வெய்யில்(கவிஞர்)

From Tamil Wiki
Revision as of 11:43, 22 January 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|வெய்யில் வெய்யில் (பெ.வெயில்முத்து) ( ) தமிழில் புதுக்கவிதைகள் எழுதும் கவிஞர். இதழாளர். நாட்டார் பண்புக்கூறுகளை கிராமியவாழ்க்கைச் சித்திரங்களையும் கவிதையில் பயன்படு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வெய்யில்

வெய்யில் (பெ.வெயில்முத்து) ( ) தமிழில் புதுக்கவிதைகள் எழுதும் கவிஞர். இதழாளர். நாட்டார் பண்புக்கூறுகளை கிராமியவாழ்க்கைச் சித்திரங்களையும் கவிதையில் பயன்படுத்துகிறார். இடதுசாரிப்பார்வை கொண்டவர்

பிறப்பு,கல்வி

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கான்சாபுரம் என்னும் ஊரில்29 ஜூன் 1984 ல் ச.பெருமாள் - பெ.தமிழ்ச்செல்வி இணையருக்கு பிறந்தார். ஆரம்பக்கல்வி கான்சாபுரம் அரசுத் தொடக்கப்பள்ளியிலும், நடுநிலைப்பள்ளி பர்கிட் மாநாகரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் படித்த்தார். வறுமை மற்றும் குடும்பச் சூழல் காரணமாக கிராமத்தில் இருந்து தனியாக வெளியேறியமையால் தொடர்ந்து கல்வி கற்க வாய்ப்பில்லாமல் போனது. பத்துக்கும் மேற்பட்ட வேலைகள் செய்து பொருளியல்நிலை அடைந்தபின் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பி.லிட் (தமிழ் ), தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ (தமிழ்) கற்றார்

தனிவாழ்க்கை

வெயில் ப.ப்ரியாவை 23.மே2010 அன்று மணந்தார். ஒரு மகள், மாயா. இதழாளராக பணியாற்றுகிறார்.ஜூனியர் விகடன் இதழின் ஆசிரியர்

இலக்கியவாழ்க்கை

வெயில் எழுதிய கவிதைகளை புவன இசை என்னும் நூலாக வெளியிட்டார். அந்நூல் கிடைப்பதில்லை. 2008 - ம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் எழுதி, 2009 ம் ஆண்டில் (தஞ்சையிலுள்ள) அனன்யா பதிப்பகம் வெளியிட்டது. அந்நூலிலுள்ள பெரும்பாலான கவிதைகளையும் புதிதாக எழுதப்பட்ட சில கவிதைகளையும் கொண்டு 2011-ல் ‘குற்றத்தின் நறுமணம்’ எனும் தொகுப்பாக (தர்மபுரியில் உள்ள) புதுஎழுத்து பதிப்பகம் வெளியிட்டது.

வெயில் முதல் கவிதைத் தொகுதியை எழுதி முடிக்கும் முன்பாக, தமிழின் எந்தக் கவிஞரையும் முழுமையாக வாசித்ததில்லை என்கிறார். தன்னில் ஆதிக்கம் செலுத்திய படைப்புகள் என்று சொல்ல வேண்டுமெனில், தனது பதின்பருவம் வரை நான் கேட்டு வளர்ந்த ‘வில்லுப்பாட்டுக் கதைகள்’ முதலிடம் பெறும் என்கிறார்.

”சங்க இலக்கியத்தின் நுட்பமான காட்சியனுபவங்களும், பக்தி இலக்கியத்தின் இசைமையும் சரண் நிலையும், சிற்றிலக்கியங்களில் கலிங்கத்துப்பரணியின் வன்முறை அழகியலும், பாரதி எனும் தமிழ்ப் பிம்பமும் என்னை வெகுவாகப் பாதித்தவை. நவீன படைப்பாளிகளில், பெரும்பான்மைக் கவிஞர்களின் பெரும்பாலான கவிதைகளை வாசித்திருக்கிறேன், என்னை ஆச்சர்யப்படுத்தியவை; ஆற்றுப்படுத்தியவை; திகைக்கவைத்தவை உண்டு. ஆனால், என்னை முழுமையாக ஆட்கொண்ட கவிஞர் அல்லது முன்னோடி என்று ஒருவரை முழுமையாக மனப்பூர்வமாகச் சொல்ல முடியவில்லை; அப்படி யாரையும் உணரவில்லை. சுயம்புலிங்கத்தின் குரலை என் குரலாக உணர்ந்திருக்கிறேன். ழாக் பிரெவர், சச்சிதானந்தன், பவித்திரன் தீக்குன்னி மூவரின் சொல்முறையும் மிகப்பிடித்தவை. கோணங்கியுடனான நீண்ட பயணங்களில், சாதாரண விஷயங்களிலிருந்து விநோதமான கனவுத்தன்மையுள்ள படிமங்களை உருவாக்கும் படைப்பூக்கக் கிறுக்கைக் கொஞ்சம் பழகினேன் என்று சொல்லலாம். நாட்டார் உணர்ச்சி, செவ்வியல் இசை, நவீனவெளிப்பாடு என்கிற இசையமைப்பாளர் இளையாராஜாவின் இந்த முக்கலவை முறையை ஒரு Form ஆக நான் கவிதைக்குள் முயன்றேன். அவரின் இசை எப்போதும், எனக்குள் படைப்புமனதைச் சுரக்கச் செய்யும் ஆற்றலாக இருந்துவருகிறது” என்று தன் படைப்பியக்கம் பற்றிச் சொல்கிறார்.

இலக்கிய இடம்

தமிழ் நவீனக்கவிதைகள் பெரும்பாலும் அகவயப் பயணங்களாகவும், இருத்தலியல் சிக்கல்களை வெளிப்படுத்துவதுமாகவும், நவீனவாழ்க்கையின் படிமங்கள் கொண்டவையாகவும் இருக்கும் சூழலில் வெய்யிலின் கவிதைகள் நாட்டாப்படிமங்களையும், அடித்தளத் தொன்மங்களையும் நவீனக்கவிதைக்குள் இயல்பாக கொண்டுவந்தன. அவற்றை நவீனப்படிமங்களாக ஆக்க அவரால் இயன்றது. அடித்தள வாழ்க்கையின் அழகியலை நவீனக்கவிதையில் உருவாக்கியவர்களில் வெய்யில் முக்கியமானவர்.

விருதுகள்

  • இளம் கவிஞருக்கான களம்புதிது விருது (குற்றத்தின் நறுமணம்) (2015)
  • சிறந்த சிற்றிதழுக்கான (கொம்பு) ஆனந்த விகடன் விருது (2016)
  • சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான ஆனந்த விகடன் விருது (கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் .ஃப்ராய்ட்) (2017)
  • சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான உயிர்மை (கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் .ஃப்ராய்ட்) - சுஜாதா அறக்கட்டளை விருது (2017)
  • சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழும விருது (மகிழ்ச்சியான பன்றிக்குட்டி) (2018)
  • எஸ்.ஆர்.வி பள்ளியின் 2018ம் ஆண்டிற்கான ‘படைப்பூக்க’ விருது (2018)
  • சிறந்த கவிதைத் தொகுப்புக்கான (மகிழ்ச்சியான பன்றிக்குட்டி) தமுஎகச விருது (2018)
  • 2019 -ம் ஆண்டிற்கான சிறந்த கவிதைத் தொகுப்பிற்கான ஆதம்நாம் விருது "அக்காளின் எலும்புகள்"

நூல்பட்டியல்

  • புவன இசை  - 2009 - அனன்யா பதிப்பகம்.
  • குற்றத்தின் நறுமணம் -2011 - புதுஎழுத்து பதிப்பகம்.
  • கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் .ஃப்ராய்ட்  - 2016 - மணல்வீடு பதிப்பகம்.
  • மகிழ்ச்சியான பன்றிக்குட்டி  - 2017 - கொம்பு பதிப்பகம்.
  • அக்காளின் எலும்புகள் 2018 - கொம்பு பதிப்பகம்
  • பெருந்திணைப் பூ திண்ணும் இசக்கி  2021 - சால்ட் பதிப்பகம்
  • ஆக்டோபஸின் காதல் - 2022)