சார்ல்ஸ் மீட்
சார்ல்ஸ் மீட் (1792 -1873 ) லண்டன் மிஷன் மதப்பரப்புநர், கல்வியாளர். தென்திருவிதாங்கூரில் கிறிஸ்தவ மதத்தை பரப்பியவர். தென்திருவிதாங்கூரில் ஆங்கிலக் கல்விக்கு அடித்தளமிட்டவர். நாகர்கோயிலில் மிஷன் பணிகளை நடத்திய மீட் நாகர்கோயிலின் சிற்பி என அழைக்கப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
சார்ல்ஸ் மீட் 2 அக்டோபர் 1792 ல் இங்கிலாந்தில் கிளொஸ்டர் மாகாணத்தில் உள்ள பிரிஸ்டல் நகரில் (Bristol, Gloucester ) ஆங்கிலிகன் சபையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்தார். அவருடைய தாய்மாமன் ஜான் ஹண்ட் (Rev.John Hunt) வேக்ஃபீல்டில் போதகராக இருந்தார். யார்க்ஷயரில் காஸ்பல் மிஷனரி பள்ளியில் மீட் பயின்றார். 6 மார்ச் 1816 ல் அவர் குரு பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
மீட் தன் மாமன் ஜான் ஹண்டின் மகளை ஆன் ஹண்ட் ஐ மணந்துகொண்டார். சென்னைக்கு வந்தபோதே நோயுற்றிருந்த அவர் மனைவி ஆன் ஹண்ட் கப்பல்பயணத்தில் மேலும் துன்புற்று பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் தீவில் கப்பல் நின்றபோது ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டு உயிர்துறந்தார். தன் முதல் மகன் ஜான் ஹண்ட்டுடன் அவர் குளச்சலுக்கு வந்தார்.
தஞ்சாவூரில் மதப்பணி நடத்திவந்த ஹோர்ஸ்ட்டின் மகள் ஜோகன்னா செலோஸ்டினா (Johanna Coelestina) என்பவரை இரண்டாவதாக மணம் புரிந்துகொண்டார். இவர்தான் தென் திருவிதாங்கூரில் வேலைசெய்த முதல் மிஷனெறி பெண்மணி. இவர் நாகர்கோயிலில் பெண்கள் கல்விக்கும், பெண்களின் கைத்தொழில் வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பாற்றியவர்.
மீட்டின் மனைவி ஜோகன்னா ஈரல் நோயால் பாதிக்கப்பட்டு 6 பெப்ருவரி 1848ல் தன் 45-ம் வயதில் நெய்யூரில் மரணமடைந்தார். மீட் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தேவரம் முன்ஷி என்பவருடைய மகள் லாயிஸ் பிடால்ப் என்ற இந்தியப் பெண்ணை திருமணம் செய்தார் அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தனர்.
மீட் இந்தியப் பெண்ணை திருமணம் செய்ததை ஐரோப்பிய மிஷனரிகள் விரும்பவில்லை . இந்தியக் கிறிஸ்தவர்களும் அநேக சபைகளில் எதிர்ப்பு தெரிவித்தனர் ஆகவே மீட்1852 ஏப்ரல் மாதம் மிஷன் ஊழியத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் அப்போது திருவிதாங்கூரிலிருந்த ரெசிடென்ட் அவருக்கு அரசாங்கத்தில் வேலை கொடுத்தார் எனவே அவர் திருவனந்தபுரத்தில் தங்கியிருந்தார். அவர் தங்கிவந்த இடம் மீட்ஸ் காம்பௌண்ட் என்று அழைக்கப்படுகிறது மீட் அங்குள்ள அரசாங்க அச்சுக்கூட மேலதிகாரியாகவும் ஆங்கில பள்ளி்க்கூட இன்ஸ்பெக்டராகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து C.M.S. ஆங்கில சபையிலும் ஊழியம் செய்து வந்தார்
மீட் மூன்று மனைவிகளிலாக பதினைந்து குழந்தைகளின் தந்தை.
- ஜான் ஹண்ட் மீட்
- தியோடர் மீட்
- ஜோசப் மீட்
- சோபியா ஸ்டெம்னெட்
- ஃப்ளோரென்ஸ் மீட்
- ரேச்சல் மீட்
- ஆன் காம்ம்ரெர் மீட்
- கிறிஸ்தோபர் கார்னீலியஸ் மீட்
- நதானியேல் மீட்
- எயூஸ்பியுஸ் மீட்
- ஜேம்ஸ் மீட்
- மேரி ஆன் மீட்
- ஜோனா கார்லொட்டா ஆகூர்
- ஜான் ஜேம்ஸ் மீட்
- செலெஸ்டினா ஃப்லோரென்ஸ் கோல்கோஃப்
மதப்பணி
லண்டன் மிஷன் சொசைட்டியில் மதப்பரப்புநராகச் சேர்ந்த மீட் (London Mission Society) நாகர்கோயிலில் பணியாற்றி வந்த ரெவெ ரிங்கல்தொபே (Rev.Ringeltaube) மறைவுக்குப்பின் அவருடைய இடத்துக்கு பரிந்துரைக்கப்பட்டார். மனைவியுடன் 20 ஏப்ரல் 1816 ல் கிளம்பி 28 ஆகஸ்ட் 1816 ல் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தார். அவருடன் ரெவெ.ரிச்சர்ட் நீல் வந்தார் .
சென்னையில் மீட் மதராஸ் மாகாணத்தின் முதல் ஆங்கில மிஷனரியான ரெவெ லவ்லெஸ் (Rev.Loveless) வீட்டில் தங்கி தமிழ் கற்றார். அவர் மனைவி உடல்நலம் குன்றி மருத்துவச் சிகிச்சையில் இருந்தார். திருவிதாங்கூர் ரெசிடெண்ட் ஆக இருந்த கர்னல் மன்றோவுக்கு தன் வரவை எழுதி அறிவித்தபின் 9 செப்டெம்பர் 1817 ல் திருவிதாங்கூருக்கு கிளம்பினார். 17 ஜனவரி 1818 ல் குளச்ச்சலை வந்தடைந்தார். வழியில் அவர் மனைவி மறைந்தார்.
குளச்சலில் ஏற்கனவே ரிங்கல்தௌபேயால் மதமாற்றம் செய்யப்பட்ட வேதமாணிக்கம் உபதேசியாரும் பிற ஊழியர்களும் அவரை வரவேற்று மைலாடிக்கு அழைத்துச்சென்றனர். ரிங்கல்தௌபே தொடங்கிய மதப்பணி மைலாடியில் சிறப்பாக நிகழ்வதை மீட் பார்த்தார். அங்கே ரிங்கல்தௌபே இருந்த குடிசையில் அவரும் தங்கினார். அவருக்கு மைலாடி அரசு மாளிகையை பின்னர் கர்னல் மன்றோ ஏற்பாடு செய்து கொடுத்தார்.
மீட் மைலாடியில் இருந்த மிஷன் தலைமையிடத்தை நாகர்கோவிலுக்கு மாற்றினார். கர்னல் மன்றோவின் நாகர்கோயில் அலுவலகம் மீட் தங்குமிடமாகவும், திருச்சபை தலைமையிடமாகவும் அளிக்கப்பட்டது . மகாராணி கௌரி பார்வதி பாயிடமிருந்து நாகர்கோவில் கஸ்பாசபை ஆலயம், ஸ்காட் கிறிஸ்த்தவக் கல்லூரி அச்சகம் முதலியன இருக்கும் இடங்களையும் அவற்றைச் சுற்றியுள்ள இடங்களையும் நன்கொடையாகப் பெற்றுக்கொண்டார்.
மீட் 1818-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாகர்கோயில் மாவட்ட நீதிபதியாக மகாராணி கௌரிபார்வதி பாயால் நியமிக்கப்பட்டார். நாகர்கோவிலில் ஓர் ஆலயம் கட்டவும் நிலம்வாங்கவும் அவருக்கு மகாராணி 5000 ரூபாய் நன்கொடையாகவும் அளித்தார். மீட் நாகர்கோவிலில் குறைந்தது 3000 பேர்கள் இருந்து ஆராதிக்கக்கூடிய ஒரு பெரிய ஆலயத்தைக் கட்ட திட்டமிட்டார் 1819-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி திங்கட்கிழமை 140 அடி நீளமும் 70 அடி அகலமும் கொண்ட ஒரு ஆலயத்திற்க்கு நீல் மூலைக்கல் நாட்டினார்.(பிற்காலத்தில் சி.எஸ்.ஐ ஹோம் சர்ச்) ஆலயத்தை நாகர்கோயிலில் கர்னல் மன்றோ அளித்த நிதியுதவி மற்றும் அரசு உதவியுடன் கட்டினார்கள்.
மீட் அரசூழியராக இருக்கையில் மைலாடியில் 1500 கோட்டை நெல்லை பாதுகாப்பாக வைக்கும் வசதிகொண்ட ஒரு களஞ்சியத்தை கட்டினார். அதன் மேல்மாடியில் ஐரோப்பியர் வந்தால் தங்குவதற்கான அறைகள் கட்டப்பட்டன. வேதமாணிக்கம் குடும்பத்தில் இருந்து அந்தக் களஞ்சியத்துக்கான கண்காணிப்பாளர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.
மீட் முயற்சியால் 1819 இறுதிக்குள் ரிங்கல்தௌபே விட்டுச்சென்ற ஏழு சபைகள் பதினைந்தாக பெருகின. அவர் தென் திருவிதாங்கூர் மிஷனை ஐந்து மாவட்டங்களாகப் பிரித்தார். நாகர்கோயில், நெய்யூர், பாறசாலை, திருவனந்தபுரம், ஆற்றிங்கல், கொல்லம். விரைவான வளர்ச்சிக்கான நிர்வாக அடிப்படைகளை உருவாக்கினார்.
கல்விப்பணி
அக்டோபர் 1819 ல் மீட் நாகர்கோயிலில் ஒரு குருமடம் (செமினாரி)யை உருவாக்கினார். அங்கே இறையியலுடன் ஆங்கிலம், தமிழ், மலையாள மொழிகளும் கற்பிக்கப்பட்டன. 1820ல் அருகிலேயே ஆங்கிலப்பள்ளி ஒன்றை தொடங்கினார். ஜோகன்னா மீட் அதனருகில் ஒரு பெண்கள் பள்ளியையும் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தையும் தொடங்கினார். மீட் பள்ளியை தொடங்கும்போது அது ஒருநாள் கல்லூரியாக ஆகும் என கனவுகண்டார் 1893ல் அவ்வண்ணமே அது கல்லூரியாக ஆனது. 1820 ல் கிறிஸ்தவர்கள் அல்லாதோர் உட்பட அனைவரும் பயிலும் ஆங்கிலப்பள்ளியை மீட் தொடங்கினார். நெய்யூர் மிஷன் அதேபோல ஒரு பள்ளியை நெய்யூரில் தொடங்கியது. 1927க்குள் நாற்பத்தேழு பள்ளிகளை லண்டன் மிஷன் தெற்கு திருவிதாங்கூரில் தொடங்கியது.
மீட் 1820-ஆம் ஆண்டு தஞ்சாவூருக்குச்சென்றபோது அங்கு ஒர் அச்சகத்தைக் கண்டு அதை வாங்கி நாகர்கோவில் நகரில் திருவிதாங்கூரின் முதல் அச்சகத்தை நிறுவினார். அதிலிருந்து மிஷன் செய்திகளை அச்சிட்டு சுழற்சிக்கு விட்டார். அன்று திருவிதாங்கூரில் காகித உற்பத்தி இல்லை. ஆகவே காகிதம் பிரிட்டனில் இருந்து நன்கொடையாக கப்பலில் அனுப்பப்பட்டது. திருவிதாங்கூர் மிஷன் அச்சகம் என இது அழைக்கப்பட்டது.
மீட் தென்திருவிதாங்கூரை விட்டு 1825-ஆம் ஆண்டு கும்பகோணத்திற்குப்போய் அங்கே ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் தங்கி ஒரு புது மிஷன் ஸ்தாபனத்தை அங்கும் நிறுவினார் .நாகர்கோவிலில் கட்டப்பட்டு வரும் ஆலயத்திற்கு வேண்டிய நிதி திரட்டிக்கொண்டு 1827-ல் நாகர்கோவிலுக்கு திரும்பினார் .மீட் 1828-ஆம் ஆண்டு நாகர்கோவிலிலிருந்து நெய்யூரை தலைமையிடமாகக்கொண்ட மேற்குப்பகுதிக்கு மாற்றப்பட்டார் நெய்யூரில் மீட் தங்குவதற்கு வசதியான கட்டடங்கள் அன்று இல்லாதிருந்ததால்அவருக்கு ஒரு பங்களா கட்டிமுடியும்வரை தனது குடும்பத்துடன் மண்டைக்காட்டில் கடற்கரையை அடுத்த ஒரு சிறு கட்டிடத்தில் தங்கினார். நெய்யூரில் ஆஸ்பத்திரியையும் ஆலயத்தையும் உருவாக்கினார்.
மீட் 1836 டிசம்பர் இங்கிலாந்திற்கு விடுமுறைக்காகச்சென்றார் உடல் நலம் தேறியதும் 1838-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருவிதாங்கூருக்கு மறுபடியும் திரும்பினார். திருவனந்தபுரத்தில் தங்கி மதப்பணிகளையும் கல்விப்பணிகளையும் செய்தார். வாழ்க்கையின் இறுதிநாட்களில் மீட் முழுமையாகவே கல்வியாளராகத் திகழ்ந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள பள்ளிகளை நடத்துவது அச்சகங்களை நடத்துவது ஆகியவற்றைச் செய்தார்.
தோள்சீலை கலகம்
1828, 1829 ஆண்டுகளில் தென்திருவிதாங்கூரில் மதம் மாறிய பெண்கள் மார்பை உயர்சாதிப்பெண்கள் போல மறைத்து ஆடை அணிவதற்கு எதிராக கல்குளம், விளவங்கோடு, அகஸ்தீஸ்புரம், இரணியல் ஆகிய இடங்களைச்சுற்றியுள்ள ஊர்களில் கலவரம் மூண்டது. அது மதமாற்றத்துக்கு எதிரான உயர்சாதியினரின் காழ்ப்பையும் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது. மீட் ரெசிடெண்ட் ஐ சந்தித்து அந்தக் கலவரத்தை ஒடுக்க ஏற்பாடு செய்தார். 3 ஜனவரி 1829ஆம் ஆண்டு மீட்டை கொல்லும் நோக்குடன் மண்டைக்காட்டில் அவர் தங்கியிருந்த வீட்டை முற்றுகையிட்டனர். உதயகிரி கோட்டையில் இருந்த ராணுவத்தின் உதவியால் மீட் உயிர்தப்பினார் (பார்க்க தோள்சீலை கலகம்)
மறைவு
மீட் தன் 81-ம் வயதில் 10 ஜனவரி 1873ல் மரணமடைந்தார் அவர் திருவனந்தபுரம் C.M.S. ஆலய வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்
நினைவகங்கள்
உசாத்துணை
https://www.missionariesoftheworld.org/2012/01/charles-mead.html
https://www.britishempire.co.uk/article/faithandfamily/charlesmead.htm
http://unnathasirakugal.blogspot.com/2017/06/revcharles-mead-father-of-south.html
https://onewaytheonlyway.com/charles-mead-south-travancore-mission-ministry/