வில்லியம் பான் ஆடிஸ்

From Tamil Wiki
வில்லியம் பான் ஆடிஸ்

வில்லியம் பான் ஆடிஸ் (William Bawn Addis) (17 செப்டெம்பர் 1800- 18 பிப்ரவரி 1871)கிறிஸ்தவ மதப்பணியாளர். கோவையில் பணியாற்றினார். கோவையின் கல்வி வளர்ச்சிக்கு பங்களிப்பாற்றியவர்.

பிறப்பு, கல்வி

வில்லியம் பான் ஆடிஸ் 17 செப்டெம்பர் 1800ல் இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் (Bristol) மாகாணத்தில் ஹாப்ரோக் (Habrook) என்னும் ஊரில் ஜேம்ஸ் ஆடிஸ்- எலிசபெத் ஆடிஸ் இணையருக்குப் பிறந்தார். பிரிஸ்டலில் கல்வி பயின்றார்..

தனிவாழ்க்கை

வில்லியம் பான் ஆடிஸ் சூசன்னா எமிலியா ஆடிஸ்ஸை 1827 டிசம்பரில் நாகர்கோயிலில் திருமணம் செய்துகொண்டார்.

மதப்பணி

வில்லியம் பான் ஆடிஸ் லண்டன் மிஷன் அமைப்பின் ஊழியராக இந்தியா வந்தார். 5 அக்டோபர் 1927 அன்று கொல்லம் மிஷன் சார்பாக கேரளமாநிலம் கொல்லத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியேற்றார். மதப்பணியில் ஈடுபாடுகொண்டிருந்த ஆடிஸ் நாகர்கோயில் லண்டன் மிஷன் இறையியல் கல்லூரிக்கு அனுப்பப்பட்டார். அங்கே அவருக்கு ஜான் பால்மர் தமிழ் கற்பித்தார். 13 ஆகஸ்ட் 1928 அன்று நாகர்கோயிலில் அவருக்கு சார்ல்ஸ் மீட் குருத்துவப் பட்டம் அளித்தார்.

ஆடிஸ் ஜான் பால்மருடன் 20 அக்டோபர் 1830 அன்று கோவைக்கு வந்து அங்கே லண்டன் மிஷன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1831 ல் ஆடிஸ் கோவையில் இம்மானுவேல் தேவாலயத்தைக் கட்டினார். 1931ல் அருகே ஆங்கிலப்பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது. அதில் ஆடிஸும் அவர் மனைவி எமிலியாவும் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். 1932ல் சூசன்னா எமிலியா ஆடிஸ் அருகே ஒரு பெண்கள் பள்ளியை நிறுவினார்

1850ல் ஆடிஸின் மகன் சார்ல்ஸ் ஜேம்ஸ் ஆடிஸ் மதப்பணிகளுக்கு துணைப்பொறுப்பை ஏற்றார். 1861ல் உடல்நலம் குன்றியிருந்த ஆடிஸ் தன் பொறுப்புகளில் இருந்து விலகிக்கொண்டார்.

மறைவு

வில்லியம் பான் ஆடிஸ் அன்று உடல்நலம் குன்றி மறைந்தார். அவருடைய உடல் கோவை அனைத்துப் பரிசுத்தவான்கள் ஆலயத்து கல்லறைத்தோட்டத்தில் அடக்கம்செய்யப்பட்டது

வரலாற்று இடம்

கோவையில் சீர்திருத்த கிறிஸ்தவத்தை தொடங்கி வைத்தவர் ஆடிஸ். கோவையின் ஆங்கிலக் கல்வி வளர்ச்சிக்குப் பணியாற்றியவர்

உசாத்துணை