மேனகா
மேனகா ( 1923) வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவல். தமிழின் தொடக்க கால பொதுவாசிப்புக்கான நூல்களில் ஒன்று. பெரும் வாசகர்வட்டத்தை பெற்ற இந்நாவல் தமிழில் பின்னாளில் உருவான வணிகக் கேளிக்கை எழுத்துக்களுக்கு அடித்தளம் அமைத்தது.
உருவாக்கம்
மேனகா நாவல் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் நாவல்களை வெளியிடுவதற்காகவே நடத்தப்பட்ட மனோரஞ்சிதம் என்னும் இதழில் இந்நாவல் வெளிவந்தது. இருபாகங்களாக பின்னர் நூலாகியது. ’சாம்பசிவ ஐயங்கார் மேனகா என்பவை உண்மைப்பெயர்களை மறைக்கும்பொருட்டு வைக்கப்பட்ட கற்பனைபெப்யர்கள்’ என்று வடுவூர் துரைசாமி ஐயங்கார் நாவலின் முன்னுரையில் சொல்கிறார். அவர் எழுதிய நாவல்கள் பெரும்பாலும் எல்லாமே தழுவல்கள். மேனகா என்னும் நாவலும் திலோத்தமா என்னும் ஐந்து அங்க நாடகமும் மட்டுமே அவருடைய சொந்தமான படைப்புகள் என்று அவர் சொன்னதாக க.நா.சுப்ரமணியம் அவருடைய இலக்கியச் சாதனையாளர்கள் என்னும் கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
கதைச்சுருக்கம்
மேனகா என்னும் பெண்ணின் அல்லல்களைச் சொல்லும் நாவல் இது. கணவனை பிரியநேர்ந்த மேனகா ஒரு முஸ்லீம் பெண்ணின் உதவியால் தன் கணவனை மீண்டும் அடைகிறாள்
திரைவடிவம்
மேனகா நாவலை ஒட்டி 1935 ஆம் ஆண்டு மேனகா என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது. இது தமிழில் வெளிவந்த முதலாவது சமூகத் திரைப்படம் எனப்படுகிறது. மேனகா நாவலை ஒட்டி ஔவை டி.கெ.சண்முகம் நாடகக்குழு நடத்திய மேனகா என்னும் நாடகத்தையே திரைப்படமாக ஆக்கினர். ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். என். எஸ். கிருஷ்ணன் இத்திரைப்படத்தில் அறிமுகமானார்.
உசாத்துணை
http://www.tamilvu.org/library/nationalized/pdf/45-duraisamiiyengar.vaduvur/menakapart-1.pdf