எஸ். நமசிவாய செட்டியார்
எஸ். நமசிவாய செட்டியார் (எஸ். நமசிவாய செட்டி; எஸ்.ஆர். நமசிவாய செட்டியார்; எஸ்.ஆர். நமசிவாய செட்டி; சை.ர. நமசிவாய செட்டியார்; எஸ்.ஆர். நமசிவாய ராஜயோகி; பண்டிட் எஸ்.ஆர். நமசிவாய ராஜயோகி) (பிறப்பு: பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி) இதழாளர், எழுத்தாளர், பதிப்பாளர், ஆயுர்வேத மருத்துவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்து வாழ்ந்த எஸ். நமசிவாய செட்டியார், அத்வைத சித்தாந்த அறிஞரும், வணிகரும், ரிப்பன் பிரஸ் உரிமையாளருமான எஸ். இரத்தின செட்டியாரின் மகன். பஞ்சார சிவயோக சுவாமிகளின் சீடர். அவரிடம் யோகம் பயின்று தீட்சை பெற்று 'எஸ்.ஆர். நமசிவாய ராஜயோகி' என்று அழைக்கப்பட்டார்.
எஸ். நமசிவாய செட்டியார், பிற்காலத்தில் திருக்கழுகுன்றத்தில் ஆயுர்வேத மருத்துவராகவும், யோக ஆசிரியராகவும் செயல்பட்டார். ராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தரின் பக்தராக இருந்தார். கிறிஸ்தவ மத எதிர்ப்பாளராகவும், கிறிஸ்தவ மத மாற்றத்தைக் கண்டிப்பவராகவும் செயல்பட்டார். மணமானவர். மகன்: சை.ந. பாலசுந்தரம், பதிப்பாளர். 'ஸ்ரீ சாது இரத்தின சற்குரு புத்தகசாலை'யின் நிறுவனர்.
இதழியல்
எஸ். நமசிவாய செட்டியார், 'விவேகசுந்தரம்', 'விவேகபோதினி' (1888 இதழ்), 'ஆரியஜன பரிபாலினி' (1889), 'கல்விக்களஞ்சியம்', 'உத்தமபோத ரஞ்சநி' உள்படப் பல்வேறு இதழ்களைத் தொடங்கி நடத்தினார். நமசிவாய செட்டியார் பத்து இதழ்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
'விவேகபோதினி' இதழ் 12 பக்கங்களில் வெளியானது. இதழின் விலை மூன்று பைசா. 1000 பிரதிகள் அச்சானது. 'கல்விக்களஞ்சியம்' இதழ் 16 பக்கங்களில் வெளியானது. இதழின் விலை ஆறு பைசா. 2000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டது. 'ஆரியஜன பரிபாலினி' மாதமிருமுறை இதழ். இதழின் விலை: மூன்று பைசா. 1000 பிரதிகள் விற்பனையானது. 'உத்தமபோத ரஞ்சநி' ஆறு பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
எஸ். நமசிவாய செட்டியாரின் நூல்கள் 1935 வரை வெளிவந்துள்ளன.
பதிப்பு
எஸ். நமசிவாய செட்டியார், தந்தையின் மறைவுக்குப் பின் ரிப்பன் பிரஸ்ஸைப் பொறுப்பேற்று நடத்தினார். சமயம், தத்துவம், புராணம், வரலாறு தொடர்பான பல்வேறு நூல்களைப் பதிப்பித்தார். 1 பைசா விலையில் பல சிறு சிறு நூல்களை, பிரசுரங்களைப் பதிப்பித்து வெளியிட்டார். 'S.R. நமசிவாய செட்டி அண்டு சன்' என்ற பெயரில் பல்வேறு புத்தகங்களைப் பதிப்பித்து புத்தக விற்பனையாளராகவும் செயல்பட்டார். தெலுங்கு நூல்கள் சிலவற்றையும் பதிப்பித்தார்.
எஸ். நமசிவாய செட்டியார், சென்னை பார்க்டவுனில், 'ஸ்ரீ ராமகிருஷ்ண நிலையம்' என்ற புத்தக விற்பனை நிலையத்தைத் தொடங்கி நடத்தினார். ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட்டார். பல்வேறு நூல்களின் பதிப்பாசிரியராகவும், தொகுப்பாசிரியராகவும் செயல்பட்டார்.
மருத்துவம்
எஸ். நமசிவாய செட்டியார், ஸ்ரீ ஸதாநந்தயோகீஸ்வரர் என்பவரிடம் மருத்துவம் பயின்றார். 'எஸ்.ஆர். நமசிவாய ராஜயோகி' என்ற பெயரில் சென்னையிலும், திருக்கழுகுன்றத்திலும் ஆயுர்வேத மருத்துவராகப் பணியாற்றினார். திருக்கழுகுன்றத்தில், 'சிவராஜயோகி ஆயுர்வேதாஸ்ரமம்' என்ற மருத்துவ ஆலோசனை நிலையத்தைத் தொடங்கி நடத்தினார். பல்வேறு மருந்துகளை விற்பனை செய்தார். மருந்துகளை விற்பனை செய்வதற்காக சென்னை பார்க்டவுனில், 'ஸ்ரீ ஸதாநந்தயோகி பார்மஸி', 'ஸ்ரீ ஸதாநந்தயோகி ஔஷதாலயம்' என்ற மருந்து விற்பனை நிலையங்களைத் தொடங்கி நடத்தினார்.
மறைவு
அவர் எப்போது காலமானார் என்ற விவரங்களை அறிய இயலவில்லை.
மதிப்பீடு
எஸ். நமசிவாய செட்டியார், சமயம், ஆன்மிகம், வரலாறு, தலபுராணம் குறித்த நூல்களை எழுதினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை, அறிவுரை கூறும் கதைகளை எழுதினார். கிறிஸ்தவ மதத்தைக் கண்டித்தும், மத மாற்றத்தை எதிர்த்தும் பல நூல்களை இயற்றினார். எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், ஜோதிடர், யோக ஆசிரியர், ஆயுர்வேத மருத்துவர் எனப் பல களங்களில் இயங்கினார். 19-ம் நூற்றாண்டின் முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.
நூல்கள்
- கொக்கோக வைபவம் என்னும் மன்மதன் திருவிளையாடல்
- கணவன் மனைவி காமகலா ரஹஸ்யம்
- தெய்வப்புலமைத் திருவள்ளுவநாயனார் திவ்வியசரித்திரம்
- ஸ்ரீநம்மாழ்வார் சரித்திரம்
- அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய பரஞ்சோதியார் என்னும் சிறுத்தொண்டநாயனார் திவ்வியசரித்திரம்
- ஸ்ரீ கிருஷ்ண லீலாம்ருத வசனம்.
- ஸ்ரீ குசேலர்
- இந்து ஜெயபேரிகை அல்லது மதுரை பண்டாரத்துக்கும் கிறிஸ்தவப் பாதிரிக்கும் நடந்த சம்பாஷணை
- சென்னப்பட்டணம் கேப் மாரிப்பட்டணமா?
- திருக்கழுக்குன்ற ஸ்தல புராண வசனம்
- திருக்கழுக்குன்ற ஸ்தல திருவடிக்கோயில் மான்மியம்
- திருக்கழுக்குன்ற ஸ்தல சங்கதீர்த்த மேளா
- பக்ஷிதீர்த்தமென வழங்கும் திருக்கழுக்குன்றத் தலபுராணச் சுருக்கம்
- ஸ்ரீகந்தப் பெருமானார் கோயில் என்னும் ஸ்ரீ முத்துக்குமார ஸ்வாமி ஆலய வைபவம்
- புருஷத்துவேஷ பூதகி கதை (இரண்டு பாகங்கள்)
- கலிகால மஹிமை
- ஆயுர்வேத ஆசான்
- சிவராஜ யோகி
- பாக்கெட் டாக்டர்
- வால்மீகி ஆனந்த ராமாயண வசனம்
- மோக்ஷசாதன இரகஸ்யம்
- ஜோதிட ஆசிரியன் வசனம்
- 215 குடும்பம் அநுபவ சிகிச்சை முறை
- சச்சிதானந்த சிவம் வசனம்
- சத்துரு சகவாசம் நித்திய சங்கடம்
- நன்மை நலந்தரும்
- பேராசை பெருநட்டம்
- அடாது செய்தோன் படாது படுவான்
- கெடுவான் கேடு நினைப்பான்
- முயற்சி திருவினையாக்கும்
- குணபூஷணி சரித்திரம்
- கடன்பட்ட கந்தன் கதை
- மனமோகன ராஜன்
- மனக்கவலை பலக்குறைச்சல்
- மாதர் நீதி
- பாதிரிமார் ஸ்கூலில் பெண்கள் படிக்கலாமா?
- சிவனுந்தேவனா என்னும் தீயநாவுக்கு ஆப்பு
- வஜ்ரடங்கம்
- ஏசு கிறிஸ்து மனிதனே
- இந்துவின் வெற்றி
- ஜனோபகாரம்
- கிறிஸ்து மத கண்டனம்
- கிறிஸ்தவர் விடைகளின் மறுப்பு
உசாத்துணை
- எஸ்.ஆர். நமசிவாய ராஜயோகி நூல்கள், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்
- சை.ர. நமசிவாய செட்டியார் நூல்கள், ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்
- விவேகசுந்தரம் இதழ், தமிழ் மின் நூலகம்
✅Finalised Page

