under review

செந்தீ நடராசன்

From Tamil Wiki
Revision as of 11:41, 28 July 2023 by Logamadevi (talk | contribs)
SENTHINATARAJAN.jpg

செந்தீ நடராசன் (பிறப்பு: ஜூலை 06, 1940) நாட்டார் வழக்காற்றியலாளர், சமூக மானுடவியல் ஆய்வாளர், தொல்லியல் மற்றும் கோயிற்கலை ஆய்வாளர். மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்பவர். குமரி மாவட்ட கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவராக இருந்தார். தமிழ்நாடு தொல்லியல் துறையின் தலைவராகப் பதவி வகிக்கிறார்.

பிறப்பு, கல்வி

செந்தீ நடராசன் ஜூலை 06, 1940 அன்று திருவனந்தபுரத்தில் (அப்போதைய திருவிதாங்கூர்) சுப்பையன், காளியம்மாள் தம்பதியருக்கு பிறந்தார். அப்பா சுப்பையன் திருவிதாங்கூர் மாகாண உயர்நீதிமன்றத்தில் பணியாற்றியவர். உடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரிகள். செந்தீ நடராசன் அவர்களில் இளையவர்.

செந்தீ நடராசன் ஐந்தாம் வகுப்பு வரை நாகர்கோவில் அரசு தொடக்கப்பள்ளியில் கற்றார். பின் ஆறாவது பாரம் (அப்போதைய எஸ்.எஸ்.எல்.சி) வரை எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். நாகர்கோவில் எஸ்.டி. இந்துக் கல்லூரியில் பி.யூ.சி பட்டமும்,ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். சென்னை சைதாப்பேட்டையிலுள்ள அரசுக் கல்லூரியில் கல்வியியலில் இளங்கலைப் (பி.எட்) பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

செந்தீ நடராசன் 1967-ஆம் ஆண்டு கமலாவை திருமணம் செய்துக் கொண்டார். கமலா நடராசன் (எம்.எட்) வேதியியல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். செந்தீ நடராசன் கமலா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள். மகன் செந்தில் குமரன், மகள் செந்தளிர்.

1962-ஆம் ஆண்டு செந்தீ நடராசன் ஊட்டி செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் ஐந்து மாதம் வேலை பார்த்த பின் நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வேலையில் சேர்ந்தார். 1962 முதல் 1966 வரை அகஸ்தீஸ்வரத்தில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1966-ல் சூரங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கிருந்த போது பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரியில் அரசு செலவில் கல்வியியலில் முதுகலை(எம்.எட்.) படித்து பட்டம் பெற்றார். அகஸ்தீஸ்வரம் உயர்நிலைப் பள்ளியிலும், எஸ்.எல்.பி உயர்நிலைப் பள்ளியி பதினொன்றாம், பன்னிரெண்டாம் வகுப்பு இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். 1996 முதல் 1999 வரை கலிங்கப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி 1999-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

தற்போது மனைவி கமலாவுடன் நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் கோவில் தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

பொது வாழ்க்கை

கலை இலக்கிய பெருமன்றம்
Sirpam-thonmam.jpg

செந்தீ நடராசன் சூரங்குடியில் வேலை செய்த போது அங்கே தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தோடு அறிமுகம் ஏற்பட்டது. 1966-ல் நாகர்கோவில் கலை இலக்கிய பெருமன்றம் தொடங்கப்பட்டபோது அதன் உறுப்பினர் ஆனார். அங்கே செந்தீ நடராசனின் எம்.எட். கல்லூரி தோழரான எழுத்தாளர் பொன்னீலன், நா. வானமாமலையை அறிமுகம் செய்து வைத்தார். நா. வானமாமலை உடனான தொடர்பு செந்தீ நடராசனை ஆய்வு பக்கம் திருப்பியது.

செந்தீ நடராசன் தன் ஆய்வை சமூக மானுடவியலிலும், நாட்டார் வழக்காற்றியலிலும் மேற்கொள்ளத் தொடங்கினார். கலை இலக்கியப் பெருமன்றம் மூலம் நாடகம், இலக்கியம், பட்டிமன்றம் போன்றவற்றை நாகர்கோவிலில் நிகழ்த்தினார். சில நாடகங்கள் செந்தீ நடராசனே எழுதி, இயக்கி அரங்கேற்றினார். அவற்றில் நடிக்கவும் செய்தார்.

தொல்லியல் ஆய்வு

பொ.யு. 2000-ல் செந்தீ நடராசனுக்கு தொல்லியல் ஆய்வாளர் கோபாலனின் அறிமுகம் ஏற்பட்டது. கோபாலனின் அறிமுகம் வேலை ஓய்வுக்கு பின் செந்தீ நடராசனை தொல்லியல் ஆய்வு பக்கம் திருப்பியது. செந்தீ நடராசன் தொல்லியல் கருத்தரங்கில் பங்கேற்றார். கல்வெட்டில் பிராமி, வட்டெழுத்துகளைப் படிக்கக் கற்றுக் கொண்டார். 'தொல் தமிழ் எழுத்துக்கள்- ஓர் அறிமுகம்' ,'சிற்பம் தொன்மங்கள்', பண்பாட்டுத் தளங்கள் வழியே' போன்ற செந்தீ நடராசனின் புத்தகங்கள் முக்கியமானவை. செந்தீ நடராசன் நாகர்கோவில், திருநெல்வேலி மாவட்டங்களைத் தன் ஆய்வு களமாக கொண்டவர்.

கல்வெட்டு ஆய்வுகள்

செந்தீ நடராசன் கல்வெட்டு ஆய்வுகளை சமூகவியல் பார்வையில் நிகழ்த்தியவர். குமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல புதிய வட்டெழுத்துக் கல்வெட்டுகள், கிரந்த கல்வெட்டுகள், செப்பேடுகளை படித்து பதிவு செய்துள்ளார். செந்தீ நடராசன் நாகர்கோவிலில் உள்ள குமார கோவில் வெளிச்சுவரில் அமைந்த முப்பத்தி ஆறு வரிக் கல்வெட்டை கண்டுப்பிடித்து, படித்து பதிவு செய்துள்ளார்.[1]

பொ.யு. 1366-ஆம் ஆண்டு எழுதப்பட்ட கல்வெட்டு ஒன்றில் வட்டெழுத்தில் தொடங்கி தற்கால தமிழ் எழுத்து வரையுள்ள கல்வெட்டை கண்டுபிடித்துள்ளார்.[2]

குமரியில் சமணத்தின் சுவடுகள்

குமரி மாவட்டத்தில் உள்ள சமண வரலாற்று தடங்களை தேடி ஆராய்ந்துள்ளார். சிதறால் மலையில் முழு உருவம் கொண்ட சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள நாகராஜர் கோவிலை ஆராய்ந்து அங்கே தூண்களில் காணப்படும் பார்ஸ்வநாதர், மகாவீரவர்த்தமானர், அம்பிகா யட்சி, பத்மாவதி சிற்பங்களை ஆராய்ந்து பதிவு செய்தார். கோவிலில் உள்ள பொ.யு. 1513 தொடங்கி 1580 வரை உள்ள சதுர தூண்களால் ஆன கல்வெட்டுகளைப் படித்து 1600 வரை சமணர் கோவிலாக இருந்தது பற்றியும், பின்பு வைணவக் கோவிலாக மாறியது பற்றியும் பதிவு செய்துள்ளார்.[3]

குழு செயல்பாடுகள்
  • தமிழ்நாடு தொல்லியல் துறைத் தலைவராக 2020 முதல் 2023 வரை பொறுப்பில் இருந்தார்.
  • கன்னியாகுமரி மாவட்ட கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவராக 1974 முதல் ஐந்து வருடம் இருந்தார்.
  • கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில அளவில் இலக்கிய குழு செயலாளராக இருபத்தைந்து ஆண்டுகள் இருந்தார்.
  • தற்போது கலை இலக்கிய பெருமன்றத்தின் வழிகாட்டு குழுவின் உறுப்பினர்.
இதழியல் பங்களிப்பு

பொ.யு. 1977-ல் செந்தீ நடராசன் குமரி மாவட்ட கலை இலக்கிய பெருமன்றத்தின் செயலாளராக இருந்த போது ’புதிய வானம்’ என்ற மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்தார். இதன் பதினெட்டு இதழ்கள் வெளிவந்துள்ளன.

விருதுகள்

  • நல்லாசிரியர் விருது
  • அருவினையாளர் விருது
  • சிற்பம் தொன்மம் நூலிற்காகசென்னை கவிதை உறவுகள் அமைப்பு விருது வழங்கியது.

நூல்கள்

  • சிவ... சிவ... (கணிச்சியோன்)
  • புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்
  • பண்பாட்டுத் தளங்கள் வழியே
  • சிற்பம் தொன்மம்
  • தொல்தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம்
  • குமரியில் சமணத்தின் சுவடுகள்

ஆய்வுரை காணொளிகள்

சமயக்கணக்கர்[4]
சமணம்
பௌத்தம்
வைணவம்
பிற

உரைகள்

நேர்காணல் காணொளிகள்

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. கல்வெட்டு குறிப்பு: குமாரகோவிலில் கிடைத்தது ஒருவர் கொடுத்த நிவந்தத்தை பற்றிய குறிப்பு அமைந்த கல்வெட்டு. அதில் ‘நிலமும், புரையிடமும், ஆள் அடிமையும் விட்டுக் கொடுத்து’ என்ற வரி உள்ளது. இதன் படி கோவில் பணிக்கு நிலம், புரையிடம், அடிமை ஆட்களும் கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது என்ற சமூகவியல் ஆய்வில் அக்கல்வெட்டை ஆராய்ந்து பதிவு செய்துள்ளார்.
  2. தமிழகத்தில் பொ.யு. 13 -ஆம் நூற்றாண்டிற்கு முன்பாகவே வட்டெழுத்து புழக்கம் குறைந்துவிட்டது. குமரி மாவட்டத்தில் பொ.யு. 14- ஆம் நூற்றாண்டில் கிடைத்த கல்வெட்டு அங்கே வட்டெழுத்துக்கள் 14 -ஆம் நூற்றாண்டு வரை வழக்கில் இருந்ததைக் காட்டுகிறது என ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.
  3. கல்வெட்டு ‘நாகர்க்கும், நாகராஜாவுக்கும்’ என்ற குறிப்பு உள்ளது. அதன் மூலம் அது பார்ஸ்வநாதர் என்ற இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கருடைய யட்சன் (தர்மேந்திரன்) என்றும், கல்வெட்டு படி நாகருக்கும், நாகராஜவுக்கும் காலையும், மதியமும் அமுது படி வழக்கப்படுகிறது. இரவு நாகருக்கு இரண்டு படி அமுதும், நாகராஜவுக்கு உணவு வழக்கப்படுவதில்லை என்ற குறிப்பும் மூலம் அக்கோவில் சமண மதத்தை சார்ந்தது என்ற முடிவுக்கு ஆய்வாளர் வருகிறார்.
  4. சமயக்கணக்கர் என்ற தலைப்பில் செந்தீ நடராசன் கீற்று கீற்று யூடியூப் தளத்தில் ஆற்றிய உரைகளின் தொகுப்பு


✅Finalised Page