கோவிலடி லக்ஷ்மணப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 11:43, 3 March 2022 by Subhasrees (talk | contribs) (கோவிலடி லக்ஷ்மணப்பிள்ளை - முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கோவிலடி லக்ஷ்மணப்பிள்ளை (1837 - அக்டோபர் 18,1919) கோவிலடி ரங்கநாத பெருமாளுக்கு நாதஸ்வர கைங்கர்யம் செய்த நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள திருப்பேர்நகர் என்ற சிற்றூரில் ‘அப்பக்குடத்தான்’ ரங்கநாத பெருமாள் கோவிலுக்கு வழிவழியாக நாதஸ்வர கைங்கர்யம் செய்த இசைக்குடும்பத்தில் ஆனந்தவல்லியம்மாள் என்பவரின் இரண்டாவது மகனாக 1837ஆம் ஆண்டு லக்ஷ்மணப்பிள்ளை பிறந்தார்.

தியாகராஜரின் நேரடி மாணவரும் நாதஸ்வரக் கலைஞருமான திருவையாறு சிங்காரம் பிள்ளையிடம் எட்டு ஆண்டுகள் இசை கற்றார். பின்னர் முத்துஸ்வாமி தீட்சிதர் கீர்த்தனைகளைக் கற்க தீட்சிதரின் மாணவரான தம்பியப்ப நட்டுவனாரிடம் பதினொரு மாதங்கள் கற்றார்.

தனிவாழ்க்கை

லக்ஷ்மணப்பிள்ளைக்கு முன் பிறந்த பரிமளரங்கம் சிறுவயதிலேயே இறந்து விட்டார். லக்ஷ்மணப்பிள்ளைக்கு இரு தங்கைகள்:

  • அகிலாண்டம் - கணவர்: திருப்பராய்த்துறை குப்புஸ்வாமி பிள்ளை
  • தனபாக்கியம் - கணவர்: பாபநாசம் ஸ்வாமிநாத பிள்ளை (தவில்)

திருப்பராய்த்துறை நல்லதம்பி நட்டுவனாரின் மகள் ஸ்வர்ணத்தம்மாள் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள். ஸ்வர்ணத்தம்மாள் சிலகாலம் கழித்து காலமானதும் திருப்பைஞ்ஞீலி குப்புஸ்வாமி பிள்ளையின் சகோதரியை மணந்தார். இவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தையும் இரண்டு வயதில் காலமானது. இரண்டாவது மனைவியும் சிறிது காலத்தில் மறைந்தார்.

இசைப்பணி

லக்ஷ்மணப் பிள்ளை கோவிலடி ரங்கநாதப் பெருமாள் கோவிலின் நாதஸ்வர இசைக்கலைஞராக இருந்தார். இவருடைய வாசிப்புத் திறனால் பல ஊர்களில் இருந்து அழைப்பு வந்தது. போடிநாயக்கனூர் ஜமீந்தார், லக்ஷ்மணப் பிள்ளையை ஆஸ்தான அவைக்கலைஞராக்கினார். புதுக்கோட்டை மன்னர் அளித்த தங்கத் தோடாக்கள், ராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க சேதுபதி அளித்த தங்கப்பதக்கங்கள் போன்ற பரிசுகள் பெற்றவர்.

கச்சேரிகளில் தியாகராஜர், தீட்சிதர் ஆகியோரின் கீர்த்தனைகள் கட்டாயம் வாசிப்பார். இவரது சங்கராபரண ராக ஆலாபணை மிகவும் சிறப்பாக இருக்கும்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

கோவிலடி லக்ஷ்மணப்பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

  • திருப்பராய்த்துறை சின்னப்பபிள்ளை
  • லால்குடி அங்கப்பப் பிள்ளை
  • பாபநாசம் ஸ்வாமிநாத பிள்ளை
மாணவர்கள்

கோவிலடி லக்ஷ்மணப்பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:

  • ஆறுமுகம் பிள்ளை (லக்ஷ்மணப்பிள்ளையின் தங்கை அகிலாண்டம்மாளின் மகன்)
  • திருநெடுங்களம் கந்தசாமிப் பிள்ளை
  • புதுச்சத்திரம் அங்கப்ப பிள்ளை
  • ஸ்ரீரங்கம் துரைக்கண்ணுப் பிள்ளை

மறைவு

கோவிலடி லக்ஷ்மணப்பிள்ளை அக்டோபர் 18,1919 அன்று கோவிலடியில் காலமானார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013