under review

அண்ணாமலை வெண்பா

From Tamil Wiki
Revision as of 20:46, 12 December 2022 by Logamadevi (talk | contribs)
அண்ணாமலை வெண்பா
குரு நமசிவாயர்

அண்ணாமலை வெண்பா (பொ.யு. பதினாறாம் நூற்றாண்டு) , குரு நமசிவாயரால் (குரு நமச்சிவாயர்) பாடப்பட்ட நூல். திருவண்ணாமலையின் பெருமைகளை, சிறப்புக்களை வெண்பா வடிவில் கூறும் நூல். மிக எளிய நடையில் அனைவரும் பொருள் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது

நூல் வரலாறு

குரு நமசிவாயர், திருவண்ணாமலையில் வாழ்ந்த குகை நமசிவாயரின் சீடர். குருநாதராலேயே ‘குரு நமசிவாயர்’ என்று போற்றப்பட்டவர். குருவின் வாக்கை ஏற்று சிதம்பரத்திற்குச் சென்று வாழ்ந்தார். பல்வேறு ஆலய, ஆன்மிக நற்பணிகளை மேற்கொண்டு அங்கேயே நிறைவெய்தினார்.

குரு நமசிவாயர் இயற்றிய பல நூல்களில் ‘அண்ணாமலை வெண்பா’ குறிப்பிடத்தக்கது. இந்நூலில் திருவண்ணாமலையின் பெருமையை, சிறப்புக்களை 102 பாடல்கள் மூலம் விளக்கியுள்ளார். அண்ணாமலை வெண்பாவின் காலம் பொ.யு. பதினாறாம் நூற்றாண்டு.

பாடல் நடை

அயனும் மாலும் அடி முடி தேடிய வரலாற்றை, குரு நமசிவாயர்,

ஆதிநடம் ஆடுமலை அன்றுஇருவர் தேடுமலை
சோதிமதி ஆடுஅரவம் சூடுமலை - நீதி
தழைக்குமலை ஞானத் தபோதனரை வா என்று
அழைக்குமலை அண்ணா மலை

- என்ற பாடலில் சுட்டுவதுடன், ஞானமும், தவமும் உள்ளவர்களைத் தன் பால் ஈர்க்கும் மலை என்றும் கூறியுள்ளார்.

மலையின் பெருமையை,

சீல முனிவோர்கள் செறியு மலை
சிந்திப்பார் முன் நின்று முக்தி வழங்கு மலை - ஞான நெறி
காட்டுமலை ஞான முனிவோர்கள் நித்தம்
நாடுமலை அண்ணாமலை

என்று குறிப்பிட்டுள்ளார்

மலையின் பழமையை,

ஆதிமலை ஆதி அநாதிமலை அம்மைஒரு
பாதிமலை ஓதிமறை பாடுமலை – நீதிமலை
தந்த்ரமலை யந்த்ரமலை சாற்றியபஞ் சாக்கரமாம்
மந்த்ரமலை அண்ணாமலை

என்ற பாடல் மூலம் காட்டுகிறார்.

அண்ணாமலையை வழிபடுவதால் துன்பம் நீங்கும் என்பதை,

துன்பம் அகற்றும் மலை தொல்வினையை நீக்கும் மலை
அன்பர் தமை வா என்று அழைக்கும் மலை

என்றும்

நாளும் தொழுவோர் எழுபிறப்பை
மாற்றும் மலை அண்ணாமலை

என்றும் பாடியுள்ளார்.

பென்னம் பெரியமலை
மாலும் பிரமனும் தேடற்கு அரியமலை

என்றும்

நெஞ்சைத் திருத்துமலை மெய்ஞ்ஞான
சித்திதரும் தெய்வ மருத்துமலை...

அண்ணாமலையை சிறப்பிக்கிறார்.

தொண்டர் இணங்கு மலை
வானோரும் ஏனோரும் போற்றி வணங்கு மலை
தன் அடியார் செய்த குறை எல்லாம் மறக்கு மலை
நாளும் குறைவிலாச் செல்வம் அளிக்கு மலை...

- என்று மலையின்மேல் அங்கு குடிகொண்ட தெய்வத்தின் பெருமைகளை ஏற்றிப் பாடுகிறார்.

குருநாதரின் சிறப்புகள்

அண்ணாமலையாரே தனது குருவாக வந்து தன்னை ஆட்கொண்டார் என்பதை, ‘நாயேனை ஆளக் குருவாகி வந்தமலை அண்ணாமலை என்றும், அந்த குருநாதரின் அருளால் தான் பாடல் பாடுவதை, ’நமச்சி வாயகுரு நாள்தோறும் மெய்த்தமிழி னால்புகழ்ந்து மேவுமலை’ என்றும் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page