புல்லைக் குமரேசர் பணவிடு தூது

From Tamil Wiki
Revision as of 23:01, 19 September 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added: Link Created:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

புல்லைக் குமரேசர் பணவிடு தூது (பதிப்பு: 2003), தூது இலக்கிய நூல்களுள் ஒன்று.  புதுக்கோட்டையிலிருந்து சுமார் இருபது கி.மீ. தொலைவில் அமைந்துள்ள புல்லை (குமரமலை) என்னும் ஊரில் கோவில் கொண்டுள்ள முருகப்பெருமான் மீது காதலுற்ற பெண், அவரிடம் பணத்தைத் தூதாக அனுப்புவதே, புல்லைக் குமரேசர் பணவிடு தூது. உ.வே. சாமிநாதையர் நூல் நிலையத்தாரால் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது. 300 கண்ணிகள் கொண்டது இந்நூல். நூலின் ஆசிரியர் பெயரை அறிய இயலவில்லை. காலம், 18 ஆம் நூற்றாண்டு.

பிரசுரம், வெளியீடு

புல்லைக் குமரேசர் பணவிடு தூது நூல், சின்ன வன்னியனார் பணவிடு தூது, கவிராயர் பணவிடு தூது ஆகிய தூது நூல்களுடன் இணைந்து, உ.வே.சாமிநாதையர் நூல் நிலையத்தாரால், 2003-ல், பதிப்பிக்கப்பட்டது.

நூல் அமைப்பு

பணவிடு தூது நூல்களுள், புல்லைக் குமரேசர் பணவிடு தூது நூல் பெண் விடு தூது வகையைச் சேர்ந்தது. கலிவெண்பாவில் பாடப்பட்டது. 300 கண்ணிகள் இந்நூலில் அமைந்துள்ளன. நூலில் காப்புச் செய்யுள் முதலில் இடம் பெற்றுள்ளது. புல்லைக் குமரேசர், பூசத் திருநாளில் தேர் மீது பவனி வருகிறார். பச்சைமணிக் கடகமும், முத்தாபரணமும் அணிந்து காண்போர் மயங்கும் வண்ணம் குமரேசப் பெருமான் பவனி வருகிறார். அவரைக் காணும் தலைவி அவர் மீது காதல் கொள்கிறாள். தனது காதலை குமரேசப் பெருமானிடம் சொல்லி, தூதுரைப்பதற்குரிய நேரம் கூறி,  குமரேசனிடத்திலிருந்து மாலை வாங்கி வருமாறு தன் நெஞ்சைத் தூதாக அனுப்புகிறாள். சொற்சுவை, பொருட்சுவையுடன் இயற்றப்பட்டுள்ள இந்நூலில் குமரேசப் பெருமானின் சிறப்பு, சூரனை அவர் வென்ற திறம், காசு, பணம் பற்றிய தகவல்கள் எனப் பல அரிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

நூல் மூலம் அறிய வரும் செய்திகள்

பணத்தின் சிறப்பு, பணத்தினால் மனிதர்களுக்குக் கிடைக்கும் உயர்வு, பெருமை, காசின் வடிவங்கள், குதிரைக் குளம்பு, கொழும் எருமை, நாக்குக் கதிர், வன்சாணன் காசு எனக் காசின் வேறு பெயர்கள், அக்காலத்தில் வாங்கப்பட்ட வரிகள்  முதலிய  செய்திகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சிற்றரசர்கள் பற்றிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. பணத்திற்காக மக்களில் பலரும் குற்றம் இழைக்கின்றனர் என்பது இந்நூலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பாடல் சிறப்பு

பணத்தின் பெருமை

பொருளே இரணியமே பூரியமே யார்க்கும்

தருகாஞ் சனமே தனமே - இருநிதியே


ஆடகமே மாசையே ஆசையே தேசிகமே

தேடக் கிடையாத் திரவியமே - மாடையே


பீதமே சொன்னமே பீதகமே சந்திரமே

சாதரூ பம்மே தமனியமே - நீதமே


ஏமமே சாம்புனத மேகனக மேமுதலே

சாமியே தாதே நிதானமே

தூதுரைக்கும் நேரம்

வாசவனும் தேவர்களும் வந்துஇறைஞ்சும் வேளையிலும்

பூசையிலும் வார்த்தை புகலாதே - வீசுதொண்டர்


கோத்தபெரும் காவடிகள் கொண்டுவர உட்கலந்து

பார்த்துஇருப்ப அங்கே பகராதே - நாற்றிசையோர்


போற்றிசெயும் போது புகல்அரிய சொன்னபுட்பஞ்

சாற்றையிலும் இந்தவுரை சாற்றாதே - ஏற்றுமந்த்ர


மங்கலவாத் யம்தனிலும் வாணர் கவிதைப்ர

சங்கம்செய் யும்பொழுதும் சாற்றாதே - பொங்கமுடன்


ஏகாந்த மாயிருக்கும் சமயத்தில் நீகாணி

போகாந்த மாகப் புகழ்ந்தே

மதிப்பீடு

பண விடு தூது நூல்களுள் பணம், காசு பற்றிய பல்வேறு செய்திகளை, அக்காலத்து வரி விதிப்பு பற்றிய தகவல்களை, சிற்றரசர்கள் பற்றிய செய்திகள் கொண்டதாக புல்லைக் குமரேசர் பணவிடு தூது நூல் அமைந்துள்ளது.

உசாத்துணை