ர.சு.நல்லபெருமாள்
ர.சு.நல்லபெருமாள் (ரவணசமுத்திரம் சுப்பையா பிள்ளை நல்லபெருமாள்) (நவம்பர் 1930 - ஏப்ரல் 20, 2011) தமிழ் நாவலாசிரியர். திருநெல்வேலியில் வாழ்ந்தவர். காந்தியக் கொள்கைகளையும் சைவசித்தாந்த நோக்கையும் கொண்டு எழுதியவர். மார்க்ஸியத்துக்கு எதிரான வலதுசாரி பொருளியல் சிந்தனைகளும் ஃப்ராய்டிய உளவியல் ஆய்வுமுறைமையும் கொண்டவர். வழக்கறிஞராகப் பணியாற்றினார். சிந்தனைகளை நேரடியாக வெளிப்படுத்தும் பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர்.
பிறப்பு, கல்வி
ர.சு.நல்லபெருமாள் திருநெல்வேலி மாவட்டத்தில் ரவணசமுத்திரத்தில் சுப்பையா பிள்ளை சிவஞானம் இணையருக்கு 1930-ல் பிறந்தார். தந்தை அஞ்சல்துறை அதிகாரியாக இருந்தமையால் பல ஊர்களில் தொடக்கக் கல்வி கற்றார். பாளையங்கோட்டை பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் பொருளாதாரத்தில் பி.ஏ.பட்டப்படிப்பையும் முடித்தார். சென்னை சட்டக்கல்லுரியில் பி.எ.படிப்பை முடித்தார்.
தனிவாழ்க்கை
ர.சு.நல்லபெருமாள் பாப்பா அம்மையாரை மணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பாலசுப்ரமணியம், வெங்கடேஸ்வரன் ஆகிய மகன்களும் சிவஞானம், அலர்மேல்மங்கை ஆகிய மகள்களும் உண்டு. அலர்மேல் மங்கை அம்மு சுப்ரமணியம், அலர்மேல்மங்கை ஆகிய பெயர்களில் எழுதி வருகிறார்.
திருநெல்வேலியில் வழக்கறிஞராக சிறிதுகாலம் பணியாற்றியபின் ர.சு.நல்லபெருமாள் எழுத்தையே முழுநேரப் பணியாகக் கொண்டிருந்தார்.
இலக்கியவாழ்க்கை
ர.சு.நல்லபெருமாள் 1945-ல் தன் 15 வயதில் எழுதிய வீண்வேதனை அவருடைய முதல் படைப்பு. கல்கி இதழில் இரு நண்பர்கள் என்னும் சிறுகதையை எழுதினார். கல்கி வெள்ளிவிழாச் சிறுகதைப்போட்டியில் அவருடைய 'கல்லுக்குள் ஈரம்’ என்னும் நாவல் பரிசுபெற்றது. ராஜாஜி அப்பரிசை வழங்கினார். அந்நாவலுக்கு தமிழக அரசின் விருதும் கிடைத்தது.
ர.சு.நல்லபெருமாள் நெல்லையை மையமாக்கி இயங்கிய இலக்கியவட்டம் ஒன்றின் இளைய உறுப்பினராகத் திகழ்ந்தார். டி.கெ. சிதம்பரநாத முதலியார் அதன் மையம். மீ.ப.சோமு, நீதிபதி மகாராஜன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் , அ.சீனிவாசராகவன் , பி.ஸ்ரீ.ஆச்சாரியா போன்ற பலர் அந்த இலக்கியவட்டத்தில் இருந்தனர். கல்கியும் சி.ராஜகோபாலாச்சாரியார்ரும் அதன் இணைப்பயணிகள்.
ர.சு.நல்லபெருமாள் கல்கி, ஆனந்த விகடன், தினமணிக் கதிர் ஆகிய இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார்.
அரசியல்
ர.சு.நல்லபெருமாள் தமிழில் திட்டவட்டமான மார்க்ஸிய எதிர்ப்பு அரசியல்நிலைபாட்டை முன்வைத்த எழுத்தாளர். தாராளவாதப் பொருளியல், தனிமனித உரிமை ஆகியவற்றை முன்வைத்தவர். போராட்டங்கள் நாவலில் இடதுசாரிக் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தூங்கும் எரிமலைகள் என்னும் நாவலில் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பார்வையை முன்வைத்தார். தொடக்கத்தில் ராஜாஜியின் செல்வாக்கால் காந்திய நம்பிக்கை கொண்டவராக இருந்தார். கல்லுக்குள் ஈரம் அந்நம்பிக்கையை முன்வைக்கும் நாவல். காந்திய வழிகளில் நம்பிக்கை இழந்த ர.சு.நல்லபெருமாள் ’மரிக்கொழுந்து மங்கை’ என்னும் நாவலில் அச்சிந்தனையை விரித்துரைத்தார்
ஆன்மிகம்
சைவசித்தாந்த ஆர்வம் கொண்டிருந்த ர.சு.நல்லபெரும்பாள் பின்னாளில் வேதாந்தத்திலும் பிரம்மஞான சங்கத்தவர் போன்றவர்கள் முன்வைத்த மறைஞானக் கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்டார். இந்திய சிந்தனையின் வரலாறு பற்றி 'சிந்தனை வகுத்தவழி’ என்னும் நூலையும் ’இந்திய சிந்தனை மரபு’ என்னும் நூலையும் எழுதியிருக்கிறார். பிரம்மரகசியம் என்னும் நூலை ஒரு நவீன உபநிஷத் போல நசிகேதஸ் அடிப்படை வினாக்களை கேட்டு ஞானிகளிடமிருந்து பதில் பெற்றுக்கொள்வதுபோல எழுதியிருந்தார்.
இலக்கிய இடம்
ர.சு.நல்லபெருமாளின் நாவல்கள் அனைத்துமே அடிப்படையில் சில சிந்தனைகளை முன்வைத்து அவற்றுக்கான தர்க்கங்களை கதைமாந்தர் மற்றும் நிகழ்வுகள் வழியாக விரித்துரைப்பவை. இயல்பான உணர்வுநிலைகளும் நிகழ்வுகளும் அவற்றில் இருப்பதில்லை. ஆகவே அவற்றை இலக்கிய விமர்சகர்கள் கலைப்படைப்புகளாக கருதுவதில்லை. அவருடைய நாவல்களில் கல்லுக்குள் ஈரம் மட்டுமே இலக்கியத்திற்கான உணர்வுநிலைகளும் படிமத்தன்மையும் கொண்டது.
"நல்லபெருமாள் இலக்கியம் என்பது கருத்துப்பிரச்சாரத்திற்கும் உணர்ச்சிவசப்படாத புறவயமான ஆய்வுக்கும் உரிய ஒரு மொழிக்களம் என நினைத்தவர். பெரும்பாலான படைப்புகளை தர்க்கத்தன்மையுடன் புறவயமான அணுகுமுறையுடன் எழுதியிருக்கிறார். எதையும் கொந்தளிப்புடன் அணுகும் ஒரு சமூகத்தில் அவ்வகையான அணுகுமுறை பல புதிய வாசல்களை திறக்கக்கூடியதாக அமைந்தது’ என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்[1].
மறைவு
ர.சு.நல்லபெருமாள் ஏப்ரல் 20, 2011 அன்று காலமானார்.
விருதுகள்
- கல்கி வெள்ளிவிழா - 2-ஆம் பரிசு - கல்லுக்குள் ஈரம் - 7500 பரிசும்
- தமிழக அரசின் பரிசு - 1972- சிந்தனை வகுத்த வழி.
- தமிழக அரசின் பரிசு - 1982 - பிரும்ம ரகசியம்.
- ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது - 1990 - உணர்வுகள் உறங்குவதில்லை
- கோவை கஸ்தூரி சீனிவாசன் இலக்கிய அறக்கட்டளையின் பரிசு - நம்பிக்கைகள்
நூல்கள்
நாவல்கள்
- கல்லுக்குள் ஈரம் (1966)
- கேட்டதெல்லாம் போதும் (1971)
- குருஷேத்திரம் (போராட்டங்கள்) (1972 )
- எண்ணங்கள் மாறலாம் (1976)
- மாயமான்கள் (திருடர்கள்) (1976)
- நம்பிக்கைகள் (1981)
- தூங்கும் எரிமலைகள் (1985)
- மருக்கொழுந்து மங்கை (1985)
- மயக்கங்கள்(1990)
சிறுகதைகள்
- சங்கராபரணம் - சிறுகதைத் தொகுதி (1962)
- இதயம் ஆயிரம் விதம் - சிறுகதைத் தொகுதி (1970)
பொது
- இந்திய சிந்தனை மரபு
- சிந்தனை வகுத்த வழி
- பிரும்ம இரகசியம்
- பாரதம் வளர்ந்த கதை
உசாத்துணை
- https://rengasubramani.blogspot.com/2021/05/blog-post_19.html
- https://www.jeyamohan.in/16710/
- https://www.hindutamil.in/news/literature/174794-.html
இணைப்பு
✅Finalised Page