standardised

தலைமுறைகள்

From Tamil Wiki
Revision as of 17:18, 17 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Moved to Standardised)
தலைமுறைகள்

தலைமுறைகள் (1968) நீல பத்மநாபன் எழுதிய நாவல். தமிழில் முழுக்கமுழுக்க வட்டார மொழியையே கதைசொல்லும் மொழியாகவும் கொண்டு எழுதப்பட்ட முதல்நாவல். குமரிமாவட்டம் இரணியல் பின்னணியில் இரணியல்செட்டிமார் அல்லது ஏழூர்செட்டிமார் என்னும் சாதியின் பின்புலத்தில் துல்லியமான நுண்செய்திகளுடன் மிகையில்லாத யதார்த்தமாக எழுதப்பட்ட இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட மிகமுக்கியமான நாவலாகக் கருதப்படுகிறது

எழுத்து, பிரசுரம்

தலைமுறைகள் நீல பத்மநாபனின் மூன்றாவது நாவல். நாகர்கோயில் ஜெய்குமாரி ஸ்டோர்ஸ் என்னும் புத்தகக்கடை தலைமுறைகள் நாவலை வெளியிட்டது. நீல பத்மநாபனின் சொந்தச் செலவில் இந்நூல் வெளியாகியது என அவர் பதிவுசெய்திருக்கிறார்.

கதைச்சுருக்கம்

தலைமுறைகள் நாவல் இரணியல்செட்டிமார்களின் குடும்ப ஆசாரங்கள், குடித்தொன்மங்கள் ஆகியவற்றை நுட்பமாக அவர்களின் உறவுமுறைகள் மற்றும் பேச்சுமொழியுடன் சித்தரிக்கிறது. பழம்பெருமையின் எச்சமாக இருக்கும் கூனன்காணிப்பாட்டா சொத்துக்களை அழித்தவர். ஆனால் காலம் மாறுவதை உணராதவர். கதைநாயகன் திரவியின் அக்கா நாகுவை செவத்தபெருமாள் என்பவன் மணக்கிறான். குழந்தைப்பேறுக்கு தகுதியற்றவள் என்று சொல்லி அவளை ஒதுக்கிவிடுகிறான். கல்வி கற்று ஆசிரியராக ஆகும் திரவி அது தவறான குற்றச்சாட்டு என மருத்துவரீதியாக நிரூபித்து நாகுவை மறுமணம் செய்து அனுப்ப முயல்கிறான். அதில் வரும் சிக்கல்களும் நாகுவை மணக்கவிருக்கும் மணமகனை செவத்தபெருமாள் கொலைச்செய்ய, நாகு தற்கொலை செய்ய, திரவியின் முயற்சி நிறைவேறாது போவதுமே நாவலின் கதை. சிங்கவினாயக தேவஸ்தானத்து பிள்ளையார் கோயில் நிர்மால்ய பூஜையின் தீபாராதனை மணியோசை சிதறல்களில் துவங்கி அதே மணியோசையில் முடிவடைகிறது நாவல்

கதைமாந்தர்

  • திரவி- கதைநாயகன், ஆசிரியம்
  • நாகு- திரவியின் அக்கா. அவளுக்கு மறுமணம் புரிந்துவைக்க திரவி முயல்கிறான்
  • செவத்தபெருமாள் - நாகுவை மணந்து பின் ஒதுக்கிவைக்கும் கணவன்
  • கூனன்காணிப் பாட்டா - திரவியின் தாத்தா
  • உண்ணாமலை ஆச்சி- திரவியின் பாட்டி, கூனன்காணிப்பாட்டாவின் அக்கா

இலக்கிய இடம்

நீல பத்மநாபனின் தலைமுறைகள் நாவலில் கதைசொல்லவும் பேச்சுமொழிக்கு அணுக்கமான நடையை பயன்படுத்தியிருக்கிறார். இது க.நா.சுப்ரமணியம் போன்ற விமர்சகர்களால் பாராட்டப்பட்டது, மரபான வாசகர்களால் எதிர்க்கப்பட்டது. “நீல பத்மநபனின் தலைமுறைகள் தமிழ் உரைநடைப்போக்கில் முக்கியமானதோர் திருப்புமுனையாகும்.பேச்சுத்தமிழ் இலக்கியப் படைப்புக்குரியதே என்று செயல்முறையில் செய்துகாட்டிய சாதனை நீலபத்மநாபனுடையது. இதை ஆங்கில மொழியில் ஜேம்ஸ் ஜாய்ஸ் யுலிஸஸ் நாவல் மூலம் செய்துகாட்டிய சாதனையுடன் ஒப்பிடலாம்’’ என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார் (கால ஓட்டமும் தமிழ்நடையும். கல்கத்தா தமிழ் மன்ற வெள்ளிவிழா மலர்)

இந்நாவலின் மொழிநடை மிக நிதானமானது. உண்ணாமலை ஆச்சி, திரவி ஆகியோரின் பேச்சு, நினைவுகூரல் வழியாக கதை நகர்கிறது. ”பெரும்பாலான வெற்றிகரமான இந்திய நாவல்களில் அமைந்திருப்பதைப் போல, நாவலின் தொடக்கம் சாவதானமானதாகவும், மெதுவாகவும் அமைந்து நாவல் முழுமைக்கும், நாவலின் நடையை ஒழுங்கமைத்துக் கொடுக்கிறது. கற்பனை நாவலாசிரியன் மனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம், நாவலின் நடை, இந்தியாவில் வாழ்க்கை மிகவும் நிதானமானதாகும். இங்கு பெரும்பாலானவர்களுக்கு என்ன செய்வது என்று புரியாமலிருக்கிற அளவிற்கு அதிக நேரம் இருக்கிறது. மேலும், யதார்த்த வாழ்க்கையையும், யதார்த்தமான குணச்சித்திரங்களையும் உண்மையாகச் சித்தரிப்பதற்கு விவரங்களைச் சாவதானமாக அமைப்பது இந்திய நாவலாசிரியனின் வலுவான அம்சங்களில் ஒன்றாகும்” என்று விமர்சகர் க.நா.சுப்ரமணியம் சொல்கிறார்.[1]

’இந்தியச் சூழ்நிலையில் விமரிசனப் பரீட்சைகளை எதிர் கொண்டு நிற்கக்கூடிய ஓரிரு டஜன் நாவல்களில் 'தலை முறைகளும் ஒன்று. சிறப்பு வாய்ந்த திறமையான ஒரு கற்பனை முயற்சி. உத்திபூர்வமாகவும் சிறந்த படைப்பு. நாவலின் பல பகுதிகளில் ஆசிரியர் கையாண்டிருக்கும் உத்திகள் பெரும்பாலும் உணர்வுபூர்வமற்றிருந்த போதிலும், மானுட யதார்த்தத்துக்கும் அனுபவத்துக்கும் அவை நெருங்கிய தொடர்பு கொண்டவை’ என்று மதிப்பிட்டு கூறுகிறார். க.நா.சுப்ரமணியம். ‘தலைமுறைகள் அவ்வகையில் ஒரு முன்னோடியாக அமைந்தது. நாம் முதலில் எழுத வேண்டியது கனவுகளையல்ல, நிதரிசனத்தை என்று அது கற்பித்தது. எந்தக் கனவும் நிதரிசனம் சார்ந்து செயல் படும் போதே முக்கியத்துவம் பெறுகிறது என்று பொட்டில் அடித்தது போல சொல்லியது’ என்று ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.[2]

மொழியாக்கம்

  • The Generation - Hind Pocket Books, Tr K.N.Subramanyam (க.நா.சுப்ரமணியம்)

உசாத்துணை

இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.