first review completed

மே 13 இனக்கலவரம் (மலேசியா)

From Tamil Wiki
Revision as of 17:28, 12 November 2022 by Jeyamohan (talk | contribs)
மே 03.jpg

13 மே இனக்கலவரம் என்பது 1969-ஆம் ஆண்டு  சிலாங்கூரின் ஒரு பகுதியாக இருந்த கோலாலம்பூரில்,  பிரதானமாக  சீனர்கள் மற்றும் மலாய்க்காரர்களுக்கு இடையில் நடைபெற்ற இனக்கலவரமாகும். இந்த இனக்கலவரத்தின் விளைவாக நாட்டில் இனங்களிடையே பொருளாதார இடைவெளியை குறைக்கும் முகமாக புதிய பொருளாதாரக் கொள்கை உருவானது.

பின்னணி

கலவரத்திற்கு காரணமாக இருந்த வெற்றி ஊர்வலம்

1950 - 1955 வரைக்குமான அறிமுகப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கான வரைவு த்திட்டம் மலாயாவின் சமூகப் பொருளாதாரக் கொள்கைகளுக்கான வழிகாட்டு நெறியைக் கொண்டிருந்தது. ஆனால் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியை எதிர்த்துப் போராட நாட்டில் நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டபோது இம்முறை நடைமுறைப்படுத்துவதில் தடை ஏற்பட்டது.

1955 - 1960-ல் உருவான முதல் மலேசியத் திட்டத்தில் இராணுவத்தையும் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதற்கே முன்னுரிமை தரப்பட்டது. கம்யூனிஸ்ட் அச்சுறுத்தலை எதிர்க்கொள்ள அரசுக்கு நிதி தேவைப்பட்டது.

1961 - 1965-ல் உருவான இரண்டாம் மலேசியத் திட்டத்தில் கிராமப்புற வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், பெருமளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தல், பொருளாதார வளர்ச்சியை விரைவு படுத்துதல் ஆகியவை முக்கியத்துவம் பெற்றன.

மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து, சபா - சரவாக் மாநிலங்கள் புதிய கூட்டமைப்பில் இணைந்த பிறகு 1966 - 1970-ல் முதல் மலேசியத் திட்டமே மீண்டும் அமுலுக்கு வந்தது. பொருளாதார  வளர்ச்சியை விரைவு படுத்தும் நோக்கில் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இரப்பர் உற்பத்தி மற்றும் ஈய உற்பத்தி ஊக்குவிக்கப்பட்டன. ஆனால் இனங்களுக்கிடையில் உள்ள வருவாய் ஏற்ற தாழ்வு குறித்து இத்திட்டம் பேசவில்லை.

1969 பொதுத்தேர்தலில்   பெடரல்/ கூட்டரசு மட்டத்தில் ஓர் நிலையற்ற அரசு உருவானது. மேலும் ஆளுங்கட்சியானது பினாங்கு மாநிலத்தில் எதிர்க்கட்சியான கெராக்கானிடம் அதிகாரம் இழந்தது. சிலாங்கூர் மாநிலத்திலும் ஆளும் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினை இழந்திருந்ததால் அங்கும் ஆட்சியை அமைப்பதில் சிக்கல் இருந்தது. சிலாங்கூரில் உள்ள எதிர்க்கட்சியினர் தங்கள் வெற்றியைக் கொண்டாட ஊர்வலம் நடத்தினர். அப்போது இரு கட்சி தொண்டர்களிடையேயான கைக்கலப்பு கலவரமாக வெடித்தது.

விளைவுகள்

மே 04.jpg

மே 13-இல் இருந்து, ஜூலை 1969 வரையில், ஆங்காங்கே நடைபெற்ற வன்முறைகளின் காரணமாக 196 பேர் உயிரிழந்தனர்.

நடவடிக்கைகள்

  • மலேசிய மன்னர் தேசிய அவசரகாலத்தை உடனடியாக நாடு முழுமைக்கும் பிரகடனம் செய்தார்.
  • நாடாளுமன்ற நடைமுறைகளை மலேசிய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தது.
  • கிழக்கு மலேசியாவில் நடைப்பெற இருந்த தேர்தல்கள் காலவரை இன்றி நிறுத்திவைக்கப்பட்டன.
  • அரசாங்க நிர்வாகத்தை தேசிய நடவடிக்கை மன்றம் எனும் தற்காலிகச் செயல்பாட்டு நிர்வாகம், 1971 வரை ஏற்று நடத்தியது.

அரசியல் மாற்றங்கள்

  • இனங்களுக்கிடையிலான பொருளாதார ஏற்ற தாழ்வு குறித்த உரையாடல்கள் தொடங்கின.
  • பெரும்பான்மை இனமான மலாய்க்காரர்களின் ஊதியம் வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளதாக கண்டறியப்பட்டது.
  • தேசிய பொருளாதார ஆலோசனை மன்றம் உருவாக்கப்பட்டது.
  • புதிய பொருளாதாரக் கொள்கை என்ற இருபதாண்டுத் திட்டம் ஒன்றை (1970 - 1990) தேசிய பொருளாதார ஆலோசனை மன்றம் உருவாக்கியது.
  • இத்திட்டத்தின் அடிப்படையில் மலாய்க்காரர்களுக்குப் பல சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன.

சர்ச்சைகள்

மே 01.jpg

நவீன மலேசியாவின் வளர்ச்சியிலும் பல அரசில் சர்ச்சைகளிலும்  மே 13 கலவரம் பற்றிய உரையாடல்களும் புதிய பொருளாதார கொள்கையின் பன்முக விளைவுகள் பற்றிய விவாதங்களும் தொடர்கின்றன. புதிய பொருளாதார கொள்கை முழுதும் பூமி புத்ராக்களுக்கு (மலாய்க்காரர்கள்) சார்பானது என்ற விமர்சனங்கள் எழுந்தன.  1990-ல் முடிவடைந்த புதிய பொருளாதார கொள்கை அதன் நோக்கத்தை எட்டவில்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆகவே தேசிய வளர்ச்சிக் கொள்கை என்ற புதிய பத்தாண்டு கொள்கை வகுக்கப்பட்டு தொடரப்பட்டது.  

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.