அசோகமித்திரன்
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
To read the article in English: Ashokamitran. Template:சிறப்புக் கட்டுரை அசோகமித்திரன் [ஜ. தியாகராஜன்] (22-9-1931 – 23-3-2017)தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். பெருநகரங்களில் வாழும் நடுத்தரப் பொருளாதாரம் கொண்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை கலையமைதியுடன் எழுதியவர். இருத்தலியல் மற்றும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மெய்யியல் ஆகியவற்றில் ஆர்வமும் தேடலும் கொண்டிருந்தார். குறைத்துச்சொல்லும் அழகியலும் வடிவ ஒருமைகொண்ட நவீனத்துவ கட்டமைப்பும் கொண்ட படைப்புகளை எழுதியவர். கேந்திர சாகித்ய அக்காதமி உள்ளிட்ட விருதுகள் பெற்றவர். கணையாழி சிற்றிதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். நவீனத்தமிழிலக்கியத்தின் நவீனத்துவ மரபின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
தனிவாழ்க்கை
அசோகமித்திரனின் முன்னோர் தாய்வழியில் மாயவரத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை வழியில் வத்தலக்குண்டு. தமிழ் நாவலாசிரியர் பி.ஆர்.ராஜம் ஐயர் மற்றும் சி.சு.செல்லப்பா ,பி.எஸ்.ராமையா ஆகியோர் அவ்வகையில் தனக்கு உறவுமுறையானவர்கள் என்று அவர் எழுதியிருக்கிறார்.
22-9-1931 ல் அன்றைய ஹைதராபாத் நைஜாம் ஆட்சியின் கீழ் இருந்த செகண்ட்ராபாதில் பிறந்தார். இவரது தாயார் பாலாம்பாள். தந்தை ஜெகதீச அய்யர், ரயில்வே ஊழியர். ஆகவே ரயில்வே ஊழியர்களுக்கான லான்ஸர் பாரக் என்னும் குடியிருப்பில் இளமையில் வாழ்ந்தார். லான்ஸர் பாரக் இவருடைய கதைகளில் முக்கியமான களமாக அமைந்துள்ளது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில் சிறிதுநாட்கள் தஞ்சாவூர் அருகே போளகம் என்னும் ஊரில் அசோகமித்திரன் இளமைப்பருவத்தை கழித்திருக்கிறார்.
1948ல் ஹைதராபாத் இந்திய யூனியனுடன் இணைய மறுத்து தனியாக நீடிக்க முயன்றது.ரஸாக்கர்கள் என்னும் மத அடிப்படைவாதிகள் கலவரம் செய்தனர். அதையொட்டி அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் நேரடி நடவடிக்கைக்கு ஆணையிட்டார். விளைவாக ஹைதராபாத் இந்திய யூனியனுடன் இணைந்தது.இந்நிகழ்வு அசோகமித்திரனின் இளமைப்பருவத்தை பெரிதும் பாதித்தது. இப்பின்னணியில் அவருடைய பதினெட்டாவது அட்சக்கோடு என்னும் நாவல் அமைந்துள்ளது.
1952 ல் அசோகமித்திரனின் தந்தை மறைந்தார். அசோகமித்திரன் தன் அன்னை மற்றும் சகோதரிகளுடன் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அவருடைய தந்தையின் நண்பரின் உதவியுடன் ஜெமினி ஸ்டுடியோவில் தயாரிப்பு உதவியாளராக பணிக்குச் சேர்ந்தார். ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசனின் உதவியாளராகவும் பணியாற்றினார். இக்காலத்தை பற்றி அவர் இலஸ்டிரேட்டட் வீக்லியில் ஆங்கிலத்தில் நினைவுக்குறிப்புகள் எழுதியிருக்கிறார். அவை My Years with Boss என்றபேரில் நூலாகின. தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அவருடைய பலகதைகள் இந்தக் களத்தைச் சேர்ந்தவை. அவருடைய சிறந்த கதையான புலிக்கலைஞன் ஓர் உதாரணம்.
ஜெமினி ஸ்டுடியோவில் அசோகமித்திரன் பதிமூன்று ஆண்டுகள் பணியாற்றினார். 1966 ல் அந்த வேலையை விட்டபின் அசோகமித்திரன் நிரந்தரமாக பெரிய வேலை எதையும் செய்யவில்லை.சமத்துவமின்மையும் அதிகார அடுக்கும் கொண்ட சினிமாத்துறையில் வேலைசெய்ய தன்னால் இயலாது என்று அவர் தெரிவித்தார். மொழியாக்கங்கள் மற்றும் சிறுவேலைகளைச் சார்ந்தே வாழ்ந்தார்.
அசோகமித்திரனுக்கு மூன்று மகன்கள்.
இலக்கிய வாழ்க்கை
ஜெமினி ஸ்டுடியோவில் பணியில் இருக்கையில்(1952-1966) ராமநரசு என்னும் நண்பர் வழியாக அவர் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்துகொண்டார். ராமநரசு எழுதி நடித்த ”வானவில்” என்னும் ஒரு நாடகத்தில் சிறு துணைப்பாத்திரம் ஏற்று நடித்தார். அந்தக் கதாபாத்திரத்தின் பெயர் அசோகமித்திரன். அதையே தன் பெயராகவும் வைத்துக்கொண்டு கதைகளை எழுதினார். 1954ல் வெளிவந்த ’ அன்பின் பரிசு’ என்ற வானொலி நாடகம் இவருடைய முதல் படைப்பு. பிரசுரமான முதல் கதை ‘நாடகத்தின் முடிவு’ .இது லூகி பிராண்டெல்லோவின் கதாசிரியரை தேடிவந்த கதாபாத்திரங்கள் என்னும் புகழ்பெற்ற நாடகத்தின் பாதிப்பு கொண்டது.
அசோகமித்திரன் கதைகளை தொடர்ந்து கவனித்து அவருடைய அழகியல்நோக்கை ஊக்குவித்தவர் எழுத்தாளர் நகுலன். அவருடைய முதல் சிறுகதை தொகுதியான ’வாழ்விலே ஒருமுறை’ ‘நான் எழுதலாம் என்ற ராமநரசுவுக்கும் நான் எழுதுகிறேன் என்ற நகுலனுக்கும்’ சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அசோகமித்திரன் ஆனந்தவிகடன், கல்கி முதலிய இதழ்களில் எழுதியிருந்தாலும் அவருடைய சிறந்த கதைகள் இலக்கிய இதழ்களிலேயே வெளியாயின. – முதல் அவர் கணையாழி இலக்கிய இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். எழுபதுகளில் அவருடைய கதைகளை குமுதம் இதழ் தொடர்ந்து வெளியிட்டது.
அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர். அவ்வனுபவங்களை அவர் ஒற்றன் என்னும் சிறுகதைத் தொகுதியிலுள்ள கதைகளில் புனைவு கலந்து பதிவுசெய்திருக்கிறார்.
அசோகமித்திரனின் முதல் சிறுகதைத் தொகுதி ‘வாழ்விலே ஒருமுறை’ நர்மதா பதிப்பக வெளியீடாக வந்தது. அதில் உள்ள பிரயாணம், ஐநூறு கோப்பைத் தட்டுகள், வாழ்விலே ஒருமுறை போன்ற கதைகள் இலக்கிய முக்கியத்துவம் பெற்றன. இத்தொகுதி க.நா.சுப்ரமணியம்,நகுலன் ஆகியோர் பாராட்டுக்கள் எழுதினர்.
அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் என்னும் இரண்டாவது தொகுதி 1974ல் வெளிவந்தது. இதன்பின்னர் வெளிவந்த விடுதலை என்னும் குறுநாவல் தொகுதியும் இலக்கிய உலகில் பாராட்டுதல்களைப் பெற்றது. இம்மூன்று தொகுதிகளிலும் செறிவான யதார்த்தவாதச் சித்தரிப்பும் அங்கதமும் உள்ளது. காலமும் ஐந்து குழந்தைகளும் என்னும் தொகுதி அவருடைய எழுத்துலகின் அடுத்தகட்ட வளர்ச்சியை காட்டுவது. இத்தொகுதியிலுள்ள கதைகளில் அசோகமித்திரன் அருவமான கதைகளையும் உருவகக் கதைகளையும் எழுதியிருக்கிறார். காலமும் ஐந்து குழந்தைகளும் அத்தகைய கதை. அதன்பின் அத்தகைய கதைகள் பல தொகுதிகளில் இடம்பெற்றன. பின்னர் அவர் மீண்டும் எளிய நேரடியான யதார்த்தவாதக் கதைகளுக்கே திரும்பிச்சென்றார்.
அசோகமித்திரனின் முதல் நாவல் பதினெட்டாவது அட்சக்கோடு ஹைதராபாத் மீது இந்திய கூட்டரசு தொடுத்த நேரடி நடவடிக்கைகளின் பின்னணியில் அமைந்தது. இரண்டாவது நாவல் கரைந்த நிழல்கள் அவருடைய திரையுலக வாழ்க்கையின் பின்னணியில் எழுதப்பட்டது.மூன்றாவது நாவலான தண்ணீர் சென்னையில் நிலவிய குடிநீர்ப்பஞ்சத்தை நிகழ்கால ஆன்மிக வறுமையின் குறியீடாக உருவகித்து எழுதப்பட்டது.
அசோகமித்திரனுக்கு சாமியார்கள், சித்தர்கள், குறிசொல்பவர்கள் ஆகியோரைப்பற்றிய ஆர்வம் உண்டு. அவர்களில் பலரை அணுகி அறிந்திருக்கிறார். ச.து.சு. யோகியார் என்னும் எழுத்தாளர் சித்தர் மறைஞானம் மற்றும் மெய்யியலில் ஆர்வம் கொண்டவர். ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய கிரா என்னும் கி.ரா.கோபாலன் என்னும் எழுத்தாளரும் வேதாந்தம் மற்றும் மறைஞானத்தில் ஆர்வம் கொண்டவர். கி.ரா பின்னர் துறவியாகி மறைந்துபோனார். இவர்கள் இருவரும் சித்தர்கள் மற்றும் மந்திரவாதிகள் சிலரை அசோகமித்திரனுக்கு அறிமுகம் செய்துவைத்தனர். மானசரோவர், ஆகாயத்தாமரை ஆகிய நாவல்களில் அசோகமித்திரன் அவ்வனுபவங்களையும் தேடல்களையும் எழுதியிருக்கிறார்.
அசோகமித்திரனின் இறுதிநாவல் இருநகரங்களுக்கு தன் வரலாற்றுத்தன்மை கொண்டது. இறுதிக்காலத்தில் அவர் தொடர்ந்து எழுதிய இளமைக்கால நினைவுகளின் நீட்சியாக அமைந்தது.
அசோகமித்திரனுக்கு இந்திய இலக்கியத்தை ஒப்பீடு செய்யும் ஆய்வுக்கு கே.கே. பிர்லா நல்கை கிடைத்தது .1973-74 இல் அயோவா பல்கலைக்கழகத்தின் படைப்பிலக்கிய நல்கையும் கிடைத்தது.இருமுறை இந்த நல்கையை அவர் பெற்றார்.
தமிழில் அமெரிக்க இலக்கியங்களை விரிவாக அறிமுகம் செய்து கட்டுரைகளை எழுதியவர் அசோகமித்திரன். தமிழ் சினிமா உலகம் பற்றியும், ஹாலிவுட் படங்கள் மற்றும் இந்திப்பாடல்கள் பற்றியும், சென்னை நகரின் வளர்ச்சிமாற்றம் பற்றியும் ஆர்வமூட்டும் வாசிப்புநடை கொண்ட குறுங்கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
அசோகமித்திரனுக்கு எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த கனவு சிற்றிதழ் சார்பாக 1991ல் அறுபதாம் அகவைநிறைவை ஒட்டி ஒரு விமர்சனமலர் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் ஜெயமோகன் ஆசிரியத்துவத்தில் இந்த மலர் வெளிவந்தது. 1996-இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது அளிக்கப்பட்டது.
மறைவு
அசோகமித்திரன் 23-3-2017 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில் 86 ஆம் அகவையில் இறந்தார்.
வாழ்க்கைப்பதிவுகள்
அசோகமித்திரன் தன் வாழ்க்கைக் குறிப்புகளை உதிரிக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். நினைவோடை, ஜெமினி நாட்கள் (இருட்டிலிருந்து வெளிச்சம்), அமானுஷ்ய நினைவுகள், எரியாத நினைவுகள், குறுக்குவெட்டுகள், நடைவெளிப்பயணம், காலக்கண்ணாடி ஆகிய நூல்களாக அவை வெளிவந்துள்ளன.
அசோகமித்திரனின் வாழ்க்கை வரலாறு சா.கந்தசாமியால் எழுதப்பட்டு ‘இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் கேந்த்ரிய சாகித்ய அக்காதமி பிரசுரத்தால் வெளியிடப்பட்டுள்ளது
அசோகமித்திரனைப் பற்றி மூன்று ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
- அம்ஷன்குமார், 2003
- சா.கந்தசாமி
- ஞாநி
ஆகியோர் இவற்றை எடுத்திருக்கிறார்கள்
இலக்கியப் பங்களிப்பு, அழகியல்
அசோகமித்திரன் நேரடியாகவும் எளிமையாகவும் எழுதியவர். தமிழில் ந.பிச்சமூர்த்தியின் செல்வாக்கு அவரிடம் உண்டு. புதுமைப்பித்தனின் செல்லம்மாள் போன்ற கதைகளின் செல்வாக்கும் உண்டு. ஆங்கிலத்தில் ஏர்னஸ்ட் ஹெமிங்வே, வில்லியம் சரோயன் ஆகியோரின் பாதிப்பு உண்டு. அவர் இளமைக்காலம் பற்றி எழுதிய கதைகளில் வில்லியம் சரோயனின் மை நேம் இஸ் அராம் கதைகளின் பாதிப்பு உண்டு [ஜெயமோகன்: இலக்கிய முன்னோடிகள் வரிசை] ஆனால் அவருடைய ஆதர்ச எழுத்தாளர் ஐசக் பாஷவிஸ் சிங்கர்.
அசோகமித்திரன் இந்து மதநம்பிக்கை கொண்டவர். அதை பதிவுசெய்திருக்கிறார். ஆனால் அவருடைய கதைகளில் அந்த நம்பிக்கை வெளிப்படவில்லை. அவை நவீனத்துவத்தின் பார்வையும் இருத்தலியல் தத்துவநோக்கும் கொண்டவையாகவே உள்ளன. [ஜெயமோகன், இலக்கிய முன்னோடிகள் வரிசை. ]
அசோகமித்திரன் மரபுசார்ந்த பார்வையை ஏற்காதவர்.மரபை நவீனப்பார்வையுடன் அணுகுவதையும் அவர் ஏற்கவில்லை. மதம், இலக்கியம் ஆகியவற்றிலுள்ள தொன்மையான மரபுகளை நவீன இலக்கியத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது என்று அவர் கருதினார். இன்னும் சிலநாட்கள், பிரயாணம் போன்ற கதைகளில் அவர் மரபை பெரும்பாலும் நம்பிக்கையின்மையுடனேயே சித்தரித்தார்.
அசோகமித்திரன் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உரைகள்மேல் ஆர்வம் கொண்டவர். விடுதலை, காலமும் ஐந்து குழந்தைகளும் போன்ற கதைகளில் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளின் செல்வாக்கு வெளிப்படுகிறது. அசோகமித்திரனிடம் காந்தி மீது ஈடுபாடு உண்டு. காந்தி என்னும் கதையில் காந்தியம் மீதான பற்றை வெளிப்படுத்துகிறார். ஆனால் காந்தி என்னும் தனிமனிதர் மீதான பற்றாகவே அது வெளிப்படுகிறது.
அசோகமித்திரன் அதிகாரம், மதம், அரசியலமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிரான தனிமனிதப்பார்வை கொண்டவர். அவருடைய கதைகள் சாமானியனின் தரப்பாக ஒலிப்பவை. தன் அன்றாட வாழ்க்கைப்போராட்டத்தில் சாமானியன் அனைவராலும் கைவிடப்பட்டு தனிமைப்படுவதையே அவருடைய கதைகள் காட்டுகின்றன. பெரும்பாலான கதைகளில் துயரும், நம்பிக்கையிழப்பும் பேசப்பட்டிருந்தாலும் விலகி நின்று உணர்ச்சியின்றி கூறும் பாவனையும் மெல்லிய நகைச்சுவையும் பகடியும் அவர் கதைகளில் உள்ளன.
அசோகமித்திரன் எதையும் வகுத்துச் சொல்வது, கொள்கைகளாகவோ கோட்பாடாகவோ ஆக்குவது ஆகியவற்றை ஏற்காதவர். எதையும் பொதுமைப்படுத்தலாகாது, அது இலக்கியத்துக்கு எதிரானது என்னும் கருத்தை பேட்டிகளில் முன்வைத்தவர். இலக்கியவிமர்சனத்தில் ஆராய்ச்சிநோக்குக்கு எதிரானவர். அவர் எழுதிய இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் எல்லாமே தனிநபர் ரசனை சார்ந்தவை மட்டுமே. சமகாலத்தின் கருத்துவிவாதங்களில் அவர் பங்கு கொண்டதில்லை.
அசோகமித்திரனின் கதைகள் நவீனத்துவ அழகியல் கொண்டவை என விமர்சகர்களால் வகைப்படுத்தப்படுகின்றன. அவை இறுக்கமான வடிவமும் குறிப்புணர்த்தும் தன்மையும் கொண்டவை. அவருடைய மொழிநடை குறைத்துச் சொல்வது, வர்ணனைகள் குறைவானது. அசோகமித்திரன் ஆரம்பகாலத்தில் எளிய தரப்படுத்தப்பட்ட மொழியிலேயே உரையாடல்களை எழுதினார். பின்னர் பொதுவான பேச்சுமொழி உரையாடல்களுக்கு பயன்படுத்தினார். வட்டார வழக்குகளைப் பயன்படுத்தவில்லை.
விவாதங்கள்
அ. ஜெயகாந்தனின் ‘ரிஷிமூலம்’ என்னும் சிறுகதை தினமணி இதழில் ஆசிரியர் சாவியால் வெட்டிச்சுருக்கப்பட்டு வெளியானதற்கு எதிராக வெங்கட் சாமிநாதன் யாத்ரா இதழில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ஜெயகாந்தன் உட்பட பலர் அதில் கருத்து தெரிவித்தனர். அசோகமித்திரன் வெங்கட் சாமிநாதனுக்கு எதிராகவும், சாவிக்கு ஆதரவாகவும் ‘அழவேண்டாம், வாயைமூடிக்கொண்டிருந்தால்போதும்’ என்று கண்டனம் எழுதினார்.
ஆ. வெங்கட் சாமிநாதன் அசோகமித்திரனின் ‘பிரயாணம்’ என்னும் கதை தழுவல் என்று குற்றம் சாட்டி ‘தித்திக்கும் திருட்டு மாங்கனிகள்’ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதினார்.
இ. தமிழ்ப்பிராமணர்கள் யூதர்களைப் போல நடத்தப்படுகிறார்கள் என்று அசோகமித்திரன் சண்டே இதழில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். அதையொட்டி தமிழகத்தில் திராவிட இயக்க ஆதரவாளர்களான எழுத்தாளர்கள் அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.
சிறுகதைகள்
அசோகமித்திரன் சிறுகதைகள் என்று இருதொகுப்புகளாக வெளியிடப்பட்ட நூலில் 1956 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு அவர் மறையும் வரை எழுதப்பட்ட 272 கதைகள் அடங்கியுள்ளன. அவற்றின் பெயர் பட்டியல் பின்வருமாறு:
- நாடகத்தின் முடிவு
- இந்த ஒரு ஞாயிற்றுகிழமை மட்டும்
- விபத்து
- டயரி
- வாழ்விலே ஒரு முறை
- மஞ்சள் கயிறு
- கோலம்
- அம்மாவுக்காக ஒரு நாள்
- மழை
- மூன்று ஜதை இருப்புப்பாதைகள்
- இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்
- ஐந்நூறு கோப்பைத் தட்டுக்கள்
- ஒரு ஞாயிற்றுக்கிழமை
- இரு நண்பர்கள்
- அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம்
- விமோசனம்
- தப்ப முடியாது
- நம்பிக்கை
- பார்வை
- வேலி
- இன்னொருவன்
- குருவிக் கூடு
- வரவேற்பு அறையில்
- ரிக்ஷா
- மறுபடியும்
- வெறி
- எல்லை
- இனி வேண்டியதில்லை
- பிரயாணம்
- திருப்பம்
- குதூகலம்
- கல்யாணம் முடிந்தவுடன்
- போட்டோ
- 'சார் ! சார் !'
- விரிந்த வயல்வெளிக்கப்பால்
- காரணம்
- காத்திருத்தல்
- காட்சி
- எலி
- கண்ணாடி
- வழி
- புலிக் கலைஞன்
- காந்தி
- கடன்
- காலமும் ஐந்து குழந்தைகளும்
- எண்கள்
- பிரத்யட்சம்
- நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது
- உண்மை வேட்கை
- போட்டியாளர்கள்
- சுந்தர்
- தொப்பி
- விண்ணப்பம்
- புண் உமிழ் குருதி
- தெளிவு
- மௌனம்
- பாதுகாப்பு
- உயிர்
- வண்டிப்பாதை
- திரை
- காய்
- கல்வி
- நானும் ஜே.ராமகிருஷ்ணராஜுவும் சேர்ந்து எடுத்த சினிமா படம்
- புதுப்பழக்கம்
- தைரியம்
- அவள் ஒருத்திதான்
- இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை
- '78'
- சுயநலம்
- கதர்
- அம்மாவைத் தேடி
- தந்தைக்காக...
- சினிமாவுக்குப் போன சென்ஸாரு
- காபி
- இவனை எப்படி ?
- பயிற்சி
- மரியாதை
- வரிசை
- தனியொருவனுக்கு
- அது
- நடனத்துக்குப் பின்
- யுகதர்மம்
- பளு
- கண்ணும் காதும்
- சேவை
- சென்ஸாரும் குடும்பப் படமும்
- விரல்
- சுண்டல்
- அபவாதம்
- பறவை வேட்டை
- பங்கஜ் மல்லிக்
- விருந்து
- பொறுப்பு
- முறைப் பெண்
- குறி
- விடிவதற்குள்
- நாளைக்கு மட்டும்
- சீருடை
- துரோகம்
- பெரியவருக்காக ஒரு காலைக்காட்சி
- உத்தரவு
- பங்கு
- மழைநாளின் போது
- விருத்தி
- நெறி
- இப்போது நேரமில்லை
- பாதாளம்
- கையெழுத்து
- அடையாளம்
- நள்ளிரவில் ஒரு புதுப்பாடம்
- அம்மாவின் பொய்கள்
- இந்த வருடமும்
- '18 - அ'
- மாற்று நாணயம்
- உத்தர ராமாயணம்
- சம்மதம்
- மயிலிறகு
- சிரிப்பு
- புதுப் பயன்
- ஒரு கிராமத்து அத்தியாயம்
- பந்தயம்
- அழகு
- ஒரு தலைமுறை முடிந்தது
- ஒரு புதிய நூற்றாண்டை நோக்கி
- கந்தசாமியை யாருக்கும் தெரியவில்லை
- அலைகள் ஓயந்து...
- விடுவிப்பு
- கணவன், மகள், மகன்
- பைசா
- அடுத்த மாதம்
- சந்தேகம்
- குற்றம் பார்க்கில்
- விடுமுறை
- கொடியேற்றம்
- பாக்கி
- பழக்கம்
- ஒரு காதல் கதை
- சேர்ந்து படித்தவர்கள்
- நானும் கிருஷ்ணப்பிள்ளையும் கோவிந்தன் நாயரும்
- ஹரிகோபாலின் கார்பன் பிரதி
- பாண்டி விளையாட்டு
- புதிர்
- ரோசம்
- இன்று நிம்மதியாக தூங்க வேண்டும்
- அப்பாவின் சிநேகிதர்
- சாயம்
- பிப்லப் சௌதுரிக்கு கடன் மனு
- முனீரின் ஸ்பானர்கள்
- சில்வியா
- இப்போது வெடித்தது
- கடிகாரம்
- ஆச்சரியங்களுக்குக் குறைவில்லை
- பூனை
- இருவருக்குப் போதும்
- அப்பாவிடம் என்ன சொல்வது ?
- மூவர்
- ஆறாம் வகுப்பு
- குழந்தைகள்
- டாக்டருக்கு மருந்து
- வசவு
- மறதி
- எல்லாமே சரி
- சங்கமம்
- பவள மாலை
- கல்யாணிக்குட்டியம்மா
- சாமியாருக்கு ஒரு மணப்பெண்
- இரு நிமிடங்கள்
- பரிட்சை
- ராஜாவுக்கு ஆபத்து
- பாலாமணி குழந்தை மண்ணைத் தின்கிறது
- மூன்று லிட்டர் மண்ணெண்ணெய்
- வீரத்துக்கு வைர விழா
- நரசிம்ம புராணம்
- ஒரு டிக்கெட் ரத்து
- யாருக்கு நன்றி தெரிவிப்பது?
- மீரா - தான்சேன் சந்திப்பு
- சிறைக் குறிப்புகள்
- புதிய பயிற்சி
- இரகசிய வேதனை
- கண்ணாடி
- சிவகாமியின் மரணம்
- குகை ஓவியங்கள்
- கோபம்
- பார்த்த ஞாபகம் இல்லாது போதல்
- இரகசியங்கள்
- திருநீலகண்டர்
- அப்பாவின் கோபம்
- நகல்
- கிணறு
- சிக்கனம்
- சகோதரர்கள்
- மணவாழ்க்கை
- அடி
- கனவு வீடு
- ஒரு ஹீரோயின் ஒரு ஹீரோ
- முழுநேர வேலை
- பிச்சிகட்டி
- வீட்டுமனை
- அழிவற்றது
- இரு முடிவுகள் உடையது!
- அவரவர் தலையெழுத்து
- பழங்கணக்கு
- முக்தி
- கண்கள்
- மிளாகய்ப்பொடி
- மூன்று நபர்கள்
- தூர எறிந்த அலாரம் கடியாரம்
- பழிக்குப் பழி
- இப்போதே தயாரித்த காப்பி!
- வாழைப்பழம்
- மணியோசை
- நல்ல கருத்துகள்
- மூன்று 'ஏ' பாட்டரி
- வீட்டில் சொல்லவில்லை
- என்றும் ஆம்பர்
- யாருக்கு மருந்து?
- அம்மாவின் தினம்
- காணமல் போன ஆறு
- மயான வைராக்கியம்
- நாய்
- உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி
- நாடக தினம்
- கடைதிறக்கும் நேரம்
- கோணல் கொம்பு எருமை மாடு
- கோல்கொண்டா
- தேள்
- யார் முதலில்
- வெள்ளை மரணங்கள்
- ஒரு சொல்
- கப்பாராவ்
- புத்தகக் கடை
- 1945ல் இப்படியெல்லாம் இருந்தது
- நிஜம்
- குடும்பப் புத்தி
- தோஸ்த்
- நாய்க்கடி
- உங்கள் வயது என்ன?
- கொடுத்த கடன்
- கோயில்
- குழந்தைகள் இறக்கும்போது...
- ஜோதிடம் பற்றி இன்னொரு கர்ண பரம்பரைக் கதை
- ஹார்மோனியம்
- நண்பனின் தந்தை
- கட்டைவண்டி
- ஒரு நண்பனைத் தேடி
- அகோரத் தபசி
- வாடிக்கை!
- இன்றும் நண்பர்கள்
- சகுனம்
- அடுத்த முறை
- வண்டு
- கண்டம்
- ஒரு நண்பன்
- தந்தி
- வைரம்
- கோட்டை
- இரண்டு விரல் தட்டச்சு
- தோல் பை
- இன்று வேண்டாத கிணறு
- முதல் குண்டுவீச்சு
- உறுப்பு அறுவடை
- ஆவிகள்
- வெளிச்சம் ஜாக்கிரதை
- பாண்டிபஜார் பீடா
- அப்பாவின் சைக்கிள்
- ரகுவின் அம்மா
- லாலாகுடாவை நோக்கி
- அந்த விநாயக சதுர்த்தி
- புகைப்படம்
- டெரன்ஸ் சிரித்தான்
- பிரிவுபசாரம்
- அத்தை
இவை தவிர அசோகமித்திரனின் கடைசி சிறுகதை தொகுப்பான 'அமானுஷ்ய நினைவுகள்' தொகுப்பில் பின்வரும் ஏழு கதைகள் இடம் பெற்றுள்ளன.
- ஒரு மாஜி இளவரசனின் கவிதை வேட்கை
- அமானுஷ்ய நினைவுகள்
- துரோகங்கள்
- நிழலும் அசலும்
- ஆட்டுக்கு வால்
- நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு கேப்டன் ஆன வரலாறு
- பாட்டு வாத்தியார் ஆழ்வார்
நாவல்கள்
- பதினெட்டாவது அட்சக்கோடு
- தண்ணீர்
- இன்று
- ஒற்றன்
- ஆகாசத்தாமரை
- மானசரோவர்
- யுத்தங்களுக்கு இடையில்
குறுநாவல்கள்
- இருவர்
- விடுதலை
- தீபம்
- விழா மாலைப் போதில்
- மணல்
கட்டுரைகள்
- அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2
- அமானுஷ்ய நினைவுகள்
- ஒரு பார்வையில் சென்னை நகரம்
- சில ஆசிரியர்கள் சில நூல்கள்
- படைப்புக்கலை
- எரியாத நினைவுகள்
- பயாஸ்கோப்
- இந்தியா 1944-48 India 1944-48
- நினைவோடை
- ஜெமினி நாட்கள் (இருட்டிலிருந்து வெளிச்சம்
- குறுக்குவெட்டுகள்
- நடைவெளிப்பயணம்
- காலக்கண்ணாடி
- 1945இல் இப்படியெல்லாம் இருந்தது
- இந்திய முதல் நாவல்கள்
- ந.பிச்சமூர்த்தி [வாழ்க்கை வரலாறு]
மொழியாக்கப் படைப்புகள்
- மலைமேல் நெருப்பு. மூலம் அனிதா தேசாய் . தமிழில் அசோகமித்திரன்
ஆங்கில படைப்புகள்
- Fourteen Years with Boss
மொழியாக்கங்கள்
ஆங்கிலம்
- Chennai City a Kaliedoscope [Tr K.S. Subramanian]
- The Eighteenth Parallel [TrASHOKAMITRAN]
- Water [Tr Lakshmi Holmstrom]
- The Ghosts of Meenambakkam [TrN. Kalyan Raman]
- Manasarovar {TrN. Kalyan Raman]
- Sand and Other Stories[Tr.Gomathi Narayanan]
- My Father's Friend [Tr Lakshmi Holmstrom]
- Mole [Tr Ashokamitran]
- Still Bleeding from the Wound [TrAshokamitran]
- Today [Ashokamitran]
- Star Crossed [Tr Ashokamitran]
- The Colours of Evil [Tr.Ashokamitran]
- The Ghosts of Meenambakkam[ [N. Kalyan Raman]
மலையாளம்
- 18 ஆவது அட்சக்கோடு ஆதான்பிரதான் திட்டப்படி இந்திய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது
- கரைந்த நிழல்கள் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
விருதுகள்
- இலக்கியசிந்தனை விருது 1977
- இலக்கியசிந்தனை விருது 1984
- லில்லி தேவசிகாமணி நினைவுப்பரிசு 1992
- இராமகிருஷ்ணா ஜெய்தயாள் அமைதி விருது டால்மியா அறக்கட்டளை 1993
- அக்ஷரா விருது, 1996.
- சாகித்திய அகாதெமி விருது 1996
- லில்லி நினைவுப் பரிசு, 1992
- சாகித்ய அக்காதமி விருது 1993
- எம்.ஜி.ஆர் விருது 2007
- என்.டி.ஆர். தேசிய இலக்கிய விருது என்.டி.ஆர். அறிவியல் அறக்கட்டளை 2012
- பாரதீய பாஷா அறக்கட்டளை விருது 2013
உசாத்துணை
https://www.youtube.com/watch?v=rLm8AyfrqIA&ab_channel=SahityaAkademi