under review

அருமா மலை குகைக்கோயில்

From Tamil Wiki
Revision as of 08:32, 14 February 2022 by Tamaraikannan (talk | contribs) (Standardised)
அருமாமலை

அருமா மலை குகைக்கோயில் (பொ.யு. 7-8-ஆம் நூற்றாண்டு) தமிழகத்தில் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள சமண குகைக்கோயில். தமிழகத்தில் தொன்மையான சமண ஓவியங்கள் உள்ள இடங்களில் இதுவும் ஒன்று.

இடம்

அருமாமலை

வட ஆர்க்காடு மாவட்டத்தில் குடியாத்தம் வட்டத்தில் மலையம்பட்டு என்னும் ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் மேற்கிலுள்ளது அருமாமலை. ஆம்பூரிலிருந்து மலையம்பட்டை அடைந்து அங்கிருந்து இம்மலையை அடையலாம். இந்த மலை முன்பு அருகர் மாமலை என அழைக்கப்பட்டிருக்க வேண்டும் பின்னர் காலப் போக்கில் இடப்பெயர் குறுக்கம் செய்யப்பட்டு அருமாமலை என அழைக்கப் பெற்று வருகிறது.

குகை

இந்த மலையின் நடுப்பகுதியில் 131 அடி நீளமுடைய பெரிய குகை ஒன்று காணப்படுகிறது இது பண்டைக் காலத்தில் சமண சமயத் துறவியர் வதிந்த பள்ளி. இங்கு பிற கற்படுக்கைகளோ அல்லது சமண சமயப் பாறைச் சிற்பங்களோ இல்லை. கல்லில் பொறிக்கப்பட்ட சாசனங்களும் இங்கு இல்லை குகையின் அடித்தளப் பகுதிகளும் கற்களினாலும், மண்ணினாலும் நிரப்பப்பட்டிருப்பதால் ஒரு வேளை கற்படுக்கைகள் மறைக்கப்பட்டும் இருக்கலாம், குகையின் உட்பகுதியில் செங்கல்லால் கட்டப்பட்ட மூன்று கருவறைகளையும், அவற்றின் முன்பாக மண்டபத்தினையும் கொண்ட கோயில் ஒன்று காணப்படுகிறது. இக்கோயிலில் சுவர்கள் குகையின் கூரை வரையிலும் உயரமாக எழுப்பப்பட்டிருப்பதால், குகையின் விதானமே இதற்கும் கூரையாகத் திகழ்கிறது. இந்த கோயில் சுடப்படாத செங்கல்லினால் எழுப்பப்பட்டிருப்பதால் இதன் சுவர்கள் மிகவும் சிதைந்திருக்கின்றன.[1]

இயற்கையாக உள்ள இந்த குகையில் முதன்முதலாக எப்போது சமண சமயத் துறவியர் வாழலாயினர் என்பது பற்றி உறுதியாகக் கூறுவதற்கில்லை. எனினும் இங்குள்ள தொல்லியல் சான்றுகள் பொ.யு. 8-ஆம் நூற்றாண்டிற்குரியவையாக இருப்பதனை அடிப்படையாகக் கொண்டு, மிக்கவாறும் இதே நூற்றாண்டில் தான் இங்கு சமண சமயம் வேரூன்றியிருக்க வேண்டுமெனக் கூறப் படுகிறது.[2]

அருமாமலை ஓவியங்கள்

சிற்பங்கள்

அருகர் மாமலை குகையில் பாறைச் சிற்பங்கள் எவையும் வடிக்கப்படவில்லை இதிலுள்ள கட்டடக் கோயிலின் கருவறைகளிலும் தற்போது சிற்பங்கள் இல்லை. இம்மலைக்குச் செல்லும் வழியில் சிதைந்த தீர்த்தங்கரர் சிற்பம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்பு காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோயிலின் கருவறை நுழைவாயில்களை அலங்கரித்த மூன்று துவாரபாலகர் சிற்பங்கள் மட்டும் காணப்படுகின்றன. இவற்றுள் இரண்டு திருவுருவங்கள் இரண்டாகவும், மற்றொன்று பல துண்டுகளாகவும் உடைந்து கிடக்கின்றன.

முதலிரண்டு புடைப்புச் சிற்பங்களும் இரு கரங்களை க்கொண்டு, வலது கை மேல் நோக்கித் தூக்கி அஞ்சலி செலுத்தும் வகையிலும், இடது கை கதாயுதத்தின் மீது வைக்கப்பட்டும் உள்ளன. இவர்களது வலது கால் நேராகத் தரையில் ஊன்றியும் இடது கால் சிறிது பின்னோக்கி மடக்கப்பட்டும் இருப்பதைக் காணலாம். கூம்பு வடிவமுள்ள தலைப்பாகை, பட்டையான கழுத்தணி, தட்டையான பூணூல், உதரபந்தம் ஆகிய வையாவும் இச்சிற்பங்களில் அலங்கார வேலைப்பாடுகளின்றி மிகவும் எளிமையாக உள்ளன. இந்த இரு சிற்பங்களும் மலர்ந்த முகப்பொலிவையும், நீண்டு மெலிந்த உடலமைப்பையும் பெற்றிருக்கின்றன. இவர்கள் இருவரும் வைத்திருக்கும் கதாயுதம் வழக்கத்திற்கு மாறாக நீண்ட சுரைக் குடுக்கையினைப் போன்ற நடுப்பகுதியையும், கூரிய அடிப்பாகத்தையும், வாளின் கைப்பிடி போன்ற மேற்பாகத்தையும் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. இச்சிற்பங்கள் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைய பல்லவர் கலைப்பாணியை காட்டுபவை. இந்த இரண்டு சிற்பங்களும் சிறிது இடது புறம் சாய்ந்திருப்பதாலும், இடதுகை கதாயுதத்தினைப் பெற்றிருப்பதாலும், கருவறை வாயில்களின் வலதுபக்கத்தில் நிறுவப்பட்டவை என்பது தெரிகிறது.

மூன்றாவது சிற்பமும் மேற் கூறப்பட்ட கலையம்சங்களைக் கொண்டு வலது புறம் சாய்ந்தவாறும், வலது கையில் கதாயுதத்தைப் பெற்றும் திகழ்கிறது. எனவே இது கருவறை வாயிலின் இடது பக்கச் சுவரில் நிறுவப்பட்டதாகும். ஆனால் தற்போது இதன் தலைப் பகுதி எஞ்சியிருக்கவில்லை. மற்றும் இதன் உடற் பகுதியும் ஐந்தாறு துண்டுகளாக உடைந்திருக்கிறது.[3] இந்த சிற்பங்கள் பல்லவர் கால இந்து சமயக் கோயில்களில் நிறுவப்பட்டிருக்கும் துவாரபாலகர் சிற்பங்களிலிருந்து பல விதத்தில் மாறுபட் டிருக்கின்றன. இவற்றில் கோபத்தினைக் குறிக்கும் முகச்சாயல் இருப்பதில்லை. மகுடத்திற்குப் பதிலாக தலைப்பாகை இடம் பெற்றிருக்கிறது. சைவ, வைணவ, சமயத்துத் துவாரபாலகர் சிற்பங்களின் மகுடத்தில் அந்தந்த சமயக் கடவுளரின் ஆயுதங்கள் (சக்கரம், சூலம், பரசு) பொறிக்கப் பட்டிருக்கும். ஆனால் அருமாமலைச் சிற்பங்களில் இவை இடம் பெறவில்லை.

ஓவியங்கள்

குகையின் கூரையிலும், கட்டடக் கோயிலின் சுவர்ப்பகுதியிலும் பொ.யு. 8-ஆம் நூற்றாண்டில் வண்ண ஓவியங்கள் தீட்டப் பெற்றிருக்கின்றன. இவை தாமரை மலர்கள், மொட்டுக்கள் செடி கொடிகள் நிறைந்த பொய்கையினையும், அன்னப்பறவைகள், யானை முதலியன அதில் மகிழ்வுற விளையாடுவதை குறிப்பவை.. சமண இலக்கியங்கள் கூறும் காதிகா பூமியினையே இங்கு சித்திரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. திக்பாலரைக் குறிக்கும் சித்திரங்களும் இங்கு உள்ளன. இந்த ஓவியங்களின் பெரும் பகுதியும் சிதைந்திருக்கிறது (ஏ.ஏகாம்பரநாதன்).

குறிப்பு

  • Montgomery and T. S. Baskaran, “The Armamalai Paintings” Lalitkala, No. 16, pp. 22-28
  • R. Nagaswamy, “Jaina Monuments in Tamilnadu”, Tamil Arasu, Nov. 1974
  • Montgomery & T. S. Baskarand, op. cit, plate. VII figs. 2-4

இணைப்புகள்

உசாத்துணைகள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

  1. தொண்டை மண்டல சமணக்கோயில்கள்- ஏ.ஏகாம்பரநாதன்
  2. Armamalai Cave, CPR Environmental Education Center, Chennai