கோடிவனமுடையாள் பெருவழி

From Tamil Wiki

கோடிவனமுடையாள் பெருவழி ( ) தஞ்சையை திருவையாறு வழியாக பிற ஊர்களுடன் இணைத்த சோழர்காலத்துப் பெருவழி. கோடிவனமுடையாள் கோயிலை ஒட்டிச்சென்றமையால் இப்பெயர் பெற்றது.

கல்வெட்டு

பெருவழிகள் என்பவை பழந்தமிழகத்தில் பெரியநகரங்களையும் வணிக மையங்களையும் இணைத்த நீண்ட சாலைகள்.

பாண்டிய மன்னன் ஸ்ரீ வல்லபனின் முப்பத்தைந்தாம் ஆண்டு சாசனமாகிய ’திரிபுவன சக்கரவர்த்திகள் கோனேரின்மை கொண்டான்’ எனத் தொடங்கும் கல்வெட்டொன்று தஞ்சாவூரில் உள்ளது. சாமந்த நாராயண விண்ணகரத்து எம்பெருமானுக்கும், சதுர்வேதி 106 பட்டர்களுக்கு தொண்டைமானார் என்பவர் அளித்த நிலக் கொடை பற்றிய குறிப்பில் ‘கோடிவனமுடையாள் பெருவழி’ பற்றிய விவரணை வருகிறது. தற்போதுள்ள கருந்திட்டைக்குடி என்ற ஊரின் நடுவே செல்லும் பெருவழியாக அக்கல்வெட்டு குறிப்பிடுகின்றது. தஞ்சை கோவிலின் வடக்கு வாசலிலிருந்து தொடங்கி வடவாற்றைத் தாண்டி, கண்டியூர், திருவையாறு வழியாக செல்லும் நெடுவழி தான் கோடிவனமுடையாள் பெருவழி. தற்போது வெண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள்ள கோடிவனமுடையாள் திருக்கோவிலை ஒட்டிச் சென்றதால் இப்பெயர் பெற்றது.

உசாத்துணை

நூல்கள்
  • தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம் பதிப்பகம்
  • கல்வெட்டுக் கலை, பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், என்.சி.பி.ஹெச்.
சுட்டிகள்

சோழநாட்டின் பட்டினப்பெருவழி எது? தேமொழி