under review

பிஞ்சுகள்

From Tamil Wiki
பிஞ்சுகள்

பிஞ்சுகள் ( 1979) கி.ராஜநாராயணன் எழுதிய சிறார் நாவல். இதை தமிழில் எழுதப்பட்ட சிறார் இயற்கை இலக்கியம் என்று வகைப்படுத்துகிறார்கள்

எழுத்து,வெளியீடு

கி. ராஜநாராயணன் இந்நாவலை 1978 ல் எழுதினார். கையெழுத்துப் பிரதியாகவே இந்நாவலை இலக்கிய சிந்தனை சிறார் நாவல் போட்டிக்கு அனுப்பி பரிசு பெற்றார். அதன் பின்னரே அன்னம் அகரம் வெளியீடாக 1979l இந்நூல் அச்சேறியது.

கதைச்சுருக்கம்

வெங்கடேசுவுக்கும் அவன் அம்மாவுக்கும் பெரியம்மை நோய் தொற்றுகிறது. அம்மா இறந்துவிட அவளை அடக்கம் செய்துவிடுகிறார்கள். நோய் குணமான பின் அதை அறிந்த வெங்கடேசு மனச்சோர்வுக்குள்ளாகி பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிடுகிறான். அந்த வருடம் முழுவதும் ஊரிலுள்ள எல்லா இடங்களிலும் சுற்றி அலைகிறான். பலவிதமான பறவைகளின் முட்டைகளை சேகரிக்கிறான். வேட்டைக்காரரான திருவேதி நாயக்கரின் வழியாக பல பறவைகளைப் பற்றியும் தெரிந்து கொள்கிறான்.

வெங்கடேசுவின் நண்பன் அசோக் ஊரிலிருந்து கோடை விடுமுறைக்கு வருகிறான். வெங்கடேசின் தோழனான செந்திவேலுடன் அசோக்கும் சேர்ந்து பறவைகளை தேடுகிறார்கள். அசோக்கின் அண்ணா மோகன்தாஸ் "நீ என்னை விட நெறைய விஷயங்களை தெரிஞ்சி வச்சிறுக்கையே, மேலே படிக்க வேண்டியதுதானே" என்று கேட்டதனால் படிப்பு ஆர்வம் உருவாகி அசோக்கும் மோகன்தாசும் ஊருக்கு திரும்பும்போது வெங்கடேசும் சேர்ந்து கொள்கிறான்.

விருது

1978 ஆம் ஆண்டுக்கான இலக்கியசிந்தனை விருது

விமர்சனம்

இந்நாவலில் சிறுவர்கள் பறவைமுட்டைகளை வேட்டையாடி சேகரிப்பதாக காட்டப்படுவது இயற்கையை பேணும் மனநிலைக்கு எதிரானது, இயற்கையின் சமநிலையை குலைத்து ஊடுருவும் உளநிலையை முன்வைப்பதனால் தவறான வழிகாட்டலை அளிக்கக்கூடியது என்றும் விமர்சிக்கப்படுகிறது

இலக்கிய இடம்

இயற்கையுடன் சிறுவர் உள்ளங்களை இணைக்கும் நூலாக பிஞ்சுகள் கருதப்படுகிறது. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த சிறார் எழுத்துக்களில் ஒன்றாகவும் மதிப்பிடப்படுகிறது. பேச்சுநடையிலேயே கி.ராஜநாராயணன் இதை எழுதியிருக்கிறார்.

உசாத்துணை



✅Finalised Page