உபியான்

From Tamil Wiki
Revision as of 09:47, 30 April 2023 by Aravink22 (talk | contribs) (Created page with "உபியான் இனக்குழு சபா மாநிலத்தில் வாழும் பழங்குடி மக்கள். வட சபாவை ஒட்டி அமைந்திருக்கும் பாங்கி தீவுப்பகுதிகளிலும் , சண்டாக்கான், செம்போர்னா மாவட்டங்களிலும் உபியான் மக்கள் வா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

உபியான் இனக்குழு சபா மாநிலத்தில் வாழும் பழங்குடி மக்கள். வட சபாவை ஒட்டி அமைந்திருக்கும் பாங்கி தீவுப்பகுதிகளிலும் , சண்டாக்கான், செம்போர்னா மாவட்டங்களிலும் உபியான் மக்கள் வாழ்கின்றனர்.

உபியான் மக்கள்

இனப்பரப்பு

19 ஆம் நூற்றாண்டு வாக்கில் பிலிப்பைன்ஸ் நாட்டில் அமைந்திருக்கும் உபியான் தீவுப்பகுதியிலிருந்து சபாவுக்கு உபியான் மக்கள் புலம்பெயர்ந்தனர். 19 ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த பிலிப்பைன்ஸிலிருந்து புலம்பெயர்ந்து பிரிட்டன் ஆளுகைக்குட்பட்ட சபா மாநிலத்துக்குப் புலம்பெயர்ந்தனர்.சபா மாநில அரசு 2015 இல் மேற்கொண்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சபா மாநிலத்தில் 12,878 உபியான் இன மக்கள் வாழ்கின்றனர் என அறியப்பட்டது.  உபியான் மக்கள் மீனவர்களாகவும் தீவுப்பகுதிகளை ஒட்டிய சுற்றுலாத்துறை சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மொழி

அஸ்திரோனேசியன் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த உபியான் எனும் மொழியை உபியான் மக்கள் தாய்மொழியாகக் கொண்டிருக்கின்றனர். சிபுத்து, சிமுனுல், தாண்டுபாஸ், ஒபியான், பலிம்பிங், பங்காவ், சிதாங்காய், லங்குயான், சப்பா சப்பா, சமா சிபுத்து ஆகிய வழக்குகள் உபியான் மொழியில் அமைந்திருக்கின்றன. தென் பிலிப்பைன்ஸ் பகுதிகளில் வாழும் உபியான் மக்களின் உபியான் மொழியைப் புழங்குகின்றனர்.

சமயம்

உபியான் மக்கள் இசுலாமியச் சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.

கலை

கைவினைப்பொருட்கள்

உபியான் மக்கள் அழகிய வடிவமைப்பு கொண்ட படகுகளைச் செய்வதில் தேர்ந்தவர்கள். பெரும்படகுகள், போக்கோ அல்லது குபாங் குபாங் என அறியப்படும் சிறிய படகுகள் ஆகியவற்றை உபியான் மக்கள் செய்கின்றார்கள். அதைத் தவிர்த்து, பித்திக்கான் எனப்படும் கடலில் பயன்படுத்தப்படும் நாட்டுத் துப்பாக்கிகள், கணவாய்களைப் பிடிக்கும் உல்லாங் உல்லாங் எனப்படும் வலைகள் ஆகியவற்றையும் செய்கின்றனர். கிளிஞ்சல்கள், கடற்பஞ்சுகள் ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் கைவினைப் பொருட்களைக் கொண்டு தங்கள் வீடுகளை அலங்கரிக்கின்றனர். அந்த அலங்காரப் பொருட்களைத் திருமணத்துக்கான பரிசுகளாகவும் வழங்குகின்றனர்.

பாரம்பரிய நடனம்

இகால் இகால் நடனம்

உபியான் மக்களின் பாரம்பரிய நடனம் இகால் இகால் எனப்படுகிறது. இந்நடனத்தின் போது குலிந்தாங்கான் எனப்படும் இசைக்கருவியுடன் தாளக்கருவியான கோங்கும் தம்புலும் சேர்ந்து இசைக்கப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளின் போதே இந்நடனம் ஆடப்படுகிறது. இந்நடனத்தின் போது நடனம் ஆடுபவர்கள், விரல்களில் பணத்தைச் செருகியவாறே ஆடுவர்.

சடங்குகள்

இறப்புச் சடங்குகள்
ஆடு பலி சடங்கு

உபியான் மக்கள் இறந்தவர்களுக்கான உலகில் சென்றடைபவர்கள் பலியிடப்படும் விலங்கைக் கொண்டே சவாரி செய்ய முடிகிறது என நம்புகின்றனர். இசுலாமியர்களின் நம்பிக்கைப்படி இறந்தவர்கள் சென்றடையும் மஹ்சார் திடலைச் (MAHYSAR FIELD) செல்வதற்காகவே இறந்தவர்களுக்காக விலங்குகளைப் பலியிடுகின்றனர். பலியிடப்படவிருக்கும் ஆடு இறந்தவரின் வீட்டில் ஒரு வாரத்துக்கு வளர்க்கப்படுகிறது. இறந்தவர் விரும்பி உண்ணும் உணவுகள் ஆட்டுக்கும் அளிக்கப்படுகிறது. பலியிடப்படுவதற்கு முன்னர் ஆட்டினைக் குளிப்பாட்டி அத்தர் போன்ற நறுமணத்தைலங்களைத் தெளித்து அல் குரானின் புனித வாக்கியங்களை வாசிக்கின்றனர். அதன் பின்னர், இறந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், பலியாட்டை இமாமிடம் கையளிக்கின்றார். இறை வாக்கியங்களை வாசித்தப் பின், கொம்பில் மூன்று முடிச்சுகளைக் கட்டி அதற்கு மஞ்சள் நிறம் பூசுகின்றனர். மஞ்சள் நிறம் இறந்தவரின் மாட்சிமையைச் சுட்டுவதற்காகப் பூசப்படுகிறது. அதன் பின், இறந்த நபர் ஆணாக இருப்பின் கைலியையும் பெண்ணாக இருப்பின் முக்காடு துணியையும் ஆட்டுக்கு அணிவிக்கின்றனர். அதன் பின்னர்,, இறைத்துதிகளை ஓதிக் கொண்டே ஆடு பலியிடப்படுகிறது. பலியிடப்படும் ஆட்டினைச் சமைத்து இறந்த நபரின் குடும்பத்தினரும் கிராமத்தினரும் உண்கின்றனர்.

உசாத்துணை

மலேசிய தேசிய கலை, பண்பாட்டுத் துறை பக்கம்

ஆடு பலி சடங்கு

உபியான் மக்களின் பண்பாடு