திருப்பருத்திக்குன்றம் வர்த்தமானர் கோயில்

From Tamil Wiki
திருப்பருத்திக்குன்றம்

திருப்பருத்திக்குன்றம் வர்த்தமானர் கோயில் (சமணக் காஞ்சி) (பொ.யு. 6-ஆம் நூற்றாண்டு) வடதமிழ்நாட்டு (தொண்டைமண்டல) காஞ்சிபுரத்தில் அமைந்த சமணக் கோயில். சமயம், கல்வி, சமுதாயம் சார்ந்து பெரும் தொண்டுகள் நடந்து வந்த இடம். இந்தியாவிலிருந்த நான்கு வித்தியா ஸ்தானங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது.

இடம்

காஞ்சிபுரத்தின் தென்மேற்குப் பகுதியில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் பாயும் வேகவதி ஆற்றின் கரையில் அமைந்த திருப்பருத்திக்குன்றம் ஊராட்சியில் உள்ளது.

வரலாறு

திருப்பருத்திக்குன்றம் வர்த்தமானர் கோயில் பல்லவர் காலத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்தது. பொ.யு. 640-இல் சீன பௌத்த யாத்ரீகர் யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வந்த சமயம் காஞ்சி மாநகரில் எண்பத்து மூன்று சமணக் கோயில்களைக் கண்டு சென்றதாக தன் பயணக்குறிப்பில் குறித்துள்ளார்.

பல்லவர்களது ஆட்சியின் போது தோற்றுவிக்கப்பட்ட மகாவீரர் கோயில் படிப்படியாக விரிவாக்கம் பெற்று வளர்ந்திருப்பதை இங்கு காணலாம். இக்கோயில் சோழர் காலத்திலும், விஜயநகர மன்னர்களது ஆட்சியின் போதும், அதற்குப் பின்னரும் பல்வேறு தானங்களைப் பெற்றிருக்கிறது. சமயம், கல்வி சமுதாயப் பணிகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இந்தியாவிலுள்ள நான்கு வித்தியா ஸ்தானங்களுள் ஒன்றாகக் கருதப்பட்டது.

பல்லவர்கள் காஞ்சியை தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்திய போது திருப்பருத்திக்குன்றம்,ஒரு முக்கியமான சமணத் தலமாக இருந்தது. இங்கு திரிலோக்கியநாதார் மற்றும் சந்தரபிரபர் எனும் இரண்டு முக்கிய கோயில்கள் உள்ளன. இவ்விரண்டு கோயில்களிலும், பல்லவர், சோழர் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. திரிலோக்கியநாதர் கோயில் பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்டு பின்னர் சோழர் மற்றும் விஜயநகர மன்னர்கள் காலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.

அமைப்பு

சமணக் காஞ்சியில் இரண்டு கோயில்கள் உள்ளது. அதில் ஒன்று பல்லவர் காலத்துக் கோயில். மற்றொன்று பல்லவர் காலத்திற்குப் பின்னர் கட்டப்பட்டது. சமணக் காஞ்சியில் சமண மடம் ஒன்று இயங்கி வந்ததாக வரலாற்றுக் குறிப்பின் வாயிலாக அறியலாம்.

கல்வெட்டு/ செப்பேடு

தமிழகத்தில் கிடைத்த முதல் செப்பேடான பள்ளன் கோயில் செப்பேடு திருப்பருத்திக்குன்ற மகாவீரர் கோயில் பற்றியது. இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் கருங்கற்களால் கட்டப் பட்டது. அறப்பாவலர் அர்க்ககீர்த்தி, “தொன்மைசேர் பருத்திக் குன்றிலுறைகின்ற திரிலோகநாதனே” எனத் தன் கவியில் குறிப்பிடுகிறார்.

சந்திரபிரபா கோயில்

சமணக் காஞ்சியில் சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரப்பிரபருக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பொ.யு. எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கருவறையில் சந்திரப்பிரபரின் சுதை வடிவம் உள்ளது. மேடான இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளதால் இக்கோயிலை ஏர்வாஸ்தலம் என்றும் மலையனார் கோயில் என்றும் அழைக்கப்பட்டதாக இத்தல வரலாறு ஆய்வுநூல் எழுதிய அறிஞர் டி. என். இராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார். இக்கோயில் பல்லவப் பேரரசர் இரண்டாம் நரசிம்ம பல்லவன் உருவாகியிருக்க வேண்டும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.

வர்த்தமானர் கோயில்

முதற்தொகுதி கருவறைகளைக் (மகாவீரர், புஷ்பதந்தர் தருமதேவி) கொண்ட கட்டட அமைப்பினை திரைலோக்கிய நாதர் கோயில் எனவும், இரண்டாவது தொகுதியினைத் திரிகூடபஸ்தி எனவும் பொதுவாக அழைப்பது மரபாகும். இவை இரண்டிற்கும் பொதுவாக மகாமண்டபமும், அதனையடுத்து பலிபீடம், மானஸ்தம்பம் ஆகியவையும் காணப்படுகின்றன. இவையன்றி திருச்சுற்று மதிலை ஒட்டி பிரம்மதேவர், ரிஷபநாதர் ஆகியோரது கருவறைகளும் ஐந்து முனிவர்களுக்கெனத் தோற்றுவிக்கப்பட்ட முனிவாச மண்டபங்களும், தானியச் சேமிப்பு அறையும் உள்னன.

இருப்பத்து நான்காவது தீர்த்தங்கரான மகாவீரர் எனும் வர்த்தமானர் மூலவராக உயர்ந்த பீடத்தின் மீது, தேவர்கள் கவரி வீச, முக்குடை கவிப்ப, ஆழ்ந்த தவக்கோலத்தில் காட்சி தருகிறார். இவரை திரிலோகநாதர் என்று அழைப்பர். வர்த்தமானர் கோயிலில் மகாவீரர், புஷ்தந்தர், தருமநாதர் பத்மபிரபா, வசுபூஜ்ஜியர், பார்சுவநாதர், ரிசபநாதர், பிரம்மதேவர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளது. இக்கோயிலில் அர்த்தமண்டபம், முக்கிய மண்டபம், சங்கீத மண்டபம், சாந்தி மண்டபம், வலம் வரும் பாதை, கோயில் கிணறு, சுற்றுச் சுவர்கள் எனச் சிறப்பான உள்கட்டமைப்புகளுடன் முழுமையாகப் பல்லவர்களின் கட்டடக்கலையில் வெளிப்படுகிறது.

பிரம்ம தேவர்

சீதளநாதர தீர்த்தங்கரர் யக்ஷன், பிரம்ம தேவருக்கான சிறிய கோயில் மண்டப அமைப்புகளுடன் விளங்குகிறது. பிரம்ம தேவரின் வாகனம் யானை. அடுத்து சாந்தி மண்டபம், ஜென்மாபிஷேக மண்டபம் என்பன உயர்ந்த அமைப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

திரிகூட பஸ்தி

ஆறாவது தீர்த்தங்கரரான பத்ம்பிரபா, பன்னிரெண்டாவது தீர்த்தங்கரரான வாசுபூஜ்யர், இருபத்திமூன்றாவது தீர்த்தங்கரரான பார்ஸவநாதர் ஆகிய மூவருக்கான கோயில்கள் முதலாம் காலத்தில் கட்டப்பட்டவைகளாகும்.

தலவிருட்சம்

குராமரம் இத்தலத்தின் தலவிருட்சமாக உள்ளது. தர்மகுரா என்று அழைக்கப்படுகிறது. தன்னளவில் குன்றாமலும் குறையாமலும் விளங்கி, நாட்டின் மன்னரது நல்லாட்சியை உயர்த்தி நிற்பதாக நம்பிக்கை உண்டு. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இம்மரம் தருமத்தின் உறைவிடமாகவும் அரச செங்கோலைக் காக்க கூடியதென்றும் நம்பப்படுகிறது. அதனைச் சுற்றி மேடையும் காணப்படுகின்றன. திருச்சுற்று மதிலின் கிழக்குப் புறத்தில் மூன்று நிலைகளைக் கொண்ட கோபுரம் கட்டப்பட்டிருக்கிறது.

குராமரத்தின் கீழ் ஆசாரியர்களின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றில் மல்லிசேன வாமன ஆசாரியர் என்பவரின் பாதமும் ஒன்று. இவர் மேருமந்திர புராணம், நீலகேசி என்ற நூலுக்கு சமய திவாகரம் உரை ஆகிய நூல்களை இயற்றித் தமிழுக்கு அணி சேர்த்தார். மேருமந்திர புராணத்தையும் உலகிலேயே உள்ள ஒரே ஒரு நீலகேசிச் சுவடியையும் 90 ஆண்டுகளுக்கு முன் பேராசிரிய அ.சக்கரவர்த்தி நைனார் என்பவர் முதன்முதலாகச் சுவடிகளிலிருந்து பதிப்பித்தார்.

சமண மடம்

ஒரு காலத்தில் ஜைன காஞ்சியாக, சமண மையமாகத் திகழ்ந்த இவ்விடத்தில் சமண மடம் ஒன்றும் இருந்தது. தற்போது அது செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூருக்கு இடம்பெயர்ந்துவிட்டது.

ஓவியங்கள்

வர்தமானரின் ஜென்மாபிஷேக சடங்கு

இங்கு விஜயநகர காலத்தில் சங்கம வம்சத்து மன்னர் புக்கராயரின் தலைமை அமைச்சர் இருகப்பா என்பவரால் பொ.யு. 14ஆம் நூற்றாண்டு சங்கீத மண்டபம் எழுப்பப்பட்டு அதன் விதானங்களில் சுவரோவியங்கள் வரையப்பட்டுள்ளன. திருப்பருத்திக்குன்றத்தில் உள்ள ஓவியங்கள் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் வரையப்பட்டவையாகும். முதலாவது 14 ஆம் நூற்றாண்டையும், இரண்டாவது 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகின்றது. முதலாவது வகையில் ஓவியங்கள் தனித்தனிக் காட்சியாக உள்ளது இரண்டாவது வகையில் ஓவியங்கள் தொடர் காட்சியாக நீண்ட விளக்கமாக காட்டப்பட்டுள்ளது.

ஆரம்ப கால ஓவியங்கள்

இக்காலக் கட்டத்தில் வரைந்த பெரும்பாலன ஓவியங்கள் மறைந்து போயுள்ளன. இருப்பினும் சில இடங்களில் ஓவியங்கள் அடையாளம் காணும் அளவிற்கு எஞ்சியுள்ளன. இதில் வர்த்தமான மகாவீரரின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், அவரது தாயார் பிரியகாமினி கர்ப்பமாக இருந்தது, சதுர்மேந்திரர் தலைமையில் நடக்கும் தீர்த்தங்கரர்களின் பிறப்புச் சடங்குகள் போன்றவை குறிப்பிடத்தக்க ஓவியங்களாகும். இவ்விதானத்தின் பிற பகுதிகள் கதைகள் ஏதுமின்றி சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ண அலங்கார வேலைப்பாடுகளால் நிரப்பப்பட்டுள்ளது.

வர்தமானர் தீட்சை செய்கின்ற காட்சி

மண்டபங்களின் உட்கூரைகளில் மிக அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. பகவான் ரிஷபதேவர், மகாவீரர், நேமிநாதர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் வண்ண ஓவியங்களாக உள்ளன. கிருஷ்ணரின் பிறப்பு, வளர்ப்பு, அவரின் வீர தீர லீலைகளும், தருமதேவிஅம்மனின் வாழ்க்கை வரலாறும் கண் கவரும்படி மிக உன்னத ஓவியங்களாகப் பல வண்ணங்களில் உள்ளன.

பிற்கால ஓவியங்கள்
கிருஷ்ணன் ஜராசந்தாவுடன் யுத்தம் செய்தல்

மண்டபத்தில் உள்ள பெருபாலான ஓவியங்கள் வரைவு யுத்தியைக் கொண்டு 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் வரைந்திருக்ககூடும் எனக் கருதப்படுகின்றது. இங்குள்ள முதல் தளத்தில் வடக்குப் பக்கத்தில் ரிஷபநாதருடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வரையப்பட்டுள்ளன. இக் கதையின் சில பகுதிகள் இரண்டாம் தளத்திலும் காணப்படுகின்றது. பெரும்பாலன காட்சிகள் வலது புறம் இருந்து இடது புறமாக செல்கிறது, சில இடங்களைத் தவிர. இங்கு ஏழு ஓவியத்தொகுதிகளில் ரிஷபதேவரின் முந்தைய பிறப்பில் நடந்த வெவ்வேறு சம்பவங்களும், மற்றவற்றில் தீர்த்தங்கரராய் மாறிய பின் நிகழ்ந்த சம்பவங்களும் வரையப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மகாவீரரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் வரையப்பட்டுள்ளன. தாழ்வாரப் பகுதியில் இருக்கும் பல ஓவியங்கள் அழிந்த நிலையில் உள்ளன. காட்சிகள் 14 ஓவியத் தொகுதிகளில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும், மனிதர்கள் மற்றும் வானுலக பெண்கள் குடை மற்றும் கொடிகளை ஏந்திச்செல்வதாக உள்ளது. மேலும், இங்கு 22 வது தீர்த்தங்கராகிய நேமிந்நாதர் மற்றும் கிருஷ்ணர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அதிக அளவில் மண்டபத்தின் தெற்குப் பகுதியில் வரையப்பட்டுள்ளன. இம் மண்டபத்தில் பெரும்பாலான ஓவியங்கள் சிதிலமடைந்துள்ளது, இருப்பினும் அங்கு காணப்படும் தமிழ் விளக்க குறிப்புகளின் உதவியுடன் வரையப்பட்ட காட்சிகளில் சில அடையாளம் காணும்படி உள்ளது.


உசாத்துணை