பைரவர்

From Tamil Wiki

பைரவர் : இந்து சைவ மதத்தில் உள்ள துணைத்தெய்வங்களில் ஒன்று. சிவனின் ஒரு வடிவம் பைரவரின் வாகனம் நாய். காசி பைரவருக்குரிய நகரம் எனப்படுகிறது. சைவ ஆலயங்களில் பைரவருக்கு தனி சன்னிதி இருப்பது வழக்கம். பைரவரின் தோற்றங்களில் காலபைரவர் காஷ்மீரி சைவ மரபில் மையப்பெருந்தெய்வமாக வணங்கப்படுகிறார். பௌத்த மரபிலும் காலபைரவர் துணைத்தெய்வங்களில் ஒன்றாக வணங்கப்படுகிறார்.

சொற்பொருள்

பைரவர் என்னும் சம்ஸ்கிருதச் சொல்லுக்கு அச்சமூட்டுபவர் என்று பொருள். ஃபீரு என்னும் வேர்ச்சொல்லில் இருந்து எழுந்த சொல். பயத்தை அழிப்பவர் என்னும் பொருளும் கொள்ளப்படுவதுண்டு. கையில் கோல் வைத்திருப்பதனால் தண்டபாணி என்றும் பைரவர் அழைக்கப்படுகிறார்.நாய் இவருடைய வாகனம் என்பதனால் ஸ்வாஸ்வர் (ஸ்வா -நாய், அஸ்வ -ஆரோகணித்தல்) என்றும் அழைக்கப்படுகிறார். காஷ்மீரி சைவத்தில் ஃப என்பது ஆக்கம், ர என்பது நிலைபேறு, வ என்பது அழிவு என எடுத்துக்கொண்டு முத்தொழில்புரிபவர் என பொருள்கொள்கிறார்கள்.

தொன்மம்

பிரம்மன் படைப்பாணவத்தால் சிவனை சிறுமைசெய்தபோது சிவன் சினம் கொண்டு மூன்றாம்விழி திறக்க அந்த அனலில் இருந்து பைரவர் தோன்றினார் (லிங்கபுராணம் 1-96) சிவனின் ஒரு சடைமயிர்க்கற்றையில் இருந்து பிறந்தவர் என்கிறது சிவபுராணம்.

பைரவன் பிறந்ததுமே பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்தான். ஆகவே பைரவனுக்கு பிரம்மஹத்தி பாவம் அமைந்தது. பிரம்மஹத்தி ஒரு பெண்ணாக பைரவனை தொடர்ந்து வந்தது. கையில் பிரிக்கமுடியாதபடி ஒட்டிக்கொண்ட பிரம்மனின் தலையுடன் பாவத்தை போக்க அலைந்த பைரவன் காசியை அடைந்து அங்கே கங்கையில் நீராடியபோது பாவம் மறைந்து பிரம்மனின் தலை பிரிந்து விழுந்தது. அந்த இடம் கபாலமோசன தீர்த்தம் என்று ஆகியது. காசியில் பைரவன் கோயில் கொண்டான் (சிவபுராணம், குருருத்ர சம்ஹிதை)

சிலமரபுகளில் பைரவர் சிவனே என்று கருதப்படுகிறார். தாருகாசுரனை கொன்றபின் காளியின் எஞ்சிய சீற்றம் ஒரு குழந்தை ஆகியது, அதுவே பைரவன். பைரவனையும் காளியையும் சிவன் தன் உடலென ஆக்கிக்கொண்டார். ஆகவே அவர்கள் சிவனின் தோற்றங்களே.

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து காலபைரவர் உட்பட எட்டு பைரவர்கள் தோன்றினார்கள் என்றும் அவர்கள் எட்டு மாதாக்களை மணந்து அறுபத்துநான்கு பைரவர்களாகவும் அறுபத்துநான்கு யோகினிகளாகவும் ஆனார்கள் என்றும் தொன்மம் உள்ளது

ஆலய மரபு

பைரவர்கள் சிவன் கோயில்களில் வடக்கு திசையில் மேற்குநோக்கி திரும்பிய படி தனியாக நிறுவப்பட்டிருப்பார்கள். கோயில்பாதுகாவலர் (க்ஷேத்ரபாலர்) என அழைக்கப்படுவார்கள். பல இடங்களில் நான்கு கைகளுடனும் பின்பக்கம் நாய் சிற்பத்துடனும் செதுக்கப்பட்டிருக்கும். காஷ்மீரி சைவ மரபில் பைரவர் தத்புருஷ சிவம் என வழிபடப்படுகிறார்.

வழிபாடு

சிவன் ஆலயங்களில் சூரியபூஜையில் அன்றாட வழிபாடுகள் தொடங்கி பைரவபூஜையில் முடியும். பைரவருக்கு [பூஜைசெய்ய வெள்ளிக்கிழமை நள்ளிரவு உகந்தது என்று கூறப்படுகிறது. சிவப்பு, நீலநிறமான மலர்கள் பூஜைக்கு உகந்தவை.

சுவர்ணாகர்ஷண பைரவர்

மையத் தொன்ம மரபில் இல்லாத ஒருவடிவம் சுவர்ணாகர்ஷ்ண பைரவர்.நீலம் அல்லது சிவப்பு நிறத்தில் பொன்னிற உடை அணிந்து நிலா சூடிய தோற்றத்தில் நான்கு கைகளுடன் தோன்றும் இந்த பைரவர் ஒருகையில் ஒரு தங்கப்பாத்திரம் வைத்திருப்பார். செவ்வாய்க்கிழமைகளில் இந்த பைரவரை பூஜைசெய்தால் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது.

காலபைரவர்

பெரும்பாலான ஆலயங்களில் காலபைரவர்தான் நிறுவப்பட்டிருக்கிறார். சிவனின் பேரழிவை உருவாக்கும் தோற்றம் இது எனப்படுகிறது. காலத்தின் வடிவம் என்றும் சொல்லப்படுகிறது. சில நூல்களில் மகாபைரவர் என்று சிவன் குறிப்பிடப்படுவதுண்டு.

Trika System[edit]

Trika and Kashmiri Shaivism names the Absolute Reality (Para Brahman) as Bhairava. The Vijñāna Bhairava Tantra is a key Tantra text of the Trika System. Cast as a discourse between the god Bhairava and his consort Bhairavi it briefly presents 112 Tantric meditation methods or centering techniques (Dharana). The text is a chapter from the Rudrayamala Tantra, a Bhairava Agama. Bhairavi, the goddess, asks Bhairava to reveal the essence of the way to realization of the highest reality. In his answer Bhairava describes 112 ways to enter into the universal and transcendental state of consciousness. References to it appear throughout the literature of Trika, Kashmir Shaivism, indicating that it was considered to be an important text in the schools of Kashmir Shaiva philosophy and Trika.

பைரவனின் வம்சம்

காசியின் அரசனாகிய விஜயன் பைரவனின் வம்சத்தில் வந்தவன் என்று காலிகபுராணம் குறிப்பிடுகிறது. அவன் காண்டவீநகரை அழித்து அங்கே காண்டவ வனம் என்னும் சோலையை உருவாக்கினான் என்கிறது.

பைரவனின் முற்பிறப்பு

காலிகபுராணத்தின்படி பைரவன் முற்பிறப்பில் சிவகணமாகிய மகாகாலன் என்னும் வடிவில் இருந்தார். வேதாளம் பிருங்கி என்னும் பெண் தெய்வமாக இருந்தது. பார்வதியின் சாபம் மூலம் இவர்கள் மறுபிறப்பு கொண்டனர்.

எட்டு பைரவர்கள்

அஸிதாங்கன், ருரு, சண்டன், குரோதன், உன்மத்தன், கபாலி, பீஷணன், சம்ஹாரன் அல்லது காலன் என எட்டு பைரவர்கள் உள்ளனர் என காலிகபுராணம் கூறுகிறது

தோற்றம்

பன்னிரு கைகளும், சடாமகுடத்தில் பிறையும் கொண்டவர் பைரவர். அங்குசம், வாள், அம்பு, கட்டாரி, வில், திரிசூலம், கட்கம், பாசம் ஆகியவையும் ஆயுதங்கள். யானைத்தோல் அணிந்த தோற்றங்களுண்டு. ஐந்து முகங்கள் சில சிலைகளில் உள்ளன. நாகங்களை ஆபரணங்களாக அணிந்த தோற்றம் (அக்னிபுராணம்) பைரவருக்கு நாய் வாகனம். வேதாளமும் பிற பூதகணங்களும் சில இடங்களில் உடனுள்ளன

உசாத்துணை

புராணக் கலைக்களஞ்சியம் வெட்டம் மாணி