under review

காமிகம்

From Tamil Wiki
Revision as of 17:57, 10 July 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected errors in article)

To read the article in English: Kamikam. ‎

காமிகம் (காமிகாகமம், காமிக ஆகமம்) இருபத்தெட்டு சைவ ஆகமங்களில் ஒன்று. சமஸ்கிருத மொழியில் கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்டது. சைவ ஆகமங்களில் தலையாயது காமிகாகமம்.

பெயர்க்காரணம்

சைவாகமங்களில் காமிகம் என்பதற்கு ’விரும்பிய பொருள்’ என்று பொருள். ஆன்மாக்கள் விரும்பிய பொருள்களை வழங்கி, அவை மலங்களில் இருந்து விடுதலை பெற உதவும் என்பதால் இப்பெயர் பெற்றது.

உள்ளடக்கம்

காமிகத்தின் கிரியா பாதம் பன்னிரெண்டாயிரம் செய்யுள்களைக் கொண்டது. இது பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பிரிவுகளாக உள்ளது. பூர்வ பாகத்தில் ஐயாயிரத்து நூற்று அறுபத்தியாறு செய்யுள்களும், உத்தர பாகத்தில் ஆறாயிரத்து நானூற்று எழுபத்தியேழு செய்யுள்களும் உள்ளன. இதில் முந்நூற்று ஐம்பத்தியேழு செய்யுள்கள் கிடைக்கவில்லை. பூர்வ பாகத்தில் எழுபத்தியைந்து பிரிவுகள் உள்ளன. இதில் அறுபது பிரிவுகள் கோயில் கட்டிடக்கலை, சிற்பங்கள் ஆகியவை பற்றியவை.

பூர்வ பாகம்
  • ஆகமங்களின் தோற்றம்
  • அன்றாடம் கடைப் பிடிக்கவேண்டிய சமய நடைமுறைகள் மற்றும் வழிபாடுகள்,
  • கோயில்கள், வீடுகள் முதலியவற்றின் அமைப்பு விதிகள்
  • விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கான விதிகளும் கிரியைகளும்
உத்தர பாகம்
  • த்வார பூஜை
  • உதஸ்வ விதி
  • பாதபூஜா விதி
  • தீக்ஷை விதி
  • பிராயசித்த விதி
  • பீட பிரதிஷ்டை
  • பாணலிங்க பிரதிஷ்டை
  • காம்யலிங்க பிரதிஷ்டை
  • ஸகல தேவதா பிரதிஷ்டைகள்
  • ரதாதி ஸ்தாபனங்கள்
  • பிரதிஷ்டை படலங்கள்
  • சகலவிதமான தானங்கள்
  • திருக்கோயில்களில் செயல்பட வேண்டிய காரியங்கள்

விவாதங்கள்

காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் சிற்பம் தொடர்பான அம்சங்கள் பிற்காலத்தில் உருவான தனித்துவமான சிற்பநூல்களான ”மயமதம்”, ”மானசாரம்” போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததாகச் சில ஆய்வாளர்கள் கருதினர். 'மயமதம்' எனும் சிற்பநூலை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்த புரூனோ டாகென்ஸ் (Bruno Dagens), அந்நூலுக்காக எழுதிய அறிமுகத்தில், காமிகாகமத்திலும் மயமதத்திலும், சொல்லுக்குச் சொல் ஒன்றுபோல அமைந்த வசனங்களும், சில சமயங்களில் முழுமையான பத்திகளும் கூடப் பொதுவாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். இரண்டில் ஏதாவதொன்று மற்ற நூலிலிருந்து பிரதி எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதினார். காமிகாகமத்தில் கட்டிடக்கலை தொடர்பான அம்சங்கள் ஒழுங்கின்றியும், ஒருங்கிணைவின்றியும் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, மயமதம் போன்ற ஒரு நூலிலிருந்து, காமிகாகமத்தில் பிற்காலத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டிருக்ககலாம் எனக் குறிப்பிட்டார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Nov-2023, 11:34:03 IST