under review

சுகுணபோதினி

From Tamil Wiki
Revision as of 14:42, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

சுகுணபோதினி (1883) மகளிர் இதழ். பெண் கல்வி, சுகாதாரம், பால்ய விவாக எதிர்ப்பு, கைம்பெண்களின் நலம் பேணல் போன்ற கருத்துக்களை உள்ளடக்கிய மாதமிருமுறை இதழ். ஐந்து ஆண்டுகாலம் வெளியான இவ்விதழ், போதிய ஆதரவு இல்லாததால் நின்றுபோனது.

பதிப்பு, வெளியீடு

சுகுணபோதினி இதழ் பெண்கள் முன்னேற்றத்தை வலியுறுத்தி வெளிவந்த இதழ். 1883 முதல் 1888 வரை தொடர்ந்து மாதமிருமுறை இதழாக வெளிவந்தது. இவ்விதழின் ஆசிரியர் இ. பாலசுந்தர முதலியார். தனி இதழின் சந்தா பற்றிய விவரங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆரம்பத்தில் வருடச் சந்தா மூன்றரை ரூபாயாக வெளிவந்தது. பின்னர் மூன்று ரூபாயாகக் குறைக்கப்பட்டது.

நோக்கம்

“பெண்களுக்கேற்ற பத்திரிகை ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்று நான் பேரவா கொண்டிருந்மையால் திரவிய நஷ்டம் பற்றிக் கவலைப்படவில்லை. பெண்களுக்கு நன்றாய் உபயோகப்படும்படி அவர்களுக்கு எவை முக்கியமோ அவற்றை பற்றி அதிகமாக எழுதப்படும். இதில் பெரும்பாலும் எம்மதத்தவர்களுக்கும் சம்மதமானவை மட்டும் எழுதப்படும். பெண்களின் நன்மையை நாடும் விஷயங்களை எழுதி அனுப்புங்கள். பெண்கள் நமது நாட்டில் தலையெடுக்க வேண்டுமென்று விரும்புங்கள். இதைப் பரவச் செய்யலாம்” என 1888-ல் இதழின் நோக்கமாக இதழாசிரியர் குறிப்பில் உள்ளது.

உள்ளடக்கம்

பதினாறு பக்கங்களைக் கொண்டது இவ்விதழ். கட்டுரைகள், சிறுகதைகள், சிறுகுறிப்புகள், பலச்சரக்கு சமாச்சாரம், விநோத விருத்தாந்தங்கள், வர்த்தமானம் போன்ற தலைப்புகளில் இவ்விதழில் படைப்புகள் இடம் பெற்றன.

கட்டுரைகள்

பெண்களைப் பற்றிய கட்டுரைகள் அதிகம் இடம் பெற்றன. பெண்கல்வி, பால்ய விவாகம், பெண்களின் கடமைகள், நன்மனையாள், விதவைகளின் துன்பநிலை, இந்து தாய்கள், இந்து விதவைகளை நடத்தும் முறை, மனைவிமார்கள் அடிக்கடி தாய்வீடு போவதால் வரும் கேடுகள் போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் வெளியாகின. பெரும்பாலான படைப்புகளில் ஆசிரியரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பத்திகள் பிரிக்கப்படாமல் பெரிய பெரிய பத்திகளாகவே இவ்விதழில் படைப்புகள் இடம் பெற்றன. இத்தகைய அமைப்பு அக்கால இதழ்கள் பலவற்றிலும் பரவலாக இருந்தது. வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள் சுகுணபோதினியில் இடம்பெற்றன. ரஷ்ய தேசத்துச் சக்கரவர்த்தினியாகிய காதரைமினுடைய சரித்திரம், விக்டோரியா மகாராணியாரின் சரித்திரம், டப்ரன் பெருமாட்டியின் வாழ்க்கைக் குறிப்புகள் போன்ற தலைப்பில் வரலாற்றுக் கட்டுரைகள் வெளிவந்தன. சுதேசமித்திரன், ஸ்ரீலோகரஞ்சனி, தேசோபகாரி, ஜனவிநோதினி போன்ற பிற இதழ்களில் வெளிவந்த சில முக்கியச் செய்திகள், குறிப்புகள், கட்டுரைகள் இவ்விதழில் வெளியிடப்பட்டன. குழந்தைகள் நலம் பற்றிய கட்டுரைகளும், உடல் நலம் பேணும் கட்டுரைகளும் இடம் பெற்றன. அறிவுரைகள் கூறும் பல பழமொழிகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இவை தவிர மரம் வளர்த்தல், மிருகங்களின் அறிவு, மக்கா, சீனா, பர்மா போன்ற நகரங்கள், அந்நகர மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் போன்றவையும் தொகுக்கப்பட்டன. பெண் கல்வியின் சிறப்பும் , அக்கல்வி இன்மையால் ஏற்படும் தீமைகளும், குழந்தை மண எதிர்ப்பு, குழந்தைக் கல்வி போன்ற கருத்துக்கள் இதழ்கள்தோறும் இடம் பெற்றன. வான சாஸ்திரம், கோள்களின் தன்மை போன்ற அறிவியல் தொடர்புடைய சில கட்டுரைகளும், கலிலியோ போன்ற விஞ்ஞானிகளைப் பற்றிய குறிப்புகளும், சமயம் சார்ந்த கட்டுரைகளுக்கும் சுகுணபோதினியில் இடம் பெற்றன.

சிறுகதைகள்

சுகுணபோதினியில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளை, சிறுகதைகளுக்கான ஆரம்ப காலகட்டத்து முயற்சிகள் என்று மதிப்பிடலாம். இவை பெரும்பாலும் சிறார்களுக்கானவை. நாட்டுப்புறக் கதைகளை, நீதிக் கதைகளை அடியொற்றி, அறிவுரை கூறும் விதத்தில் இவை எழுதப்பட்டன.

மதிப்பீடு

குழந்தை மண எதிர்ப்பு, கைம் பெண் மறுமணம், பெண்கல்வியின் இன்றியமையாமை, பெண்கள் சுகாதாரம், பெண்களின் இல்லறக் கடமைகள் குறித்து அதிகக் கட்டுரைகள் இவ்விதழில் வெளியாகின.

உசாத்துணை


✅Finalised Page