under review

புரந்தரதாசர்

From Tamil Wiki
Revision as of 09:26, 21 October 2023 by Logamadevi (talk | contribs)
புரந்தரதாசர்

புரந்தரதாசர் (பொ.யு. 1484 - ஜுலை 2, 1564) கர்நாடக இசையின் தந்தை. ஆரம்ப இசைப் பயிற்சிக்கான ஸ்வரவரிசைகள், ஜண்டை வரிசைகள், அலங்காரங்கள், கீதங்களைப் இயற்றினார். தெலுங்கில் பாடவில்லை எனினும் தியாகய்யருக்குப்‌ பின்வந்த எல்லாத்‌ தெலுங்கு இசைவாணர்களும் இவரை சங்கீதப்‌ பிதாமகர்‌ என்றே கருதினர்.

வாழ்க்கைக் குறிப்பு

புரந்தரதாசர் 1484-ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி ஜில்லாவில்‌ புரந்தகட்டம்‌ என்ற சிற்றூரில்‌ (தற்போதைய மராத்திநாட்டில்‌ உள்ளது) வரதப்பநாயக்குக்கும், கமலாம்பாளுக்கும் மகனாகப் பிறந்தார். மத்துவப்‌ பிராமண குலத்தைச் சேர்ந்தவர். இயற்பெயர், ஸ்ரீனிவாச நாயக். தனது பெற்றோரை இருபதாம் வயதில் இழந்தார். பதினாறாம் வயதில் சரஸ்வதிபாய் என்ற பெண்ணை திருமணம் செய்தார். தன் தகப்பனாரின் இரத்தின வியாபாரத்தை தொடர்ந்தார். மிகுந்த செல்வம் ஈட்டியும் கருமியாய் இருந்தார். இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு பண்டரிபுரத்திலுள்ள விட்டலர் மீது நம்பிக்கை வைத்து மூன்று முறை தீர்த்தயாத்திரை செய்த பின் வயிற்று வலி நீங்கியது. அதன் பின் பக்தி மார்க்கத்தை தழுவி பாடல்கள் பாடினார் என்று கதைகள் கூறுகின்றன.

பிற பெயர்கள்
  • ஸ்ரீநிவாச நாயக்
  • சீனப்பா
  • திம்மப்பா
  • திருமலையப்பா
  • புரந்தரவிட்டலர்
  • நவகோடி நாராயணன்
  • சங்கீத பிதாமகர்
  • ஆதி குரு
  • கிருஷ்ணப்பா
புரந்தரதாசர் அஞ்சல்தலை

தொன்மம்

புரந்தரதாசர் தொன்மக்கதை

1. ஓர்‌ ஏழைப்‌ பிராமணன்‌ இவர்‌ கடைக்குச்‌ சென்று தன்‌ புதல்வியின்‌ உபநயனத்துக்குப்‌ பொருள்‌ வேண்டுமென்று கேட்டார். இவர் இணங்காததால் அப்பிராமணன்‌ இவர்‌ மனைவியிடம்‌ வந்து இரந்தார். அவளிடம்‌ பொருள்‌ எதுவும்‌ இல்லையெனினும் தன்‌ மூக்குத்தியைக் கழற்றிக்கொடுத்தார். அந்தப்‌ பிராமணன்‌ அதை இவருடைய கடையில்‌ கொண்டுபோய்க்‌ காட்டவும்‌, கிருஷ்ணப்பா இதைப்‌ பார்த்துத்‌ தன்‌ மனைவியினுடையது என்று சந்தேகித்துப்‌ பிராமணனைக்‌ கடையில்‌ இருக்கச்‌ சொல்லிவிட்டு, வீட்டுக்குச்‌ சென்று தன்‌ மனைவியை மூக்குத்தி காட்டுமாறு கேட்க, அவள்‌ தன்‌ மூக்குத்தியைக்‌ கணவன்‌ கேட்டது கண்டு அஞ்சி, ஆண்டவனை வேண்டி, அதேபோன்ற வேறொரு மூக்குத்தியைப்‌ பெற்றுக்‌ கணவனிடம்‌ கொடுத்தாள்‌. மனைவிகொடுத்த மூக்குத்தியை இவர்‌ கையில்‌ வாங்கும்போது அதனுடைய ஓப்பற்ற பிரகாசத்தை இவரால்‌ மதிப்பிட முடியவில்லை. திகைத்துப்போய்‌ கடைக்கு ஓடிச்சென்று பார்க்க இவர்‌ சிறைப்படுத்தி வைத்திருந்த பிராமணனும்‌ அவன்‌ கொடுத்து, இவர்‌ பூட்டி வைத்துவிட்டு வந்த மூக்குத்தியோடு மறைந்துவிட்டார்‌. இந்த லீலையை உணர்ந்தபின் அவருக்கு கருமித்தனம் மறைந்து பக்தி மிகுந்ததாக நம்பப்படுகிறது.

2. இவர்‌ நாரதர்‌ அவதாரம்‌ என்பது சிலரின் கருத்து. நாரதர்‌ பகவான்‌ சந்நிதியில்‌ பாடி ஆடினார்‌. மகிழ்ந்த பகவான்‌ அவரை ஒருவரம்‌ கேட்குமாறு கூறினார்‌. நாரதர்‌, "நீயும்‌ என்‌ முன்னே இப்படி ஆடவேண்டும்‌" என்று கேட்டார். பகவான்‌ அவரைக்‌ கலியுகத்தில்‌ பூலோகத்தில்‌ புரந்தரதாசராய்ப்‌ பிறப்பித்து, தினமும்‌ அவருடைய பூஜா காலங்களில்‌ அவர்‌ மனம்‌ களிக்கும்படி அவர்‌ முன்னே ஆடி வந்தார்‌ என்று ஓர் தொன்மக் கதை கூறும்‌.

ஆன்மீகம்

உலகத்தை உதறிவிட்டுக்‌ கிருஷ்ணப்பா மனைவியுடன் தலயாத்திரையாகப்‌ பண்டரிபுரம்‌ சென்றார். தனது முப்பதாவது வயதில் ஞானோதயம் பெற்று 1525-ஆம் ஆண்டு விஜயராஜ சுவாமிகளினதும், சத்திய தர்மதீர்த்த சுவாமிகளினதும் அருள் பெற்று புரந்தரதாசர் எனும் பெயர் பெற்றார். இவர்‌ விஜயநகர அரசனைக்‌ கண்டு, பின்‌ திருப்பதியை அடைந்து, ஶ்ரீனிவாசப்‌ பெருமாளை வணங்கி அங்கிருந்து வேலூர்சென்‌று அங்கிருந்த கேசவசுவாமி மீது பல கீர்த்தனங்களைப் பாடினார்‌. இவரோடு இருந்த மற்றொரு தாசர்‌ வைகுண்டதாசர்‌.

மெய்ஞ்ஞானப்‌ பொருளை மக்களுக்கு உணர்த்தி மனித இனத்தை இசைமூலமாக நல்வழிப்படுத்துவதே நோக்கமாகக்கொண்டு, பக்தி ததும்புகின்ற ஆயிரக்கணக்கான பாடல்கள்‌ செய்தார்‌. இவர்‌ பாடிய பாடல்கள்‌ யாவும்‌ தேவர்நாமா(தெய்வத்தின்‌ நாமசங்கர்த்தனம்‌) என்று அழைக்கப்பட்டது. புரந்தரதாசருடைய மரபு ஹரிதாச மரபு என்பர். இவருக்கு இரண்டு தலைமுறை முன்னதாக வியாசராய மடத்தின்‌ மூலகுரு தொடங்கி இந்த ஹரிதாச மரபு தோன்றி வளர்ந்தது. இவர்களுடைய வாழ்க்கைக்‌ குறிக்கோள்‌, ஹரிபஜனை செய்துகொண்டே காலங்கழித்தல்.

இசைப் பணி

புரந்தரதாசர் வரலாறு

இவர் 4,75,000 கிருதிகளை செய்துள்ளதாக வாசுதேவ நாமாவளி குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 8000 கிருதிகளே எஞ்சியுள்ளன. இவரின் பாடல்கள் கன்னடத்திலும் வடமொழியிலும் உள்ளன. இவை தாசர்வாள் பதங்கள் என்றும் தேவர் நாமாக்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. இவரது முத்திரை 'புரந்தரவிட்டல' என்பது. இலகுவான மொழியிலுள்ள இவரின் பாடல்களின் நடை எளிதாக அமைந்தது . இவர் கீர்த்தனைகளில் வேதங்கள், உபநிடதங்கள் முதலியவற்றின் சாரம்சத்தைக் காணலாம். மாஞ்சிபைரவி, மாரவி, வசந்தபைரவி, சியாமகல்யாணி போன்ற அபூர்வராகங்களிலும் இவர் பாடல்கள் செய்துள்ளார். இந்துஸ்தானி இசையிலும் பாடல்கள் பாடினார்.சங்கீதம்‌ கற்போர்‌ கற்க எளிதாக சுராவளி, அலங்காரம்‌, சீதம்‌, டாயம்‌, சூளாதி, பிரபந்தம்‌ முதலான பலவும்‌ அமைத்தார்‌. இசை கற்பதற்கான பாடங்கள்‌ வகுத்துத்‌ தந்தமையால்‌ இசைவாணர்‌ இவரைச்‌ சங்கீத உலகத்தின்‌ பிதாமகர்‌ (பாட்டனார்‌) என்று அழைக்கின்றனர். மாயாமாளவ கெளள ராகத்தில்‌ இசைப்பயிற்சி தொடங்குவது என்ற சம்பிரதாயத்தை இவரே தொடங்கி வைத்தார்‌. பழக்கமான ராகங்களில்‌ இவர்‌ தம்‌ பாடல்களைப்‌ பாடியதோடு, அபூர்வ ராகங்களான மஞ்சீச பைரவி, துஜாவந்தி, சியாம கல்யாணி, மதுமாதவி, வசந்தபைரவி போன்ற ராகங்களிலும்‌ பாடல்களைச் செய்தார்‌.இவருடைய தேவர் நாமாக்கள்‌ பிற்காலத்தில்‌ கீர்த்தனைவடிவில்‌ அமைக்கப்பட்டன. சப்த தானங்கள்‌ இவரால்‌ புகழ்பெற்றன. அவர்‌ காலத்தில்‌ 72 மேளகர்த்தா என்ற இசைக்கொள்கை பிறக்கவில்லை. ஆனால் புரந்தரதாசருடைய அபிமானிகள்‌, இவர்‌ ஓரிடத்தில்‌ இருமுப்பத்தாறு என்று சொல்லியிருப்பதால்‌ 72 மேளகர்த்தாவைப்பற்றி அறிந்திருந்தார் என்று கருதினார்கள். இவர்‌ கீர்த்தனம்‌ செய்யவில்லை. பல்லவி அனுபல்லவி சரணம்‌ என்ற அமைப்பில்லாமையால்‌, இவருடைய சங்கீர்த்தனம்‌ ஒவ்வொன்றும்‌ முழுமையாக ஒன்றுபோலவே தொடர்ந்து பாடப்படும்‌. இவருடைய பாடல்களில்‌ கோகுலத்தில்‌ பாலகிருஷ்ணனுடைய இளம்பருவ லீலைகள்‌ பாடப்பட்டன. ஸ்வரஜதி, பிரபந்தம்‌, அலங்காரம்‌ முதலியனவும்‌ இவர்‌ பாடியிருக்கிறார்‌. சங்கீத ரத்நாகரம்‌ கூறிய சூளாதியை இவரே தம்‌ பிரம்மானந்த சூளாதி மூலம்‌ சிறப்படையச்‌ செய்தார்‌. பெண்கள்‌ காலையில்‌ பள்ளியெழுச்சி பாடுவதற்காக இவர்‌ உதய ராகங்களும்‌ அமைத்தார்‌.

புரந்தரதாசர்
சிறப்புகள்
  • புரந்தரதாசர் பாடல்கள் சொற்சுவையிலும்‌, பொருட்சுவையிலும்‌ இசைச்சுவையிலும்‌ மிகவும்‌ சிறந்திருந்தன. இவை எளியமக்கள்‌ எளிதில்‌ பொருளுணர்ந்து அனுபவித்து இசையோடு பாடத்தக்கனவாயிருந்தன.
  • இலக்கியச்சுவை மிக்கவை.
  • இவர்‌ தமது சங்கீர்த்தனங்கள்‌ அனைத்தையும்‌ பண்டரிபுரத்‌ திருமாலான விட்டலருக்கே அர்ப்பணம்‌ செய்தார்‌.
  • இவருடைய இசையில்‌ கர்நாடக சங்கீதம்‌ மட்டும்‌ அல்லாமல்‌ மராத்தியச்‌ சங்தேமும்‌ இந்துஸ்தானி சங்கீதமும்‌ கலந்திருந்தது.
  • தாசர்‌, மார்க்கம்‌ தேசி இரண்டையும்‌ சேர்த்து ஒற்றுமைப்படுத்தினார்‌.
  • இவரே இசையை ராஜசம்‌, தாமசம்‌, சாத்துவிகம்‌ என்று முக்குணங்களை பாகுபடுத்தி, பக்தி உணர்ச்சிகளையும்‌ உள்ளத்திலெழும்‌ பிற உணர்வுகளையும்‌ வெவ்வேறு நிலையில்‌ காட்ட இவற்றை வெவ்வேறாகப்‌ பாகுபடுத்தினார்‌ என்றும்‌ சொல்வர்‌. கல்யாணி வராளி பைரவி சாவேரி முதலான 84 ராகங்களை இவர்‌ பாகுபடுத்திச்‌ சங்கீர்த்தனம்‌ செய்தார்‌.
  • தாளக்கட்டு. விளம்பதம்‌ மத்தியமம்‌ துரிதம்‌ என்ற மூன்று காலங்களையும்‌ இவர்‌ எளிதாகப்‌ பயன்படுத்தினார்‌.
  • சலபகதி என்று சொல்லத்தக்க சூளாதியை இவரே முதன்முதல்‌ செய்து காட்டினார்‌.
மாணவர்கள்
  • பரசு பாகவதர்‌
  • அன்னப்ப பாகவதர்‌
  • வரதப்பன்‌
  • குருராயன்‌
  • அபிநாபி
  • மத்வபதி

பாடல் நடை

  • இது பஜனைகளில்‌ பாடப்படுவது.

1. தேவகீ நந்தன கந்த முகுந்த
வந்துத முனிஜன நித்யானந்த (தேவகி)
2. நிக மோத்தார நவநீத சோர
ககபதி வாஹன ஜகதுத்தார (தேவகி)
3. மகா குண்டலதார மோஹன வேஷ
ருக்மணி வல்லப பாண்டவ போஷ (தேவகி)
4. சங்க சக்ரதா ஸ்ரீ கோவிந்த
பங்கஜ லோசன பரமானந்த (தேவகி)
5. கம்ஸ மார்த்தன கெளஸ்துபா பரண
ஹம்ஸ வாஹன பூரிதாண (தேவகி)
6. வாத வெலாபுர சென்ன ப்ரஸன்ன
புரந்தர விட்டல குண பரிபூரண (தேவகி)

மறைவு

இவரது கடைசிக்காலத்தில் சந்நியாச ஆசிரமத்தை அடைந்து ஜுலை 2, 1564-ல்‌ அமாவாசையன்று காலமானார்‌.

உசாத்துணை


✅Finalised Page