being created

தொடித்தலை விழுத்தண்டினார்(புறம்)

From Tamil Wiki
Revision as of 09:02, 6 September 2023 by Ramya (talk | contribs) (Created page with "தொடித்தலை விழுத்தண்டினார்(புறம்) சங்ககாலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. == வாழ்க்கைக் குறிப்பு == இப்புலவரின் பெயர் தெரியவில்லை. ஒருவர் அடைந்த முதுமையை க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தொடித்தலை விழுத்தண்டினார்(புறம்) சங்ககாலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

இப்புலவரின் பெயர் தெரியவில்லை. ஒருவர் அடைந்த முதுமையை கூறும் போது முதியவர் கொண்ட கோலைத் ‘தொடித்தலை விழுத்தண்டு’ என்று கூறியதால் தொடித்தலை விழுத்தண்டினார் என அறியப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

தொடித்தலை விழுத்தண்டினார் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் 243வது பாடலாக உள்ளது. இப்பாடலில், தொடித்தலை விழுத்தண்டினார் ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாடியதாக அவ்வை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார். ஆனால், டாக்டர். உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் இப்பாடலுக்கு பாடப்பட்டோன் என்று யாரையும் குறிப்பிடவில்லை. ஆகவே, இப்பாடலில் பாடப்பட்டவன் யார் என்பது ஆய்வுக்குரியது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • இளமை நிலையாமை பற்றியும், முதுமையின் இயலாமையையும் கூறும் பாடல்
  • இளமை விளையாட்டு: மணலைத் திரட்டிச் செய்த பொம்மைக்கு பறித்த பூவைச் சூடி, குளிர்ந்த குளத்தில் விளையாடும் பெண்களோடு கை கோத்து, அவர்கள் தழுவும் பொழுது தழுவி, அவர்கள் ஆடும் பொழுது ஆடி, ஒளிவு மறைவு இல்லாமல் வஞ்சனை இல்லாத இளையோர் கூட்டத்தோடு விளையாடினர். நீர்த்துறையில் படிந்த மருதமரத்தின் கிளைகளைப் பற்றி ஏறி கரைகளில் உள்ளோர் வியக்க நீரலைகளிலிருந்து நீர்த்துளிகள் மேலே எழ, நெடிய நீரையுடைய ஆழமான இடத்தில், “துடும்” எனக் குதித்து, மூழ்கி, மணலை வெளியில் கொண்டுவந்து காட்டிய அறியாமை மிகுந்த இளமை விளையாட்டு
  • முதுமை: பூண் நுனியையுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து, இருமல்களுக்கு இடைஇடையே வந்த சில சொற்களைக் கூறும் முதியவர்கள்.

பாடல் நடை

இனி நினைந்து இரக்கம் ஆகின்று: திணி மணல்
செய்வுறு பாவைக்குக் கொய் பூத் தைஇ,
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து,
தழுவுவழித் தழீஇ, தூங்குவழித் தூங்கி,
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு
உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து,
நீர் நணிப் படி கோடு ஏறி, சீர் மிக,
கரையவர் மருள, திரைஅகம் பிதிர,
நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து,
குளித்து மணல் கொண்ட கல்லா இளமை
அளிதோதானே! யாண்டு உண்டு கொல்லோ
தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி, நடுக்குற்று,
இரும் இடை மிடைந்த சில சொல்
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே?

உசாத்துணை

  • புறநானூறு 243: puram400



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.