first review completed

முல்லைப்பாட்டு

From Tamil Wiki
Revision as of 14:49, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

முல்லைப்பாட்டு பதினென்மேற்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று. பத்து நூல்களின் தொகுதியாகிய பத்துப்பாட்டில் ஆறாவதாக அமைந்துள்ளது. நப்பூதனார் பாடியுள்ளார்.

நூல் பற்றி

பத்துப்பாட்டு தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் அடியளவால் சிறியது முல்லைப்பாட்டு. அகத்திணைப் பொருள் கொண்ட நான்கு நூல்களில் முதலாவதாக வைத்துப் பார்க்கப்படும் நூல். அகத்திணைச் செய்யுளுக்குரிய முதல், கரு, உரி ஆகிய முப்பொருளையும் கொண்டது. 103 அடிகளைக்கொண்ட ஆசிரியப்பா வகையில் இயற்றப்பட்டது. பாண்டிய அரசனான நெடுஞ்செழியனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு எழுதப் பட்டதாகக் கருதப்படுகிறது. ஆனால் தலைவனுடைய பெயர் பாட்டில் குறிப்பிடப்படவில்லை. முல்லைப்பாட்டு குறித்து மறைமலைஅடிகள், "முல்லைப்பாட்டு ஆராய்ச்சி" ஆராய்ச்சி நூலை எழுதியுள்ளார்.

ஆசிரியர் குறிப்பு

முல்லைப்பாட்டை காவிரிப்பூம்பட்டினத்தில் பொன்வணிகர் குடியில் பிறந்த நப்பூதனார் எழுதினார். "காவிரிப்பூம் பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்" என்று நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலக்கணம்

  • தொல்காப்பியம்

"வஞ்சி தானே முல்லையது புறனே"

"எஞ்சா மண்நசை வேந்தனை, வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென்று அடல்குறித் தன்றே"

பாடுபொருள்

முல்லைப்பாட்டு முல்லைத் திணைக்குரிய நூல். அகப்பொருள் பற்றியது. மழைக்காலத்துக்குமுன் திரும்பிவருவதாகச் சொல்லிப் போருக்குச் சென்ற தலைவன் குறித்த காலத்தில் வரவில்லை. தலைவி பிரிவுத் துயரம் தாளாமல் உடல் மெலிந்து வாடுகிறாள். செய்தி அறியச் சென்று வந்த தோழியரின் வார்த்தைகள் அவள் ஏக்கத்தைக் குறைக்கவில்லை. போரில் வெற்றி பெற்றுத் தலைவன் திரும்பியதும் தலைவி ஆறுதலடைந்து இன்பமுறுகிறாள். இந்த நிகழ்ச்சிகளைக் கருவாகக் கொண்டு நப்பூதனார் கவிநயத்தோடு எழுதியதே முல்லைப்பாட்டு. இது நெஞ்சாற்றுப்படை" என்றும் அழைக்கப்படுகிறது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • அரசர் முதல் ஆயர் வரை பண்டைகால மக்களின் வாழ்க்கை முறை
  • தழைவேய்ந்த கூரை வீடுகளை வரிசையாய்க் கொண்ட தெரு
  • நாற்சந்தியில் காவலாக யானையை நிற்க வைத்தல், யானைகளுக்கு உணவாக கரும்பையும், வைக்கோலையும், அதிமதுரத் தழைகளையும் இடுதல்.
  • ஆறுகள் சூழ்ந்தோடும் காட்டின் நடுவே பிடவம் முதலிய கொடிகளை அழித்து, அங்குள்ள காட்டுவாழ் வேடர்களின் அரண்களை அழித்து, அக்காட்டில் விளைந்த முட்களை பெருமதில் போல் அமைத்துக் கொண்ட அரணைப் பற்றிய செய்தி வருகிறது.
  • கையில் சங்கும், சக்கரமும் கொண்டு திருமகள் நெஞ்சில் வீற்றிருக்கும் முல்லைத்திணையின் தெய்வமான திருமால் பற்றிய செய்தி வருகிறது.

பாடல் நடை

  • முல்லைப்பாட்டு: 13

நனந்தலை உலகம் வளைஇ, நேமியொடு
வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல்

  • முல்லைப்பாட்டு: 12-6

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்குசுவல் அசைத்த கையள்; கைய
கொடுங்கோல் கோவலர் பின்னின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயார் என்போள்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.