க. நெடுஞ்செழியன்

From Tamil Wiki
Revision as of 17:46, 7 June 2023 by Ramya (talk | contribs) (Created page with "க. நெடுஞ்செழியன் (ஜுன் 15, 1944 – நவம்பர் 4, 2022) தமிழ் ஆய்வாளர். == பிறப்பு, கல்வி == க. நெடுஞ்செழியன் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் படுகையில் கந்தசாமி, மீனாட்சி இணையரு...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

க. நெடுஞ்செழியன் (ஜுன் 15, 1944 – நவம்பர் 4, 2022) தமிழ் ஆய்வாளர்.

பிறப்பு, கல்வி

க. நெடுஞ்செழியன் திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் படுகையில் கந்தசாமி, மீனாட்சி இணையருக்கு ஜுன் 15, 1944இல் பிறந்தார். தந்தை திராவிட இயக்கத்துடனும், ஈ.வெ. ராமசாமிப் பெரியாருடனும் தொடர்பில் இருந்தார். உடன்பிறந்தவர்கள் ஒரு தம்பி, மூன்று சகோதரிகள்.

படுகையில் பள்ளிக்கல்வி பயின்றார். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் உயர்கல்வி பயின்றார். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். மெய்க்கீர்த்திகள் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். 1977இல் முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் லோகாயதா நூலைத் துணைச்சான்றாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

க. நெடுஞ்செழியன் சென்னை மாநிலக் கல்லூரியில் தன்னோடு பயின்று தன் இந்தி எதிர்ப்புக் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட ரா. ஜக்குபாயை ஏப்ரல் 11, 1971இல் திருமணம் செய்தார். ஜக்குபாய் தமிழ்ப்பேராசிரியராகவும் தமிழறிஞராகவும் பெண்ணியச் செயற்பாட்டாளராகவும் இருந்தார். மகள்கள் நகைமுத்து, குறிஞ்சி மகன் பண்ணன்.

ஆசிரியப்பணி

க. நெடுஞ்செழியன் 1969இல் திருச்சியிலுள்ள தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி, கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி, முசிறி அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

ஆய்வு வாழ்க்கை

தமிழ், திராவிட இயக்கச் சிந்தனைகளையொட்டி இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும், தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம், தமிழ் எழுத்தியல் வரலாறு, ஆசீவகமும், அய்யனார் வரலாறும் போன்ற ஆய்வு நூல்களை எழுதினார். ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசாலர் தமிழகத்தைச் சேர்ந்தவர் எனவும் ஐயனார், சாத்தன் என்ற பெயர்களில் வணங்கப்படுபவர் அவர்தான் எனவும் சொன்னார். ஆய்வாளர்கள் பலரையும் திருச்சிக்கு வரவழைத்துத் திருப்பட்டூர், சித்தன்னவாசல் போன்ற இடகளுக்கு நேரில் அழைத்துச் சென்று, களப்பயணமாக அவற்றைக் கற்றுத் தந்தார்.

திருப்பட்டூரிலுள்ள அரங்கேற்ற அய்யனார் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குடைவரைக் கோயில் ஆகிய இடங்களில் 2017இல் நடைபெற்ற வரலாற்று ஆய்வியல் அறிஞர்களின் கள ஆய்வுக்குத் தலைமை தாங்கினார்.

அமைப்புப் பணிகள்

  • க. நெடுஞ்செழியன் 2007இல் உலகத் தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் என்ற அமைப்பைத் தொடங்கி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுடன் இணைந்து கருத்தரகுகளையும் நடத்தினார்.

அரசியல் வாழ்க்கை

மு. கருணாநிதி திமுகவினரிடம் திராவிட-பெரியாரியல் கருத்துகளைக் கொண்டுசேர்க்கும் நோக்கில் 'அறிவாலயம்' என்னும் அஞ்சல்வழிப் படிப்பைத் தொடங்கியபோது, அதன் பாடத்திட்ட உருவாக்கக் குழுவில் மா.நன்னன், மு.க.சுப்பிரமணியன் ஆகியோருடன் க. நெடுஞ்செழியன் இருந்தார். 1995இல் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 2003இல் பிரேசர் டவுன் வழக்கில் கர்நாடக அரசால் கைது செய்யப்பட்டார். 2013இல் விடுவிக்கப்பட்டார்.

விருது

  • உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும் எனும் நூல், தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது.
  • 2006இல் தமிழரின் அடையாளங்கள் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களில் மானிடவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு.
  • 2009இல் சித்தண்ணவாயில் கட்டுரைத் தொகுப்புக்கு கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது
  • 2015 அயோத்திதாசர் ஆதவன் விருது
  • 2021 ஆம் ஆண்டுக்கான கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

மறைவு

க. நெடுஞ்செழியன் நவம்பர் 4, 2022இல் காலமானார்.

நூல்கள்

  • இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்
  • தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்
  • உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்
  • தமிழர் இயங்கியல் - தொல்காப்பியமும் சரக சம்கிதையும்
  • சமூக நீதி
  • தமிழர் தருக்கவியல்
  • ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம்
  • தமிழ் எழுத்தியல் வரலாறு
  • தமிழரின் அடையாளங்கள்
  • சங்ககாலத் தமிழர் சமயம்
  • சித்தண்ணவாயில்
  • சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும்
  • மரப்பாச்சி
  • தொல்காப்பியம்-திருக்குறள்: காலமும் கருத்தும்
  • நாகசாமி நூலின் நாசவேலை
  • ஆசிவகமும் ஐயனார் வரலாறும்
  • பேரறிஞர் அண்ணாவும் பெருங்கவிஞர் குமரன் ஆசானும்
  • தமிழர் அகத்திணை மரபுகளும் இந்தியக் காதற் பாடல்களும்
  • தமிழகக் குகைப்பள்ளிகளின் சமயம்
  • கரிகாலன் பதிப்பகம், மங்கலபுரம்
  • பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும்
  • மெய்க்கீர்த்திகள்: அமைப்பும் நோக்கும்
  • இந்தியச் சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை
  • தமிழர் சிந்தனை வரலாறு - தொல்காப்பியம் முதல் பெரியாரியம் வரை
  • தரும சாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்?
  • சமணர் என்போர் சைனரா?: வினாவும் விடையும்
  • ஆசிவகமும் தினமணி அரசியலும்

பதிப்பித்த நூல்கள்

  • இந்திய மெய்யியலில் தமிழகம்
  • கலைஞரின் படைப்பிலக்கியத் திறனாய்வு
  • பேராசிரியர் க.அன்பழகன் பவழமாலை
  • பன்முக நோக்கில் பேரறிஞர் அண்ணா
  • ஆசீவகம் - வேரும் விழுதும்
  • இந்திய சமூகப்புரட்சியில் ஜோதிபா பூலே - அம்பேத்கர்- பெரியார்

உசாத்துணை