under review

தமிழின் மறுமலர்ச்சி

From Tamil Wiki
Revision as of 08:49, 10 February 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)
தமிழின் மறுமலர்ச்சி-1989

தமிழின் மறுமலர்ச்சி (1947-53) பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை எழுதிய கட்டுரைகளின் தொகுதி. ஆய்வுக்கட்டுரைகளும் விளக்கக்குறிப்புகளும் கொண்ட இக்கட்டுரைத் தொகுதி தமிழில் முக்கியமான இலக்கிய நூல்களில் ஒன்று

எழுத்து, பிரசுரம்

தமிழில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைப் பற்றிய தன் கருத்துக்களை பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை 1947 ல் கட்டுரைகளாக தொகுத்து ‘தமிழின் மறுமலர்ச்சி’ என்ற பெயரில் வெளியிட்டார். 1953 ஆம் ஆண்டு முதற்பதிப்பில் உள்ள மூன்று கட்டுரைகளை நீக்கி நான்கு புதுக்கட்டுரைகளைச் சேர்த்து வெளியிட்டார். எஸ்.வையாபுரிப் பிள்ளையின் மறைவுக்குப்பின் தமிழின் மறுமலர்ச்சி என்ற பெயரில் பாரி நிலையத்தால் 1960 இந்நூல் மீண்டும் வெளியிடப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப்பின் எஸ்.வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றத்தால் 17-2-1089 ல் இந்நூல் விரிவான ஆய்வுக்குறிப்புடன் மறுபதிப்பாகியது.

உள்ளடக்கம்

  • இந்நூல் ஐந்து பகுதிகள் கொண்டது இந்நூல்.
  • தமிழின் மறுமலர்ச்சி (17 கட்டுரைகள்)
  • சொற்கலை விருந்து (16 கட்டுரைகள்)
  • சொற்களின் சரிதம் (10 கட்டுரைகள்)
  • நிகண்டுக்கள் (5 கட்டுரைகள்)
  • அகராதி (5 கட்டுரைகள்)

தமிழின் மறுமலர்ச்சி என்னும் பகுதியில் எஸ்.வையாபுரிப்பிள்ளை பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து தமிழில் உருவான மாற்றங்களை ஆராய்கிறார். தமிழில் உரைநடை உருவானது, உரைநடைக்குரிய இலக்கணம் உருவானது, தமிழின் எதிர்காலம் ஆகியவை பற்றிய தன் மதிப்பீடுகளைச் சொல்கிறார். “உலகம் முழுவதையும் அப்போதைக்கப்போது தாக்கி வரும் நூதன சக்திகளுக்கு தானும் இடம் கொடுத்து தன் ஆற்றலையும் வேகத்தையும் பலதிறப்படுத்தி மேன்மையுற்று வளரும். புதுக்கருத்துக்கள் புது உணர்ச்சி முதலியவற்றால் புதுச்சொற்களும் புதுத்தொடர்களும் புதிய வாக்கிய அமைதிகளும் பெற்று தன் அடிப்படையான இயல்பு கெடாதபடி வளம்பெருகி நிற்கும். விஞ்ஞான சாஸ்திரப் பயிற்சியால் கருத்துத்தெளிவும் கருத்துவரையறையும் ஏற்பட்டு சொற்களுக்குப் பொருள் வரையறையும் உரைநடைக்கு திட்பமும் ஆற்றலும் உண்டாகும்” என்கிறார் (தமிழும் எதிர்காலமும்)

இந்தப்பார்வையுடன் முழுநூலிலும் தமிழின் மாற்றங்களை வையாபுரிப்பிள்ளை ஆராய்கிறார். புதிய சொற்களை உருவாக்கிக்கொள்ளும் மொழியின் அற்புதமான இயல்பு, பேச்சுத்தமிழில் இருந்து மொழி தன் ஆற்றலை எடுத்துக்கொள்ளும் விதம், மொழியை ஒருங்கிணைப்பதை அறிஞர்கள் செய்யவேண்டிய முறை ஆகியவற்றை ஆராய்ந்து சென்று ஒவ்வொரு சொல்லும் எப்படியெல்லாம் பண்பாட்டுக் குறிப்புகளை ஏற்றிநிற்கிறது என விளக்குகிறார். அவற்றின் அடிப்படையில் மரபான நிகண்டுக்களின் அமைப்பையும் உருவாகவேண்டிய அகராதிகளின் நெறிமுறைகளையும் வரையறை செய்கிறார்.

இலக்கிய மதிப்பு

எஸ்.வையாபுரிப்பிள்ளையின் இந்நூல் தமிழ் பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டில் அடைந்த மாற்றங்களை நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டு ஆராய்கிறது. நெகிழும்தன்மை, பேச்சுமொழிக்கு அண்மையுடன் இருத்தல், நீண்ட தொல்வரலாறு ஆகியவை தமிழின் தனிச்சிறப்புகள் என்று வரையறை செய்யும் வையாபுரிப்பிள்ளை உலகம் செல்லும் மாற்றங்களை ஒட்டி அறிவியல்நோக்குடன் முன்னகரவேண்டும் என விரும்புகிறார். வையாபுரிப்பிள்ளையின் மொழிநடை அணிகளோ செயற்கையான உணர்ச்சிகளோ அற்றது. செறிவான செய்திகளால் ஆனது. வெறும்பற்றுகளுக்கு அப்பாற்பட்டு நின்று மொழிவளர்ச்சியை பண்பாட்டு வளர்ச்சியுடன் மானுட வளர்ச்சியுடன் இணைத்துப் பார்க்கும் நூல் இது

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.