பஃறொடை வெண்பா

From Tamil Wiki
Revision as of 15:18, 28 July 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வெண்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, நான்கடிக்கும் அதிகமான அடிகளைப் பெற்று வருவது பஃறொடை வெண்பா.  (பல் + தொடை = பஃறொடை) பனிரெண்டு அடிகள் வரை வரும். அதற்கு மேல் அடிகளின் வரின் அது கலிவெண்பாவாகக் கருதப்படும். பஃறொடை வெண்பா ஒருவிகற்பத்தாலும், பலவிகற்பத்தாலும் வரும்.

பஃறொடை வெண்பா இலக்கணம்

பஃறொடை வெண்பா நான்கடிக்கு மேல் பனிரண்டு அடி வரை வரும்.

அடிதோறும் நான்கு சீர்கள் கொண்ட அளவடியாய் வரும்.

ஈற்றடி முச்சீராய் அமையும்.

இரண்டு அடிக்கு ஒரு தனிச்சொல் பெற்றும், அடிதோறும் தனிச்சொல் பெற்றும், தனிச்சொல்லே இல்லாமலும் வரும்.

சீர்களில் இயற்சீர் மற்றும் வெண்சீரைக் கொண்டு அமையும்.

இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டுமே வரும்.

செப்பலோசை உடையதாய் இருக்கும்.

நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்ப்பாடுகளைக் கொண்டு முடியும்.

பஃறொடை வெண்பா வகைகள்

பஃறொடை வெண்பா ஒரு விகற்பப் பஃறொடை வெண்பா, பல விகற்பப் பஃறொடை வெண்பா என இரண்டு வகைப்படும்.

ஒரு விகற்பப் பஃறொடை வெண்பா

சேற்றுக்கால் நீலம் செருவென்ற வேந்தன்வேல்

கூற்றுறழ் மொய்ம்பின் பகழி பொருகயல்

தோற்றம் தொழில்வடிவு தம்முள் தடுமாற்றம்

வேற்றுமை இன்றியே ஒத்தன மாவேடர்

ஆற்றுக்கால் ஆட்டியர் கண்ழு

ஐந்தடியால் அமைந்த இப்பஃறொடை வெண்பாவில், சேற், கூற், தோற், வேற், ஆற் என ஒரே விகற்பம் அமைந்துள்ளதால் இது  ஒரு விகற்பப் பஃறொடை வெண்பா.

பல விகற்பப் பஃறொடை வெண்பா

பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவில்

என்னோடு நின்றார் இருவர் அவருள்ளும்

பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக்

கியானைநன் றென்றாளும் அந்நிலையள் யானை

எருத்தத் திருந்த இலங்கிலைவேல் தென்னன்

திருத்தார்நன் றென்றேன் தீயேன்

ஆறடியால் அமைந்த இப்பாடலில் பன், என், பொன்; கியா; எருத்த, திருத்தார் - என இரண்டுக்கு மேற்பட்டப் பல விகற்பங்கள் அமைந்துள்ளதால் இது பல விகற்பப் பஃறொடை வெண்பா.

உசாத்துணை