சுதா

From Tamil Wiki
சுதா
சுதா
சுதா

சுதா : (7 செப்டெம்பர் 1983) சமூகச் செயல்பாட்டாளர். திருநங்கையருக்கான 'தோழி' என்னும் அமைப்பின் நிறுவனர், இயக்குநர்.

பிறப்பு, கல்வி

சுதா 7 செப்டெம்பர் 1983 ல் ஆந்திராவில் நெல்லூர் மாவட்டத்தில் அரிசிவணிகரான சுப்பா ரெட்டிக்கும் துராசனா அம்மாவுக்கும் இரண்டாவது மகனாக பிறந்தார். சுதாகர் என்பது பழைய பெயர்.

நெல்லூரில் தொடக்கக் கல்வியையும், நெல்லூர் ஜூனியர் கல்லூரியில் புகுமுக வகுப்பையும் முடித்தார். சென்னை சவீதா பல்கலைக் கழகத்தில் பல்மருத்துவப் படிப்பை தொடங்கினா, படிப்பை முடிக்கவில்லை

தனிவாழ்க்கை

இளமையிலேயே தன்னை பெண் என உணர்ந்த சுதாகர் சென்னையில் பல்மருத்துவருக்குப் படிக்கையில் தன் 19 வயதில் தன்னை திருநங்கை என உணர்ந்து அவ்வாழ்க்கையை தெரிவுசெய்து சுதா என பெயர் மாற்றம் செய்துகொண்டார்

குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்ட சுதா சென்னையில் வேலைதேடி கிடைக்காமல் குறுகியகாலம் சென்னையில் திருநங்கையருக்குரிய புறச்சமூக வாழ்க்கையை மேற்கொண்டார். சுனில் மேனன் என்பவரால் நிறுவப்பட்டு பால்புதுமையினரின் நலனுக்காக சென்னையில் செயல்பட்டு வந்த சகோதரன் என்னும் அமைப்புடன் தொடர்புகொண்டு அதில் பணியாற்றினார்.

சுதாவின் குடும்பத்தில் அவருடைய 13 வயது மூத்த சகோதரரும் இதழாளருமான ஹஸ்ரத் அவருக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கு குடும்பத்தில் ஏற்பு உருவாக வழிவகுத்தார். ஹஸ்ரத் உதவியுடன் சுதா திருநங்கையருக்கான தோழி என்னும் அமைப்பை உருவாக்கினார்.

சுதா தோழி அமைப்பின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார்.அவர்கள் இன்று மின்னியல் போன்ற துறைகளில் பணியாற்றி நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

பணிகள்

சுதா 1990களில் சுனில் மேனன் என்பவர் நடத்திவந்த சகோதரன் என்னும் அமைப்புடன் இணைந்து பால்புதுமையினர் மற்றும் திருநங்கையரிடம் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக உழைத்தார்.

2007 ல் சுனில் மேனன் உதவியுடன் தோழி என்னும் அமைபை உருவாக்கினார். அதில் மேலும் ஐந்து உறுப்பினர்கள் இருந்தனர். அரசுசாரா தொண்டுநிறுவனமான இது 2012ல் தான் சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றது. அதுவரை சொந்தச்செலவில் இந்த அமைப்பை நடத்திவந்தார்.

சுதா திருநங்கையரின் கல்வி, மறுவாழ்வுக்கான பணிகளை தோழி அமைப்பு சார்பில் நடத்தி வருகிறார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அதன்பொருட்டு பயணம் செய்துள்ளார். சென்னையில் சிம்ஸ் (SIMS ) மருத்துவமனையுடன் இணைந்து எய்ட்ஸ் ஒழிப்புப் பிரச்சாரத்தில் தோழி ஈடுபடுகிறது. ஆதரவற்ற திருநங்கையருக்கான புகலிடத்தை அமைத்துள்ளது.

விருதுகள்

  • பிரிட்டிஷ் ஒலிபரப்பு நிறுவனம் ( BBC) சுதாவின் வாழ்க்கையை பேட்டிகண்டு பதிவுசெய்துள்ளது.
  • சர்வதேச தமிழ் பல்கலை ( International Tamil University, USA) சுதாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது
  • சுதாவுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான மருத்துவர் ஜீவா அறக்கட்டளை (ஈரோடு) வழங்கும் மருத்துவர் ஜீவா பசுமைவிருதுகள் வழங்கப்பட்டன.

உசாத்துணை