கல்கி (எழுத்தாளர்)

From Tamil Wiki
Revision as of 23:02, 19 January 2022 by Subhasrees (talk | contribs) (கல்கி கிருஷ்ணமூர்த்தி முதல் வரைவு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கல்கி (9-9-1899 – 5-121954) தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. இவர் எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், நாவல்கள் புகழ் பெற்றவை. தமிழில் வணிக எழுத்தை உருவாக்கி நிறுவனப்படுதியவர். ’கல்கி’ வார இதழை நிறுவியவர்.

பிறப்பு, கல்வி

கல்கி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை ராமசாமி அய்யர், தாயார் தையல்நாயகி. ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பின்னர் மாயூரம் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு திருச்சி தேசியக் கல்லூரியில் படித்தார்.

தனி வாழ்க்கை

1924ல் இவர் ருக்மணி என்பவரை மணந்தார். இவருக்கு ராஜேந்திரன் என்ற மகனும் ஆனந்தி என்ற மகளும் இருக்கின்றனர்.

1921-ல் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்று ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். விடுதலையானதும் அப்போது திருச்சியில் இருந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகத்தில் வேலையில் சேர்ந்தார். அதன் பின்னர் சிலகாலம் ஈரோடு கதர் அலுவலகத்தில் வேலை செய்தார். 1923-இல் திரு வி.க நடத்தி வந்த நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் ராஜாஜியின் திருச்செங்கோடு ஆசிரமத்தில் இருந்து அங்கிருந்து வெளியான “விமோசனம்” எனும் இதழிலும் எழுதி வந்தார், பின்னர் அதன் துணை ஆசிரியராக வேலை பார்த்தார்.

கல்கி தனது லட்சியவாதங்களில் உண்மையாக ஈடுபட்டு அதற்காக உழைத்தவர், சிறை சென்றவர். அதை இலக்கியமாக்குவதில் அவரது படைப்புகளின் விளைவுகள் கேளிக்கை எழுத்துக்கள் என்னும் எல்லையில் நின்றுவிட்டன.

இலக்கிய வாழ்க்கை

மகாத்மா காந்தி “யங் இந்தியா”வில் எழுதி வந்த சுயசரிதையை இவர் மொழிபெயர்த்து “நவசக்தி”யில் வெளியிட்டார். இவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-இல் வெளியானது. இவர் எழுதிய முதல் தொடர்கதை கள்வனின் காதலி ஆனந்த விகடனில் வெளியானது(1937). முழுக்கவே கேளிக்கை இதழாக இருந்த விகடனின் மைய வலிமையாக ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு 1941ல் இவரது நண்பர் சதாசிவத்துடன் இணைந்து “கல்கி” பத்திரிகையைத் தொடங்கினார். தமிழில் இதழியலும் கேளிக்கை எழுத்தும் ஒன்றை ஒன்று வளர்ப்பதான நிலை உருவானதன் முன்னோடியாக கல்கி அறியப்படுகிறார்.

அவருடைய முதல் புத்தகம் ஏட்டிக்குப் போட்டி 1927-ல் ஆனந்தவிகடனில் வெளியானது. நாவல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை இவர் எழுதியுள்ளார். சர் வால்டர் ஸ்காட், அலெக்ஸாண்டர் டூமா போன்ற எழுத்தாளர்களைத் தனது ஆதர்சமாகக் குறிப்பிட்டிருக்கிறார். இவரது பொன்னியின் செல்வன் போன்ற சரித்திர உணர்ச்சிக் கதைகள் (ரொமான்ஸ்) இந்த மேலை நாட்டு எழுத்தாளர்களின் பாணியில் உணர்ச்சிகளைத் தூண்டும் நாவல்களாகவே அமைந்தன. இவருடைய கதை சொல்லும் முறையில் வடுவூர் துரைசாமி அய்யங்கார் போன்ற முன்னோடிகளின் பாதிப்பும் இருந்தது. ஆனால் அவர்களைப் போல முற்றிலும் கேளிக்கை எழுத்தாக இல்லாமல் அன்று நிகழ்ந்துவந்த இந்திய தேசிய எழுச்சி, தமிழ்க் கலாசார மறுமலர்ச்சி, சமூக சீர்திருத்த நோக்கு ஆகியவற்றின் கூறுகள் இருந்தன.சமூக எழுச்சிகளை கேளிக்கை எழுத்தாக மாற்றியதன் மூலம் கேளிக்கை எழுத்தை பெரும் சமூக இயக்கமாக மாற்றினார். இந்தியக் காவிய மரபின் சாயலை மேற்கத்திய சாகசக் கதைகளின் சித்தரிப்புடன் இணைத்துத் தன் புனைவுத் தளத்தை உருவாக்கினார் என ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகத்தில்’ எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன், தியாகபூமி, பார்த்திபன் கனவு நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

மறைவு

1954ஆம் வருஷம் டிசம்பர் மாதம் 5ஆம் நாள் தனது 55ஆம் வயதில் காலமானார்.

விவாதங்கள்

கல்கிக்குப் பிறகு வணிகரீதியான எழுத்து இலக்கியம் என கருதப்படும் சூழல் ஏற்பட்டு தேவன், நா.பார்த்தசாரதி, அகிலன், சாண்டில்யன் என்ற ஒரு வரிசை உருவானது. தமிழ் பிரபல இதழ்களில் இலக்கியம் புறக்கணிக்கப்பட்டது. இதன் விளைவாக தீவிர இலக்கியம் வணிக எழுதிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிகொண்டது. புதுமைப்பித்தன் கல்கியை மிகக் கடுமையாக எதிர்த்து வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான தூரத்தை நிறுவினார்.இவர் பல கதைகளைத் தழுவி எழுதியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

படைப்புகள்

நாவல்கள்

கள்வனின் காதலி (1937) தியாகபூமி (1938-1939) மகுடபதி (1942) அபலையின் கண்ணீர் (1947) சோலைமலை இளவரசி (1947) அலை ஓசை (1948) தேவகியின் கணவன் (1950) மோகினித்தீவு (1950) பொய்மான் கரடு (1951) புன்னைவனத்துப் புலி (1952) அமரதாரா (1954)

வரலாற்று நாவல்கள்

சிவகாமியின் சபதம் (1944 – 1946) பார்த்திபன் கனவு (1941 - 1943) பொன்னியின் செல்வன் (1951 – 1954)

சிறுகதை தொகுதிகள்

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஒசை போன்ற நாவல்கள் பலரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன

விருதுகள்

சாகித்திய அகாதமி விருது, 1956 - அலை ஓசை சங்கீத கலாசிகாமணி விருது, 1953, தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி