under review

திருவரங்கத்து அந்தாதி

From Tamil Wiki
Revision as of 03:44, 26 August 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

திருவரங்கத்து அந்தாதி (திருவரங்கத்தந்தாதி) (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கத்தில் உறையும், ரங்கநாதப் பெருமானைப் போற்றிப் பாடப்பட்ட நூல். இந்நூலை இயற்றியவர் அழகிய மணவாளதாசர் என்னும் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.

ஆசிரியர்

திருவரங்கத்து அந்தாதியை இயற்றியவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். அவர் இயற்றிய அஷ்ட பிரபந்தத்தில் உள்ள சிற்றிலக்கியங்களில் ஒன்று.

நூல் அமைப்பு

.திருவரங்கத்து அந்தாதி நூலில் அந்தாதி அமைப்பைக் கொண்ட நூறு பாடல்கள் இடம்பெற்றன. ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளைக் கொண்டன. ஒவ்வொரு பாடலின் முதல் சீரும் யமக அமைப்பில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நூலின் தொடக்கத்தில் தனியன் இடம்பெற்றது. தொடர்ந்த ஐந்து காப்புச் செய்யுள்களை அடுத்து நூல் இடம்பெற்றது.

உள்ளடக்கம்

திருவரங்கத்து அந்தாதி நூலில், திருவரங்கனின் பெருமை, சிறப்பு, புகழ் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. விழாக்கள், வாகனங்கள், தேர்கள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. ”அரங்கன் தாள் பற்றிச் சரணே சரண் என்று தாழ்ந்திருக்க ஊழ்வினை அகலும்” என்றும், “விழும் கூன், தசை, நீர், மலம், கோழை, வெம்பித்தம் அடங்கிய உடல் பாடையில் போய்ச்சுடும் வாழ்க்கை வேண்டேன்” என்றும் கூறி “ஆகுலம் உய்ய குன்று எடுத்தாய், தந்தை, தாய், குரு, தெய்வம் நீ அடியேன் சென்மம் தீர்த்தருளே” என்றும் பலவாறாக வேண்டப்பட்டுள்ளது.

பாடல் நடை

திருவரங் காவுறை மார்பா திசைமுகன் சேவிப்பக்கந்
திருவரங் காதரித் தின்னிசை பாடத் திருக்கண்வளர்
திருவரங் காவுன் பழவடி யேற்கருள் செய்யவெழுந்
திருவரங் காதலித் தேனுனக் கேதொண்டு செய்வதற்கே

செய்ய வளைக்குரு வின்னரு ளாற்றிருத் தாள்வணங்கிச்
செய்ய வளைக்குலஞ் சூழரங் கேசன் சிறிதமுது
செய்ய வளைக்கும் புவிக்குமங் காந்தசெவ் வாய்முகுந்தன்
செய்ய வளைக்குஞ் சிலம்பணி பாதங்கள் சேர்ந்தனமே

தருக்காவ லாவென்று புல்லரைப் பாடித்தன விலைமா
தருக்காவ லாய்மயி லேகுயி லேயென்று தாமதராய்த்
தருக்காவ லாநெறிக் கேதிரி வீர்கவி சாற்றுமின்பத்
தருக்காவ லாயுதன் பின்றோன் றரங்கர்பொற் றாளிணைக்கே

வந்தனை யேற்றனை யென்புன்சொற் கொண்டனை வன்மனத்தே
வந்தனை யேற்றனை யாவையு மாயினை வான்றரவு
வந்தனை யேற்றனைத் தானொத்த தாளில்வைப் பாய்பலித்து
வந்தனை யேற்றனைத் தீர்த்தாய ரங்கத்து மாதவனே

மாதங்கத் தானை யரங்கனை வஞ்ச னிலங்கையிலே
மாதங்கத் தானை யிருதிங்க டாழ்த்துப்பின் வாம்பரிதேர்
மாதங்கத் தானை வலத்தானை முன்வதைத் தானைத்தன்பான்
மாதங்கத் தானைவைத் தானைவைத் தேனென் மதியகத்தே

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Aug-2025, 18:45:05 IST