பழனித் தலப் புராணம்
- திருவருணைக் கலம்பகம்
- சிவராத்திரிப் புராணம்
- கூர்ம புராண விருத்தியுரை
- ஏகாதசிப் புராணம் அரும்பதவுரை
- நைடத விருத்தியுரை
- சுப்பிரமணிய பராக்கிரமம்
- சூடாமணி நிகண்டு
- சைவசித்தா3த சங்கிரகம்
- கந்தபுராண சாரம்
- சித்தாந்த சாதனம்
- குமார தரிசனம்
- தகராலயரகசிய விருத்தியிரை
- வைணவ வயாப்பு
- துவிமத கண்டன மறுப்பு
- தமிழ்வேத நிந்தை மறுப்பு
- இருசமய விளக்கச் சூறாவளி
உசாத்துணை
- கதிரைவேற்பிள்ளை தமிழ்ச்சொல்லகராதி இணைய நூலகம்
- https://1lib.in/book/3021241/b4f32e?dsource=recommend
- சதாவதானம் பற்றிய செய்தி
- https://noolaham.net/project/538/53773/53773.pdf
- https://worldtamilforum.com/historical_facts/na-kathiraiverpillai/
- சதவதானி கதிரைவேற்பிள்ளைF/
- நா.கதிரைவேற்பிள்ளை அவர்கள் இயற்றிய சைவ பூஷண சந்திரிகை
- கதிரைவேற்பிள்ளை சரித்திரம், திருவிக. இணையநூலகம்/
- சைவபூஷண சந்திரிகை, இணையநூலகம்
- கதிரைவேற்பிள்ளை சரித்திரம் இணையநூலகம்
- கதிரைவேற்பிள்ளை பேரன்- செய்தி
- https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZUdjupy#book1/
- தஞ்சை சண்முகம் பிள்ளை- கதிரைவேற்பிள்ளை உண்மை சரித்திரம். புதுமை சைகோன் சின்னையா அச்சியந்திரசாலை பாண்டிச்சேரி