first review completed

அழகிய பெரியவன்

From Tamil Wiki
அழகிய பெரியவன்

அழகிய பெரியவன் (மார்ச் 3, 1968) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். மேடைப் பேச்சாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

அழகிய பெரியவன் (நன்றி: தி இந்து)

அழகிய பெரியவன் மார்ச் 3, 1968 அன்று சின்னதுரை, கிரேஸ் கமலம் இணையருக்குப் பிறந்தார். இயற்பெயர் அரவிந்தன். பேரணாம்பட்டுக்கு அருகில் உள்ள சாத்கர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். ஆம்பூர் தேவலாபுரம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரையிலும் பயின்றார். ஆம்பூர் கன்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். வேலூர் ஊரீஸ் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் பட்டமும் பெற்றார்.

தனி வாழ்க்கை

வேலூர், பேரணாம்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த சாரங்கல் கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். தமிழக அரசின் காவலர் பயிற்சியில் பாலின நிகர்நிலை கருத்தாளராக ஓர் ஆண்டுகாலமும், தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நிதிச்செலவு புரிந்துணர் குழுவின் கருத்தாளராக ஓர் ஆண்டும், மத்திய அரசின் தொலைபேசித் துறையில் வேலூர் மாவட்ட ஆலோசனைக்குழு உறுப்பினராக ஓராண்டும் பணிபுரிந்திருக்கிறார். மனைவி தெபோராள். குழந்தைகள் யாழினி, ஓவியன்.

இலக்கிய வாழ்க்கை

அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டாள்

கல்லூரி காலத்தில் ’நிழல்’ என்ற பெயரில் கையெழுத்து இதழ் நடத்தினார். அக்டோபர் 1998-ல் தாமரை இதழில் முதல் சிறுகதை ’கூடடையும் பறவைகள்’வெளியானது. 2000-ல் ’தீட்டு’ முதல் சிறுகதைத் தொகுப்பு தமிழினி பதிப்பக வெளியீடாக வெளியானது. 2002-ல் முதல் நாவல் ’தகப்பன் கொடி’ வெளியானது. 14 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது நாவல் ’வல்லிசை’ வெளியானது. இவரது குறுநாவல்கள் தொகுக்கப்பட்டு ’திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்’ என்ற தலைப்பில் வெளியானது.

பதினைந்துக்கும் மேற்பட்டோர் அழகிய பெரியவனின் படைப்புகளை ஆய்வு செய்து எம்.பில் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள பல பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் இவரது கதைகளும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. தலித்முரசு, காக்கைச் சிறகினிலே மாத இதழ்களின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராகவும், நம்நற்றிணை காலாண்டு இலக்கிய இதழின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அழகிய பெரியவன் இதழியல் பணிகளிலும் உள்ளார். 'மீள்கோணம்’ தலித் முரசு இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.

அழகிய பெரியவனின் கதைகளும் கவிதைகளும் ஆங்கிலம், செக், இந்தி, உருது, வங்காளம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. மலையாள மொழியில் அழகிய பெரியவனின் இரண்டு நூல்கள் வெளியாகியுள்ளன.

குறடு

திரைப்படம்

2009-ல் பொன் சுதாவின் இயக்கத்தில் அழகிய பெரியவனின் 'குறடு' என்ற சிறுகதை 'நடந்த கதை' என்ற பெயரில் குறும்படமாக எடுக்கப்பட்டது. 2015-ல் அரிகரரசுதன் இயக்கத்தில் வெளியிடப்பட்ட 'கண்காணிக்கும் மரணம்' என்ற குறும்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். 2017-ல் அம்சன் குமார் இயக்கிய 'மனுசங்கடா' திரைப்படத்தின் திரைக்கதைக்கு அழகிய பெரியவன் பங்களித்துள்ளார்.

விருதுகள்

தகப்பன் கொடி
  • 2003: 'தகப்பன் கொடி’ நாவலுக்காக தமிழக அரசின் விருது
  • 2010:'உனக்கும் எனக்குமான சொல்' கவிதை நூலுக்காக தமிழக அரசின் விருது
  • 1995: தினமணி ஆக்சஸ் கவிதைப் பரிசு
  • 1997இல் ’தீட்டு’ குறுநாவல் கணையாழி குறுநாவல் பரிசு பெற்றது.
  • 1999: கணையாழி சம்பா நரேந்தர் குறுநாவல் பரிசு
  • 2001: திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
  • 2002: கலை இலக்கியப் பெருமன்ற பரிசு, தலித்முரசு கலை இலக்கிய விருது
  • 2003: கலை இதழ் பரிசு, பொ.மா. சுப்பிரமணியம் அறக்கட்டளை விருது
  • 2005: இந்தியா டுடேவின் எதிர்கால நாயகர் விருது
  • 2005: தினமணி-நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதை பரிசு
  • 2010: சிற்பி இலக்கியப் பரிசு
  • 2010: த.மு.எ.ச வின் சிறந்த குறும்பட கதையாசிரியர் பரிசு
  • 2011: சு.சமுத்திரம் நினைவு சிறுகதை விருது
  • 2012: சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள் சிறுகதைக்கு ஜெயகாந்தன் படைப்பிலக்கிய விருது
  • 2013: பெரியார் விருது, தமிழ் விருது.
  • 2018: கு. அழகிரிசாமி சிறுகதை விருது
  • திருவள்ளுவர் பல்கலைக்கழகம் வழங்கிய The Vibrant Voice of the Subalterns என்ற பட்டம்.
  • 2020: இந்தியக் குடியரசுக் கட்சியின் தந்தை என். சிவராஜ் விருது

நூல்கள் பட்டியல்

அழகிய பெரியவன் கதைகள்
சிறுகதை
  • தீட்டு
  • அழகிய பெரியவன் கதைகள்
  • நெரிக்கட்டு
  • கிளியம்மாவின் இளஞ்சிவப்புக்காலை
  • சிவபாலனின் இடப்பெயர்ச்சிக் குறிப்புகள்
  • குறடு
  • திசையெங்கும் சுவர்கள் கொண்ட கிராமம்
  • அழகிய பெரியவன் சிறுகதைகள்
  • அம்மா உழைப்பதை நிறுத்திக்கொண்டார்
  • அன்றாடம்
கவிதை
  • நீ நிகழ்ந்தபோது
  • அரூப நஞ்சு
  • ஞாபக விலங்கு
  • உனக்கும் எனக்குமான சொல்
நாவல்
  • தகப்பன் கொடி
  • வல்லிசை
  • யாம் சில அரிசி வேண்டினோம்
  • சின்னக்குடை
  • கட்டுரை
  • வெட்கம் கெட்ட நாடு
  • மூடிய முகங்களில்
  • கம்பளிப்பூச்சி இரவு
  • பெருகும் வேட்கை
  • மீள்கோணம்
  • தேநீர் மேசை
  • வகுப்பறையில் சாதி
  • மறைத்துப்பேச என்ன இருக்கு

இணைப்புகள்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.