ஸ்வார்ட்ஸ் ஐயர்
ஸ்வார்ட்ஸ் ஐயர் (Rev.Christian Friedrich Schwarz ) (8 அக்டோபர்r 1726 – 13 பெப்ருவரி 1798) ) (சுவார்ட்சு ஐயர். சுவார்ச்சு ஐயர் ) ஜெர்மானிய லுத்தரன் மிஷன் அமைப்பின் கிறித்தவ மதபோதகர். தரங்கம்பாடி, நெல்லை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களில் மதப்பணி ஆற்றியவர்.
பிறப்பு, கல்வி
ஸ்வார்ட்ஸ் 8 அக்டோபர்r 1726 ல் ஜெர்மனியில் (பழைய பிரஷ்யா) பிராண்டன்பர்க் பகுதியில் சோன்னென்பர்க் (Sonnenburg) என்னும் ஊரில் ஜார்ஜ் ஸ்வார்ட்ஸ்- மார்கரெட் க்ருனிரின்(Margaret Grunerin) இணையருக்கு பிறந்தார்.
இளமையிலேயே தாயை இழந்த ஸ்வார்ட்ஸ் திரு.ஹெல்ம் என்பவரின் தொடக்கப்பள்ளியில் சேர்ந்தார். அங்கே லத்தீன், கிரேக்கம், ஹீப்ரூ மொழிகளைக் கற்றார். அருகே உள்ள கஸ்ட்ரின் (Custrin) எனும் ஊரில் பள்ளிப்பல்வியை முடித்தபின் 1746 ல் ஹாலே பல்கலை (University of Halle) யில் சேர்ந்தார்
மதப்பணி
டேனிஷ் மெட்ராஸ் மிஷன் இயக்கத்தை சேர்ந்த ஷூல்ட்ஸ் (Schultz) ஐ சந்தித்தார். அவர் வழியாக இந்தியாவில் மதப்பணி செய்யும் ஆர்வத்தை அடைந்தார். 8 ஆகஸ்ட் 1749ல் கோப்பன்ஹெகனில் குருத்துவப் பட்டம் பெற்ற ஸ்வார்ட்ஸ் சிலகாலம் இங்கிலாந்து சென்று ஆங்கிலக் கல்வி கற்றபின் 1750 ல் இந்தியாவுக்கு மதப்பணிக்காக பயணமானார்
ஸ்வார்ட்ஸ் 30 ஜூலை 1850 ல் தரங்கம்பாடிக்கு வந்து சேர்தார். லுத்தரன் மிஷன் அமைப்பின் திருச்சி மறைமாவட்டத்தின் தலைமையகமாக அன்று தரங்கம்பாடி இருந்தது. தரங்கம்பாடியில் இருந்து திருச்சி வந்துசென்ற ஸ்வார்ட்ஸ் 1766 ல் திருச்சியில் குடியேறி அங்கே மதபோதகராகப் பணியாற்றினார்
ஸ்வார்ட்ஸ் தஞ்சை, திருச்சி பகுதிகளில் சரபோஜியின் உதவியுடன் கிறிஸ்தவ சபைகளை நிறுவி ஏராளமானவர்களை மதமாற்றம் செய்தார்.
கிளாரிந்தா
தஞ்சையில் ஆங்கிலத் தளபதி லிட்டில்டன் முதிய கணவருடன் உடன்கட்டையேற கட்டாயப்படுத்தப்பட்ட கிளாரிந்தா என்னும் பெண்மணியை காப்பாற்றி மணந்துகொண்டார்.1778 ல் கிளாரிந்தாவுக்கு ஸ்வார்ட்ஸ் திருமுழுக்கு அளித்தார்
வேதநாயகம் சாஸ்திரியார்
ஸ்வார்ட்ஸ் வேதநாயகம் சாஸ்திரியார் இளமையில் கல்விகற்கும் வசதியின்றி இருக்கையில் தத்து எடுத்து தன்பொறுப்பில் கல்வி கற்பித்தார். ஸ்வார்ட்ஸ் துரையை வேதநாயகம் சாஸ்திரி தன் ஞானத்தந்தையாக கருதி போற்றி எழுதியிருக்கிறார்.
கல்விப்பணி
பிஷப் ஹீபர் பள்ளி
1761ல் பிரிட்டிஷ் வெடிமருந்துக்கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் ஏராளமான பிரிட்டிஷ் இந்தியப் படைவீரர்கள் மறைந்தனர். அவர்களின் குழந்தைகள் அனாதையாயினர். அவர்களுக்கு கல்வி கற்பிக்கும்பொருட்டு பிஷப் ஹீபர் பள்ளி 1761 ல் நிறுவப்படது. 1763ல் இன்னொரு வெடிவிபத்து நிகழ்ந்தது. அதில் ஏராளமான பிரிட்டிஷ் படைவீரர்கள் மறைந்தனர். அவர்களுக்காக செயிண்ட் ஜான் தேவாலயத்தில் (St.John's Church) இன்னொரு பள்ளி நிறுவப்பட்டது.இந்தப்பள்ளிகளை நிறுவி நடத்த ஸ்வார்ட்ஸ் முன்முயற்சி எடுத்தார்
சரபோஜியின் நட்பு
1769ல் ஸ்வார்ட்ஸ் தஞ்சை மன்னர் துளஜாஜி யின் நட்பை பெற்றார். துளஜானி மதம் மாறாவிட்டாலும் கிறிஸ்தவ போதகர்களை ஆதரித்தார். துளஜாஜியின் தத்தெடுக்கப்பட்ட மகன் நான்காம் சரபோஜியின் கல்விப்பொறுப்பை ஸ்வார்ட்ஸ் ஏற்ற்றுக்கொண்டார். சரபோஜி ஸ்வார்ட்ஸ் ஐயரை தன் குருவாக நினைத்தார்.
தஞ்சை ஆங்கிலப்பள்ளி
1784 ல் ஸ்வார்ட்ஸ் தஞ்சையில் ஓர் ஆங்கிலப்பள்ளியை நிறுவினார். இன்று அது செயிண்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி என அறியப்படுகிறது.
அரசியல் பணி
1779 ல் ஸ்வார்ட்ஸ் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் தூதராக மைசூர் சுல்தான் ஹைதர் அலியை சந்தித்து அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தினார்.
மறைவு
ஸ்வார்ட்ஸ் 13 பிப்ரவரி 1798ல் மறைந்தார். அவரது சமாதி தஞ்சை செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் உள்ளது. அதில் சரபோஜி மன்னர் அவருக்காக எழுதிய அஞ்சலி பொறிக்கப்பட்டுள்ளது
நினைவிடங்கள்
- ஸ்வார்ட்ஸ் இந்துக்கள் இஸ்லாமியர் ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்ற மதபோதகராக இருந்தார். சரபோஜி மன்னர் அவர் நினைவாக ஒரு தஞ்சை ஸ்வார்ஸ் நினைவு தேவாலயத்தைக் கட்டினார். ஜான் ஃப்ளாக்ஸ்மான் அங்கே ஒரு நினைவுச்சின்னத்தை அமைத்தார். அதில் மன்னரின் கையைப் பற்றியபடி ஸ்வார்ட்ஸ் உயிர்விடும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது..
- பிரிட்டிஷ் மிஷனை சேர்ந்த ஜான் பேக்கன் (John Bacon) சென்னை செயிண்ட் மேரீஸ் தேவாலயத்தில் அவருக்காக ஒரு நினைவிடம் அமைத்தார்
- ஸ்வார்ட்ஸ் நினைவு உயர்நிலைப்பள்ளி ராமநாதபுரம் அவருடைய வேதாகமப்பள்ளி மாணவர்களால் கட்டப்பட்டது
ராஜா சரபோஜியின் அஞ்சலிக்குறிப்பு
To the memory of the Reverend Christian Frederic Swartz. Born at Sonnenburg of Neumark in the Kingdom of Prussia, the 26th of October 1726, and died at Tanjore the 13th of February 1798, in the 72d Year of his age. Devoted from his Early Manhood to the Office of Missionary in the East, the similarity of his situation to that of the first preachers of the gospel, produced in him a peculiar resemblance to the simple sanctity of the apostolic character. His natural vivacity won the affection as his unspotted probity and purity of life alike commanded the reverence of the Christian, Mahomedan and Hindu. For sovereign princes, Hindu, and Mahomeden selected this humble pastor as the medium of political negotiations with the British Government - Maha Raja Serfojee
வரலாற்று இடம்
ஸ்வார்ட்ஸ் தமிழகத்திற்கு வந்த ஏராளமான மதப்பரப்புநர்களில் ஒருவர். திருச்சி பிஷப் ஹீபர் பள்ளி (இன்று கல்லூரி) நிறுவனர்களில் ஒருவர், வேதநாயகம் சாஸ்திரியாரின் ஞானத்தந்தை என்னும் நிலைகளில் நினைவுகூரப்படுகிறார்
உசாத்துணை
தஞ்சாவூர் சுவிசேட கவிராய வேதநாயக சாஸ்திரியாரின் சுருக்கமான சரித்திரம்
