under review

து. இரவிக்குமார்

From Tamil Wiki
Revision as of 03:44, 21 October 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
Ravikumar.jpg

து. இரவிக்குமார் (D. Ravikumar) (பிறப்பு ஜூன் 10,1961) தமிழக அரசியல்வாதி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர், எழுத்தாளர், வழக்கறிஞர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.

பிறப்பு, கல்வி

து. இரவிக்குமார் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டம் காவிரிக்கரை கிராமமான மாங்கணாம்பட்டில் ஜூன் 10, 1961 அன்று துரைசாமி- கனகம்மாள் இணையருக்குப் பிறந்தார். எல்.எல்.பி பட்டம் பெற்று வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். முனைவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இரவிக்குமார் மணமானவர். மனைவி: செண்பகவல்லி, மகன்கள்: ஆதவன், அதீதன்.

அரசியல் வாழ்க்கை

இரவிக்குமார் 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2019-ல் மக்களவைத் தேர்தலில், விழுப்புரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு,நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

இரவிக்குமார் அரசியல், சமூகம், கல்வி, சமூகநீதி, பெண்ணுரிமை குறித்த் அக்ட்டுரைகளும் அபுனைவு நூல்களும் எழுதினார். இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.

காபிரியேல் கார்சியா மார்க்யூஸ், எட்வர்ட் செய்த், அம்பர்த்தோ எக்கோபோன்றோரின் அபுனைவுகளையும் நேர்காணல்களையும் மொழியாக்கம் செய்துள்ளார். மஹாஸ்தாதேவி, இஸ்மத் சுக்தாய், இஸபெல் ஆலண்டே போன்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை 'கட்டிலில் கிடக்கும் மரணம்' என்ற தொகுப்பில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.

இதழியல்

இரவிக்குமார் நவீன அரசியல் விவாதக்களத்தை உருவாக்கிய நிறப்பிரிகை இதழை அ. மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியவர்களோடு இணைந்து நடத்தினார்.

இரவிக்குமாரின் மணற்கேணி பதிப்பகம் மணற்கேணி ஆய்விதழ், தமிழ் போதி மாத இதழ், தலித் இரு மாத இதழ் என்று மூன்று இதழ்களையும் வெளியிட்டு வருகிறது. மணற்கேணி இரவிக்குமாரை ஆசிரியராகக்கொண்டு தமிழ்ச் செவ்வியல் இலக்கியம், தொல்லியல் முதலானவை குறித்த ஆழமான ஆய்வுகளைத் தாங்கி வெளிவரும் இருமாத இதழ்.

தலித் இலக்கியத்துக்கென தமிழில் வெளியிடப்பட்ட 'தலித்' இருமாத இதழின் ஆசிரியராக இருந்தார். தலித் இதழ் பதினொரு இதழ்கள் வெளியானபின் நின்றுபோனது.

தலித் வரலாற்றுக்கென 'தமிழ் போதி' என்ற காலாண்டிதழை உருவாக்கினார். இரண்டு இதழ்கள் வெளியாகி நின்றுபோயிருந்தது. தற்போது மீண்டும் வெளியாகத் தொடங்கியுள்ளது.

இண்டியன் எக்ஸ்பிரஸ், பயோனிர், செமினார், தி ஹிந்து, போன்ற ஆங்கில இதழ்களில் கட்டுரைகளையும், தினமணி, இந்தியாடுடே, ஜுனியர் விகடன் போன்ற இதழ்களில் பத்திகளையும் எழுதிவருகிறார். ஜூனியர் விகடன் இதழில் 400-க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இரவிக்குமார் பிபிசி (தமிழ்), தமிழ். காம் போன்றவற்றிற்குத் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் வழங்கியிருக்கிறார்.

பதிப்பியல்

இரவிக்குமார் தொடங்கிய மணற்கேணி பதிப்பகம் 150 மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டுள்ளது.

அம்பேத்கரிய சிந்தனை சார்ந்த ஆங்கில நூல்களை வெளியிடுவதற்காக 'நவயானா' என்ற சாதி மறுப்பு பதிப்பகத்தை ஆனந்துடன் இணைந்து நிறுவினார். நவயானா பதிப்பகம் அம்பேத்கரின் 'Annihilation of Caste' உள்ளிட்ட பல நூல்களை வெளியிட்டுள்ளது.

நூல்கள்

  • கண்காணிப்பின் அரசியல் (1995) விடியல் பதிப்பகம்
  • கொதிப்பு உயர்ந்து வரும் (2001) காலச்சுவடு பதிப்பகம்
  • கடக்க முடியாத நிழல் (2003) காலச்சுவடு பதிப்பகம்
  • மால்கம் எக்ஸ் (2003) காலச்சுவடு பதிப்பகம், உயிர்மை மறுபதிப்பு (2010)
  • வன்முறை ஜனநாயகம் (2004) தலித் வெளியீடு
  • சொன்னால் முடியும் (2007) விகடன் பதிப்பகம்
  • இன்றும் நமதே (2007) விகடன் பதிப்பகம்
  • தமிழராய் உணரும் தருணம் (2009) ஈழ விடுதலைப் போராட்டம் குறித்த கட்டுரைகளிந்தொகுப்பு. ஆழி பதிப்பகம்
  • துயரத்தின்மேல் படியும் துயரம் (2010) ஆழி பதிப்பகம்
  • காணமுடியாக் கனவு (2010) ஆழி பதிப்பகம்
  • சூலகம் ( 2009) பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கட்டுரைகள் உயிர்மை பதிப்பகம்
  • கற்றனைத்தூறும் (2009) கல்வி தொடர்பான கட்டுரைகள் , உயிர்மை பதிப்பகம்
  • பிறவழிப் பயணம் (2010) உயிர்மை பதிப்பகம்
  • பாப் மார்லி - இசைப் போராளி (2010) பாப் மார்லியின் வாழ்க்கை வரலாறு , உயிர்மை பதிப்பகம்
  • அண்டை அயல் உலகம் (2010) அண்டை நாடுகள் குறித்த கட்டுரைகள், உயிர்மை பதிப்பகம்
  • கடல்கொள்ளும் தமிழ்நாடு (2010) சூழலியல் கட்டுரைகள் , மணற்கேணி பதிப்பகம்
  • காற்றின் பதியம் (2010) மணற்கேணி பதிப்பகம்
  • எல்.இளையபெருமாள்- வாழ்வும் பணியும் (2010) மணற்கேணி பதிப்பகம்
  • சொல்லும் செயல் - ரவிக்குமார் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் (2010) மணற்கேணி பதிப்பகம்
கவிதை
  • அவிழும் சொற்கள் (2009) உயிர்மை பதிப்பகம்
  • மழைமரம் (2010) க்ரியா பதிப்பகம்
மொழிபெயர்ப்புகள்
  • உரையாடல் தொடர்கிறது (1995) ஃபூக்கோ, எட்வர்ட் செய்த்,அம்பர்த்தோ எக்கோ முதலான உலகச் சிந்தனையாளர்களின் நேர்காணல்களும் கட்டுரைகளும்[3]
  • எட்வர்ட் ஸெய்த், தமிழில் ரவிக்குமார், அதிகாரத்திடம் உண்மையைப் பேசுதல், மணற்கேணி பதிப்பகம், புதுச்சேரி, 2010
  • கட்டிலில் கிடக்கும் மரணம் (2002) மஹாஸ்தாதேவி, இஸ்மத் சுக்தாய், இஸபெல் ஆலண்டே போன்ற பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள்
  • வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான் (2003) காபிரியேல் கார்சியா மார்க்யூஸ், இஸபெல் அலண்டெ மற்றும் சிலரது கதைகள்
  • பணிய மறுக்கும் பண்பாடு (2003) எட்வர்ட் செய்தின் எழுத்துகள்.
  • வரலாறு என்னும் கதை (2010) - எட்வர்டோ கலியானோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள்
  • வலசைப் பறவை ( 2010) எஹுதா அமிக்கய், கவாஃபி,மாயா ஆஞ்சலூ முதலானோரின் கவிதைகள்
  • தொகுப்பு நூல்கள்
  • தலித் இலக்கியம், அரசியல், பண்பாடு (1996)
  • தலித் என்கிற தனித்துவம் (1998)
  • அயோத்திதாஸ் பண்டிதர் சிந்தனைகள் – 4 தொகுதிகள் (1999)
  • ரெட்டைமலை சீனிவாசன் ஜீவித சருக்கம் - ( தன்வரலாறு) (1999)
  • மிகைநாடும் கலை (2003) சினிமா கட்டுரைகள்
  • சுவாமி சகஜாநந்தா- மேலவையிலும் பேரவையிலும் ஆற்றிய உரைகள் , மணற்கேணி பதிப்பகம்
  • எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது (2009) ஈழ இனப்படுகொலை குறித்த கவிதைகள், மணற்கேணி பதிப்பகம்
ஆங்கில நூல்கள்
  • We, the Condemned (1999) (Against Death Penalty)
  • Venomous Touch (2009) selected articles of Ravikumar, Samya, kolkatta
  • Waking is another dream (2010) Poems on Mullivaykal, Navayana Publishing
  • Tamil Dalit Writing (2010) An anthology of Tamil Dalit Literature , Oxford University Press

உசாத்துணை




✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Oct-2025, 11:36:54 IST