under review

வள்ளிமலை சமணப்பள்ளி

From Tamil Wiki
Revision as of 16:20, 12 February 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)
வள்ளிமலை

வள்ளிமலை சமணப்பள்ளி வட ஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சமணப்பள்ளி. பள்ளி மலை மருவி வள்ளிமலை ஆகியது என்னும் கூற்று உண்டு. இங்கு ஒரு முருகன் ஆலயமும் உள்ளது.

இடம்

வட ஆர்க்காடு மாவட்டத்தில் குடியாத்தம் தாலுகாவிலுள்ள திருவல்லத்திலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் வடக்கிலுள்ளது. மேல்பாடி என்னும் ஊருக்கு அண்மையிலுள்ள மலை வள்ளிமலை என அழைக்கப்படுகிறது. இந்த மலையிலுள்ள இயற்கையான குகை சமணச் சான்றுகளைக் கொண்டு விளங்குகிறது. இதன் உட்புறத்திலுள்ள பாறையில் இரண்டு தொகுதிகளாகச் சமணச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன

சிற்பங்கள்

வள்ளிமலை

முதல் தொகுதி சிற்பங்கள் வலது பக்கமாகவும், அடுத்த தொகுதிச் சிற்பங்கள் இடது பக்கமாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. வலதுபுறத்தில் ஒரே வரிசையாக ஆறு திருவுருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் முதலாவது சிற்பம் மிகவும் சிறியதாகவும், நாலாவது திருவுருவம் பெரியதாகவும் ஏனையவை இதைவிட சிறியவையாகவும் உள்ளன. நான்காவது சிற்பம் தீர்த்தரரையும், பிற திருவுருவங்கள் சமண சமய அறவோரையும் குறிப்பவையாகும். இந்த தீர்த்தங்கரர் தியானத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார். இவரது தலைப்பகுதிக்கு மேல் முக்குடை வடிக்கப்பட்டிருக்கிறது. இச்சிற்பம் முதலாவது தீர்த்தங்கரராகிய ஆதிநாதர் எனக் கருதப்படுகிறது. ஆனால் அவருக்குரிய இலாஞ்சனையோ அல்லது இயக்கர், இயக்கியரது வடிவமோ அருகில் இல்லை. பிற சிற்பங்கள் இந்த தீர்த்தங்கரரைப் போன்ற உருவ அமைப்பினைக் கொண்டிருந்த போதிலும், அவற்றின் தலைக்கு மேலாக முக்குடை வடிவம் காட்டப்படவில்லை, இங்குள்ள சாசனங்களும் இவர்களைச் சமண அறவோர் என்று தான் கூறுகின்றன.

வள்ளிமலை

குகையின் இடதுபக்கத்தில் இரண்டாவது தொகுதிச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. இவையும் இரண்டு இடங்களில் தனித்தொகுதிகளாக உள்ளன. இடது கோடியில் தீர்த்தங் சிற்பங்கள் இரு வரிசைகளாக வீற்றிருப்பதைக் காணலாம். முதல் வரிசையில் இரண்டு பார்ஸ்வ நாதர் சிற்பங்களும், அதனையடுத்து மற்றொரு தீர்த்தங்கரரும் இடம் பெற்றிருக்கின்றனர். பார்ஸ்வ தேவரின் தலைக்கு மேல் ஐந்து தலைப் பாம்பு படம் விரித்த நிலையிலிருக்கிறது. இரண்டாவது வரிசையில் பார்ஸ்வநாதர் பீடமொன்றில் அமர்ந்தவாறுள்ளார். இவரது தலைக்கு மேல் ஐந்து தலை நாகமும், அதற்கு மேல் முக்குடையும் காணப்படுகிறது, இவரது பீடத்தின் வலப்புறம் மாதங்க யக்ஷன் யானை மீதமர்ந்தவாறும், இடப்புறம் யக்ஷயின் சிற்பமும் சிறியனவாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. (தரணேந்திரனுக்குப் பதிலாக இங்கு மாதங்க யஷன் சிற்பம் காணப்படுகிறது.)

வள்ளிமலை

இதற்கு அடுத்து ஸ்ருததேவியின் திருவுருவம் சற்று பெரிய அளவில் அரை வட்ட வடிவ மாடத்தினுள் அமைக்கப்பட்டிருக்கிறது. இத்தேவி பீடமொன்றில் அமர்ந்தவாறு வலது காலைத் தொங்கவிட்டும், இடது காலைப் பீடத்தில் மடக்கி வைத்தும் காணப்படுகிறாள். இவளது நான்கு கரங்களுள் மேலுள்ள வலது கை அங்குசத்தையும், இடதுகை பாசக் கயிற்றினையும் கொண்டுள்ளன. கீழுள்ள வலதுகை அபய முத்திரையைக் குறித்தும், இடது கை தொடையின் மீது வைத்தவாறும் இருக்க தடித்த உடலமைப்பும், பருத்துத் திரண்ட மார்பகமும், ஒடுங்கிய இடையும் இச்சிற்பத்திற்கு அணி செய்வனவாகும், மேலைக்கங்கர்களது கலைப்பாணியினைக் கொண்ட திருவுருவம் பொயு. 9-10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது..

ஸ்ருத தேவிக்குச் சற்று தொலைவில் அமர்ந்த கோலத்தில் இரு தீர்த்தங்கரர்களது சிற்பங்கள் சற்று பெரியவையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களது பீடத்தில் சிங்க வடிவங்களும், இருக்கையின் மேற்பகுதியில் நான்கு சாமரம் வீசுவோர் சிற்றுருவங்களும் தீட்டப்பட்டுள்ளன. தீர்த்தங்கரர்களது தலைக்கு மேலாக அரைவட்ட வடிவ பிரபையோ, முக்குடையோ இடம் பெறவில்லை. இவ்விருவருள் முதலாவது தீர்த்தங்கரரின் வலது புறம் மாதங்க யக்ஷன் யானையின் தலைப்பகுதியில் வீற்றிருப்பதைக் காணலாம். இரண்டாவது தீர்த்தங்கரரின் இடதுபுறம் யக்ஷி சிற்பம் ஒன்றுள்ளது. அமர்ந்த வண்ணமுள்ள இந்த யக்ஷியின் வலது கை அபய முத்திரையைக் (அல்லது சிம்ம கர்ண முத்திரை) குறித்தும் இடது கை பழம் ஒன்றினைக் கொண்டும் விளங்குகின்றன. இவளது காலின் அருகில் தனித்தனியாக இரு குழந்தைகளும், அதற்குக் கீழ் சிங்கவாகனமும் இருப்பதைக் காணலாம். இவளது தலையை அலங்கரிக்கும் கரண்ட மகுடத்தின் மேல் சிறிய அளவில் தீர்த்தங்கரர் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த யக்ஷி அம்பிகா, ஆம்ர கூஷ்மாண்டினி என அழைக்கப் பெறும் தருமதேவியாவாள். இந்த சிற்பத் தொகுதியில் முதலாவது உள்ள தீர்த்தங்கரர் மகா வீரரைக் குறிப்பதால் அவரது வலது புறம் மாதங்க யக்ஷனையும், அடுத்துள்ள தீர்த்தங்கரர் நேமிநாதராகையால் அவரது இடது புறம் அம்பிகா யக்ஷியையும் செதுக்கியுள்ளனர். இந்த சிற்பங்களும் கங்கர்களது கலைப்பாணியைக் கொண்டவையாக இருப்பதால் பொயு. 9-10 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை . இங்கு தீர்த்தங்கரர்களுக்கு மட்டுமின்றி சமண சமய ஆன்றோர்களுக்கும் சிற்பம் தோற்றுவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ருததேவி சிற்பம் போன்ற காலத்தால் முந்திய திருவுருவம் வேறெங்குமில்லை.

வள்ளிமலை

பொயு. 9-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது 10- ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கர்நாடக மாநிலத்திலுள்ள சிரவண பெலகோலாவைச் சார்ந்த சமணத் துறவியர் சிலர் தமிழகத்திற்கு வந்து சென்றுள்ளனர். இவர்களுள் ஆரியநந்தி என்பவர் குறிப்பிடத் தக்கவர். இதனை வள்ளிமலை, மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கீழக்குயில்குடி ஆகிய இடங்களிலுள்ள கன்னடக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.

கீழக்குயில் குடியிலுள்ள (சமணர் மலை) கன்னடக் கல்வெட்டு பெல்கோலாவிலுள்ள மூலச்சங்கத்தைச் சார்ந்த ஆரிய தேவர் (ஆரிய நந்தி), பாலச்சந்திர தேவர் ஆகியோரது பெயர்களையும் நேமி தேவர், அஜிதசேன தேவர், கோவர்த்தன தேவர் ஆகிய துறவியரது பெயர்களையும் குறிப்பிடுகிறது.(கீழக்குயில்குடியிலுள்ள இந்த கன்னட சாசனம் கி. பி 12-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என கல்வெட்டுத்துறையினர் கருதுகின்றனர். இது சரியாகக் தோன்றவில்லை. மிக்கவாறும் 10-ஆம் நூற்றாண்டு என இருப்பதே பொருத்தமானது). ஆரிய நந்தி, பாலசந்திர தேவர் மட்டுமின்றி எஞ்சியுள்ள கோவர்த்தனர். அஜிதசேன தேவர். நேமிதேவர் ஆகியோரும் சிரவண பெலகோலாவைச் சார்ந்த துறவியராக இருக்கலாம். இவர்களுள் கோவர்த்தனருக்கு வள்ளி மலையில் சிற்பமும் சமைக்கப்பட்டிருக்கிறது.

வள்ளிமலை

வள்ளிமலையில் முதலாவது தொகுதியில் வரிசையாகக் காணப்படும் சிற்பங்களுள் நாலாவது தீர்த்தங்கரர் வடிவமாகும். இங்குள்ள கல்வெட்டின்படி இரண்டாவது உள்ளது தேவசேனரையும், ஆறாவது உள்ளது கோவர்த்தனரையும் குறிக்கும். ஒன்றாவது, மூன்றாவது, ஐந்தாவது திருவுருவங்கள் எந்த முனிவரைக்குறிப்பவை எனக் கல்வெட்டுக்கள் கூறவில்லை. ஆனால் கீழக்குயில் குடியிலுள்ள சாசனம் கூறும் பெயர்களை அடிப்படையாகக்கொண்டு வள்ளிமலையிலுள்ள முதல் சிற்பம் ஆரிய நந்தியையும், இரண்டாவது தேவசேனரையும், (அஜிதசேன தேவர் என்னும் பெயரை வள்ளிமலையில் தேவசேனர் என்று பொறித்திருக்கலாம்), மூன்றாவது பாலச்சந்திரரையும், (நான்காவது தீர்த்தங்கரர்), ஐந்தாவது நேமிதேவரையும் குறிப்பவையாகத்தானிருக்க வேண்டுமென்று கூறலாம். இந்த ஐந்து அறவோர் சிற்பங்களுக்கேற்ப ஐந்து பெயர்கள் கீழக்குயில்குடி சாசனத்திலும், வள்ளிமலைக் கல்வெட்டில் மூன்று பெயர்களும் இடம்பெற்றிருப்பது இக்கருத்தை மெய்ப்பிக்கிறது.

இந்தஐந்து துறவியரும் சிரவணபெலகோலாவில் முக்கியப்பொறுப்பில் இருந்தவர்களாக (தலைமைத்துறவியராக) இருக்கலாம். இவர்களுள் கடைசியில் வாழ்ந்தவர் பாலச்சந்திர தேவரின் சீடராகிய ஆரிய நந்தியாவார். இவர் கங்கமன்னனாகிய இராஜமல்லன் காலத்தில் வாழ்ந்தவராதலால் வள்ளிமலைக்கு வந்தபோது தமக்கு முன்பு வாழ்ந்த துறவியரின் சிற்பங்களை இங்கு வடிக்க வழிவகை செய்துள்ளார். இவர் இச்சிற்பங்கள் அமைக்கப்பட்டபோது உயிர் வாழ்ந்தவராதலாலும், மேற்கூறிய துறவியருக்குப் பின்னர் வந்தவராதலாலும் இவரது சிற்பம் மட்டிலும் சிறியதாக வடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த வரிசையில் இவரது திருவுருவம் (வலமிருந்து இடப்புறமாகப் பார்த்தால்) கடைசியில் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டுகள்

வரிசையாக உள்ள சமணத் திருவுருவங்களுள் ஆறாவது சிற்பத்திற்குக் கீழாகவுள்ள இடத்தில் மேலைக்கங்க மன்னனான இரண்டாம் இராஜமல்லனது (பொயு. 873-907) சாசனம் பொறிக்கப்பட்டிருக்கிறது. கன்னட மொழியில் எழுதப்பெற்ற இக்கல்வெட்டு இந்த குகைக் கோயிலை (பஸ்தி) சிவமாரனின் கொள்ளுப்பேரனும், இரணவிக்கிரமனின் மைந்தனுமாகிய இராஜமல்லன் அமைத்தான் எனக் கூறுகிறது.

கர்நாடக மாநிலத்தின் தென்பகுதியாகிய கங்கவாடியை ஆண்ட சிற்றசரர்களான மேலைக்கங்கர் வழியில் தோன்றிய அரசர்களுள் இரண்டாம் இராஜமல்லனது ஆட்சியின் கீழ் தமிழகத்தின் வட பகுதியும் உட்பட்டிருந்ததை வள்ளிமலை, சீயமங்கலம் முதலிய இடங்களிலுள்ள கல்வெட்டுக்கள் காட்டுகின்றன. வள்ளி மலையிலுள்ள சாசனம் நான்கு தலைமுறை மன்னர்களாகிய சிவமாரன், ஸ்ரீபுருஷன், இரணவிக்கிரமன், இராஜமல்லன் ஆகியோரைக் குறிப்பிடுவது சிறப்பிற்குரியதாகும்.

ஆறாவது சிற்பத்தின் ஆசனத்தை ஒட்டி மற்றொரு கன்னடக் கல்வெட்டும் உள்ளது. இது பாலச்சந்திர தேவரின் சீடராகிய ஆரிய நந்தி என்பவர் இந்த கோவர்த்தனரது சிற்பத்தைச் செதுக்க ஏற்பாடு செய்தார் என கூறுகிறது. எனவே இந்த சிற்பம் கோவர்த்தனர் என்னும் சமணப் பெருந்தகையோரைக் குறிக்கிறது.

இரண்டாவது திருவுருவத்தின் கீழ்ப்பகுதியில் இரு கன்னடக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று மூலம் இந்த சிற்பத்தையும் ஆரியநந்தியே செதுக்க ஏற்பாடு செய்துள்ளார் என அறிய வருகிறோம். அடுத்த சாசனம், இந்த சிற்பம் பாணராயனின் குருவாகிய பவணந்திபட்டாரரின் சீடராகிய தேவ சேனரைக் குறிக்கும் எனக் கூறுகிறது. எனவே இரண்டாவதாக உள்ள சிற்பம் தேவசேனர் என்ற துறவியரின் திருவுருவம் எனவும், இவர் பவணந்தி என்பவரது சீடர் எனவும், பாணராயன் என்ற சிற்றரசனுக்குச் சமயக் குருவாகவும் திகழ்ந்தவர் எனவும்சொல்லலாம். இந்தச் சிற்ப வரிசையிலுள்ள மூன்றாவது ஐந்தாவது திருவுருவங்களும் சமண அறவோரைக் குறிப்பவையாக இருந்த போதிலும், அவர்களது பெயர் அல்லது அவற்றைச் செய்விக்கத் துணை நின்றவர்கள் பெயர்களோ இங்கு பொறிக்கப்படவில்லை. (ஏ.ஏகாம்பரநாதன்)

உசாத்துணை



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.