under review

பெருங்குன்றூர் கிழார்

From Tamil Wiki
Revision as of 18:50, 1 November 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பெருங்குன்றூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய இருபத்தியொரு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

பெருங்குன்றூரில் வாழ்ந்த கடைச் சங்ககாலப் புலவர். கிழார் என்பது வேளாண்குடியைச் சார்ந்தவர் என்பதைக் குறிக்கிறது. இவர் பாடிய ஆறு அகப்பாடல்களுள் ஐந்து பாடல்கள் குறிஞ்சித் திணைக்குரியவை என்பதால் இவர் மலைவளம் நிறைந்த குறிஞ்சி நிலப்பகுதியில் வாழ்ந்தவர் எனலாம். இவர் பாடல்களின் வழி இவர் வறுமையில் வாழ்ந்ததை அறிய முடிகிறது. அரசர்களைப் பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

இவர் பாடிய இருபத்தியொரு பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் உள்ளன. இவற்றில் அகம் சார்ந்த காதல் பாடல்கள் ஆறு. அகப்பாடல்களில் ஆறில் நான்கு(5, 112, 119, 347) நற்றிணையிலும், ஒன்று அகநானூற்றிலும்(8), மற்றொன்று குறுந்தொகையிலும்(338) உள்ளன. புறநானூற்றில் ஐந்து பாடல்கள்(147, 210, 211, 266, 318) உள்ளன. எஞ்சிய பத்துப் பாடல்கள் பதிற்றுப்பத்திலும் தொகை நூலிலும் உள்ளன. இளஞ்சேரலின் பெருமை, வெற்றி, கொடை விளங்கும் பத்துப்பாடல்களைப் பாடினார்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை இவருக்கு ஈந்த பரிசில்கள்: 32,000 காணம் பணம், ஊரும், மனையும், ஏரும், இன்ப வளங்களும், எண்ணில் அடங்கா அணிகலச் செல்வம், இவற்றை பாதுகாக்க பாதுகாவலன்.
  • மழை பொழியாத கோடையாயினும், கடல் வளம் சுரக்கும் நாட்டை உடையவன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி என்னும் சோழமன்னன்.
  • பேகன் தன் மனைவி கண்ணகியைத் துறந்து வேறொருத்தியோடு வாழ்ந்துவரும் காலத்தில் அவனைக் கண்டு பாடுகிறார்.
  • தலைவன்: தினை மேய வரும் கேழலுக்குப் புனவன் பொறி வைத்தால் அதில் புலிமாட்டிக் கொள்வதுண்டு. குளவிப் பூவையும், கூதளம் பூவையும் கண்ணியாகக் கட்டிச் சூடிக்கொண்டு தலைவன் வருவான்.
  • குறவர் தம் குன்றத்து வயலில் நறைப்பவர்களை (மெல்லும்போது வாய்மணக்கும் இலையை உடைய கொடி) அறுத்தெறிவர், என்றாலும் அது அறாது சந்தன மரத்தைச் சுற்றிக்கொண்டு ஏறும்.

இவரால் பாடப்பட்டவர்கள்

  • இளஞ்சேரல் இரும்பொறை
  • சேரமான் குடக்கோச்சேரல் இரும்பொறை
  • சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி
  • பேகன் மனைவி கண்ணகி

பாடல் நடை

  • நற்றிணை: 5

நிலம் நீர் ஆர, குன்றம் குழைப்ப,
அகல் வாய்ப் பைஞ் சுனைப் பயிர் கால்யாப்ப,
குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர்
நறுங் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப,
பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும்,
அரிதே, காதலர்ப் பிரிதல்- இன்று செல்
இளையர்த் தரூஉம் வாடையொடு
மயங்கு இதழ் மழைக் கண் பயந்த, தூதே.

  • அகநானூறு: 8

பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால்
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ,
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்,
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே.

  • புறநானூறு: 147

கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார்வான் இன்னுறை தமியள் கேளா
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
5 அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசுஅற மண்ணிப்
புதுமலர் கஞல, இன்று பெயரின்
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!

  • பதிற்றுப்பத்து

நல்லிசை நிலைஇய நனந்தலை உலகத்து
இல்லோர் புன்கண் தீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
பாடுநர் புரவலன்.

உசாத்துணை


✅Finalised Page