standardised

தினவர்த்தமானி

From Tamil Wiki
Revision as of 23:12, 15 November 2022 by Jayashree (talk | contribs)
தமிழில் இதழியல்

1855 முதல் வெளிவந்த இதழ் தினவர்த்தமானி. இது ஒரு வார இதழ். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த இந்த இதழின் ஆசிரியராக பெர்சிவல் பாதிரியார் பணிபுரிந்தார். அவருக்குப் பின் சி.வை. தாமோதரம் பிள்ளை இதன் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து விஸ்வநாதப் பிள்ளை என்ற தமிழறிஞரின் மேற்பார்வையில் இவ்விதழ் நடைபெற்றது.

பதிப்பு, வெளியீடு

தினவர்த்தமானி ஒரு வார இதழ். 1855 முதல், வாரா வாரம் சனிக்கிழமை வெளிவந்தது. பெர்சிவல் பாதிரியார் இதன் ஆசிரியர். அவருக்குப் பின் சி.வை. தாமோதரம் பிள்ளை இதன் ஆசிரியராகப் பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து விஸ்வநாதப் பிள்ளை ஆசிரியராகப் பணிபுரிந்தார். திராவிடன் அச்சகத்தில் இவ்விதழ் அச்சிடப்பட்டது. எட்டு பக்கங்களுடன், செய்தித்தாள் வடிவில் வெளியான இவ்விதழின் ஆண்டு சந்தா, தமிழர்களுக்கு - மூன்று ரூபாய்; ஐரோப்பியர்களுக்கு - ஐந்து ரூபாய். தனிப் பிரதி விலை இரண்டனா. ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டது. இந்த இதழ் வெளிவருவதற்கு அப்போதைய பிரிட்டிஷ் அரசு ஆண்டு தோறும் இருநூறு ரூபாய் நிதி உதவி செய்தது.

உள்ளடக்கம்

ஆங்கிலேயர்கள் தமிழ் மொழி பற்றி அறிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் இந்த இதழ் பயன்பட்டது. அறிவியல் வளர்ச்சி பற்றிய செய்திகளுக்கும், இலக்கிய ஆய்வுகளுக்கும் இந்த இதழ் முக்கியத்துவம் அளித்தது. பொது அறிவுக் கட்டுரைகள், இலக்கியம் சார்ந்த கதைகள், கட்டுரைகள் இதில் வெளியாகின. இவ்விதழில் வெளியான படைப்புகள் சில தொகுக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘விநோதரச மஞ்சரி’ என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.

பங்களிப்பாளர்கள்

  • பெர்சிவல் பாதிரியார்
  • சி.வை. தாமோதரம் பிள்ளை
  • விஸ்வநாதப் பிள்ளை
  • அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்
  • சே.ப. நரசிம்மலுநாயுடு

மற்றும் பலர்

இதழ் பற்றிய செய்திகள்

இவ்விதழ் பற்றி இதன் பங்களிப்பாளர்களில் ஒருவராக இருந்த சே.ப. நரசிம்மலுநாயுடு, “குடிகளுக்கு அறிவை விருத்தியாக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் (பிரிட்டிஷ்) கவர்மென்டால் மாதம் ஒன்றுக்கு 200 ரூபாய் நன்கொடையாகக் கொடுத்துத் தினவர்த்தமானி (வாரப்பதிப்பு) என்னும் பெயரால் கனம் பெர்சிவல் அவர்களையும் ஸ்ரீ விஸ்வநாதப் பிள்ளையவர்களையும் பத்திராதிபர்களாக நியமித்துப் பதிப்பித்து வந்தார்கள். அவ்விருவருவர்களும் இறந்த பிறகு தினவர்த்தமானியும் இறந்துவிட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினவர்த்தமானி பற்றி சுதேசமித்திரன் ஆகஸ்ட் 3, 1895 இதழ், “வர்த்தமான பத்திரிகைகள் நம் சமஸ்தானத்தில் பிறந்துலாவச் செய்ய வேண்டுமெனும் கருத்தால் சர்க்கார் தினவர்த்தமானிக்கு வருஷம் இருநூறு ரூபாய் தந்து வந்தார்கள். பிறகிட்டு இங்கங்கு பத்திரிகைகள் பிறந்திட்டதினால் ஈந்து வந்ததை அம்மட்டோடு நிறுத்தினார்கள். இஷ்டர்கள் பலம் கொண்டு அது சில தினம் நடைபெற்று வந்தது.

தம் கைப்பணம் செலவிட்டு கனம் விஸ்வநாதப் பிள்ளை அவர்கள் சில காலம் நடத்தியும், இஷ்டர்கள் ஆமளவிற்கு அதன் மீது கருத்து செலுத்தாது போனதினால், அவர் அதை மெல்ல கைநழுவ விட்டார்கள். பிறகிட்டு ஒரு கம்பெனியால் இதை நடத்தியும் அவர்களாலும் மாளாது போயிற்று.” என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த இதழ் பற்றிய பிற குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை.

நிறுத்தம்

எவ்வளவு காலம் ‘தினவர்த்தமானி’ இதழ் வெளிவந்தது என்ற விவரங்கள் கிடைக்கவில்லை. பிரபல தெலுங்கு இதழியல் ஆய்வாளரான ஆருத்ராவின் குறிப்பு, 1872 வரை தினவர்த்தமானி இதழ் வெளிவந்ததாகக் கூறுகிறது.

இலக்கிய இடம்

தமிழில் செய்திகளை வெளியிட்ட முதல் இதழாக, தமிழின் முதல் செய்திப் பத்திரிகையாக தினவர்த்தமானியைக் குறிப்பிடுகிறார், வரலாற்று ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி. தொடர்ந்து வந்த பிற இதழ்களுக்கு வடிவமைப்பில், செய்திகளைத் தொகுத்துத் தருவதில், ‘தினவர்த்தமானி' இதழ், முன்னோடி இதழாக இருந்தது.  

உசாத்துணை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.