second review completed

அஸ்திரதேவர்

From Tamil Wiki
Revision as of 05:50, 26 October 2025 by Jayashree (talk | contribs)
அஸ்திரதேவர்.webp

அஸ்திரதேவர் சிவன் கோவிலில் வழிபாட்டிலுள்ள இறைவனின் ஆயுதத்தின் பெயர். அஸ்திரதேவருக்கு என தனி வழிபாடும், ஆகம முறைகளும் உள்ளன. அஸ்திரம் ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனியே இருக்க வேண்டுமென்பது ஆகம குறிப்பு.

அஸ்திரதேவர்

அஸ்திரதேவர் சிவனின் ஆயுதமாக கருதப்படுகிறார். முப்புரம் எரித்த சிவனின் கையிலிருந்து புறப்பட்ட மூன்று அம்புகளே அஸ்திரதேவர் என்ற நம்பிக்கையும் உள்ளது, சிவனின் திரிசூலம் அஸ்திரதேவராகவும் கருதப்படுகிறது.. சிவன் கோவில் திருவிழாவில் அஸ்திரதேவருக்கு என சிறப்பு வழிபாடு நிகழும். அஸ்திரதேவர் சிவ வடிவங்களான சந்திரசேகரர், பாசுபதீஸ்வரர் இருவருடனே குறிப்பிடப்படுகிறார்.

ஆகமம்

அஸ்திரதேவருக்கான ஆகம முறைமைகள் உத்திர காமிக ஆகமத்தில் காரணலட்சணவிதி படலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. கோவில் விழாவின் ஶ்ரீபலியின் போது, அஸ்திரதேவரை அன்னம், மலர், தானயங்களால் ஆன லிங்கத்தின் மேல் ஆவாகிக்க வேண்டும். ஊர்வலத்தில் அஸ்திரதேவர் லிங்கம் சந்திரசேகரர் அல்லது பாசுபதீஸ்வரரின் படிமத்துடன் சேர்த்து எடுத்துச் செல்ல வேண்டும் என ரௌரவ ஆகமத்தின் க்ரியாபாதம் குறிப்பிடுகிறது.

கல்வெட்டு குறிப்பு

சோழர் காலத்தில் சந்திரசேகரர், பாசுபதீஸ்வரர் உடன் அஸ்திரதேவர் தொடர்புபடுத்தப்படும் குறிப்பு கும்பகோணம் அருகேயுள்ள திருபாந்துரையில் கிடைத்துள்ளது. அதில் முழுநிலவு நாளில் லிங்கத்தின் மேல் உருவாக்கப்படும் அஸ்திரதேவரை ஊர்வலம் கொண்டு செல்வது பற்றிய குறிப்பு உள்ளது.

திருவாரூர் கோவிலின் பங்குனி உத்திர தேர் திருவிழாவின் போது அஸ்திரதேவருக்கு என சிறப்பு வழிபாடு இன்றளவும் உள்ளது. சந்திரசேகரர் பட்டம் ஏற்று திக்வலம் வரும் போது நிகழும் திக்பலிகளில் அஸ்திரதேவர் இடம்பெறுவார். பிற சிவன் கோவில்களிலும் திருவிழாவின் போது அஸ்திரதேவருக்கான வழிபாடு அந்தந்த கோவிலின் வழக்கப்படி நடைபெறும்.

முறைமை

ஒவ்வொரு கோவிலிலும் அதற்கான அஸ்திரதேவரின் உற்சவபிம்பம், தேவனின் உபகரணத்ரவ்யங்கள் இருக்க வேண்டும். ஒரு கோவிலிலிருந்து மற்றொரு கோவிலுக்கு இதனை எடுத்துச் செல்லக் கூடாது.

சூலமங்கலம்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சூலமங்கலம் கிருத்திவாகேஸ்வரர் அஸ்திரதேவர் வடிவில் வழிபடப்படுகிறார். இங்கே சூலதேவர் சிவனை வேண்டி உருவம் பெற்றதாக நம்பப்படுகிறது.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.